22 ஆகஸ்ட் 2011

நாவாந்துறையிலும் மர்ம மனிதன்!மக்களின் தாக்குதலில் பொலிஸ் வாகனம் சேதம்.

நாவாந்துறை மற்றும் வதிரியில் இன்று திங்கட்கிழமை இரவு பெண்கள் தனித்து வசித்து வரும் வீட்டினுள் நுழைய முற்பட்ட இனந்தெரியாத நபர்களால் யாழ்ப்பாணத்தில் யாழ் நாவாந்துறை மற்றும் வதிரியில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வதிரி மற்றும் நாவாந்துறையில் உள்ள பெண்கள் தனித்து வசிக்கும் வீடுகளுக்கு இனந்தெரியாத நபர்கள் உள்நுழைந்திருக்கின்றனர். வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறிச் கூக்குரல் இடவே உசாரடைந்த அயலவர்கள் குறித்த வீட்டை நோக்கிச் சென்ற போது உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு தப்பியோடிச் சென்றுள்ளனர்.
நாவாந்துறையில்
நாவாந்துறை இராணுவ முகாமிற்கு சென்ற பொதுமக்கள் முகாமிற்குள் தப்பியோடிச் சென்ற குறித்த நபரைநபரை தங்களிடன் ஒப்படைக்கும்படி கேட்டிருக்கின்றனர். அதற்கு மறுத்த இராணுவத்துடன் பொதுமக்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொது இராணுவ முகாமை நோக்கி பெருமளவிளான மக்கள் குவிந்துள்ளனர். குறித்த விடயம் பொலிசாருக்கு இராணுவத்தால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த பொலிசாரிடம், பொதுமக்கள் குறிதத் மர்ம நபரை ஓப்படைக்கும்படி கேட்டுள்ளனர். அது பற்றிக் கருத்தில் கொள்ளாத பொலிசார் அவ்விடத்திலிருந்து பொது மக்களை வெளியேறும் படி கேட்டுள்ளனர். அதற்கு மறுத்த பொதுமக்கள் பொலிசாருடன் முரண்பட,இராணுவத்தால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதில் பொதுமகன் ஒருவர் காயமடைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஒருவர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலிசாரின் இரு வாகனங்களை அடித்து நெருக்கினர்.தற்பொழுதும் பெருமளவான மக்கள் அப்பிரதேசத்தில் கூடி நிற்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வதிரியில்
இதேவேளை, வதிரியிலும் பெண்கள் தனித்து வசிக்கும் வீடு ஒன்றினுள் இனந்தெரியாத நபர் நுழைய முற்பட்டபோது, வீட்டில் இருந்தவர்கள் கூச்சல் இட்டுக் கத்தியதால் அங்கிருந்து தப்பியோடிய மர்ம நபர் அருகிலிருந்த இராணுவ முகாமிற்கு சென்றதை மக்கள் அவதானித்துள்ளனர். இதனால் அங்கு கூடிய பொது மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, மக்கள் இராணுவ முகாமிற்கு நுழைய முற்பட்டதையிட்டு இராணும் சுட்டதில் பொது மகன் ஒருவர் காயமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக