தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தமூவரின் கருணை மனுவையும் சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இதுதொடர்பான கடிதம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியது. அதில் மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கூறியிருந்தது.
இதையடுத்து வேலூர் சிறை மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9ம் தேதி நாள் குறித்துள்ளது. மூவரையும் காக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் போராட்ங்கள் வலுத்துள்ளன. இந்த நிலையில், மூன்று பேரும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் வக்கீல் சந்திரசேகர் மனுக்களை தாக்கல் செய்தார்.
அதில், எங்களது கருணை மனுக்களைப் பரிசீலித்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை நிராகரித்துள்ளனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் எங்களது கருணை மனுவை நிராகரித்துள்ளார்.
11 ஆண்டுகளுக்குப் பின்னர் எங்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்காக மூன்று பேரிடமும் தனித் தனியாக பிரமாணப் பத்திரத்தில் நேற்று சிறைக்குச் சென்று வக்கீல்கள் கையெழுத்து வாங்கினர்.
மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவும், ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி இன்னொரு மனுவும் என இரண்டு மனுக்கள் மூன்று பேரின் சார்பிலும் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருகிற புதன்கிழமை ரம்ஜான் வருகிறது, வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி வருகிறது. எனவே அதற்குள் அதாவது நாளைக்குள் தடை உத்தரவைப் பெற வக்கீல்கள் தீவிரமாக உள்ளனர்.
இதற்காக வக்கீல் சந்திரசேகர் இன்று நீதிபதி பால் வசந்தகுமாரை சந்தித்து அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதாலும், வழக்கின் முக்கியத்துவம், அவசரம் கருதியும், நாளையே மனுக்களை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதை ஏற்ற நீதிபதி பால் வசந்தகுமார், நாளைய மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படும் என்று தெரிவித்தார்.
மூவர் சார்பிலும் பிரபல வக்கீல் ராம்ஜேத்மலானி ஆஜராவார் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது அவருடன் கூடுதலாக ஹரீஷ் சால்வேயும் ஆஜராகவுள்ளார். இதனால் வழக்குக்குப் பலம் சேர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும் சில பிரபல வக்கீல்களும் ஆஜராகவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக