வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடம்பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லுமாறு கூறியுள்ள அரசாங்கம், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை நிறுத்தி, தங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த முன்னூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த முகாம்களில் பன்னிரண்டு வருடங்களாக வசித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குடும்பங்களில் ஒரு பகுதியினர், தொண்ணூறுகளில் இடம்பெயர்ந்து, இ;ந்தியாவில் தஞ்சமடைந்திருந்து பின்னர் நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய குடும்பங்கள், கடந்த 1996 ஆம் ஆண்டு, அப்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வன்னிப்பிரதேசத்தில் அரசாங்கம் நடத்திய இராணுவ தாக்குதல்களில் இருந்து விலகியிருப்பதற்காக வவுனியாவில் அரசாங்கம் அமைத்திருந்த இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால், இங்குள்ளவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு உடனடியாகச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆயினும், இ;ந்தக் குடும்பங்களுக்குச் சொந்தமாகக் காணிகள் இல்லாத காரணத்தினால் தம்மை வவுனியா மாவட்டத்தில் வேறிடத்தில் காணிகள் வழங்கி குடியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த முகாம்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், அப்போது வன்னிப்பிரதேசத்தில் யுத்த மோதல்கள் இடம்பெற்றமையினால், அங்கு திரும்பிச் செல்ல முடியாதிருந்த காரணத்தினால், வவனியாவில் பல இடங்களில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். இதேபோன்று தங்களையும் வவுனியாவில் குடியேற்ற வேண்டும் என இந்தக் குடும்பங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
ஆயினும் யுத்தம் முழுமையாக முடிவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதனால், அந்தந்த மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் எனவும், அவ்வாறு திரும்பிச்செல்வதற்குச் சொந்தக் காணிகள் இல்லாதவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் காணிகள் வழங்கி மீள்குடியேற்றம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
ஆயினும் இந்த நடவடிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், தமக்குரிய அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம், கழிப்பறை வசதிகளை அரசாங்கம் நிறுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அத்துடன் தமது மீள்குடியேற்றத்திற்குரிய நடவடிக்கைகளை சீரான முறையில் மேற்கொண்டு தமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக