03 ஆகஸ்ட் 2011

இன அழிப்பு மேற்கொண்ட பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயம் என்கிறது சிங்கள படை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, ஆனந்தபுரம், அம்பலவன் பொற்கணை, புதுக்குடியிருப்பின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படமாட்டாது, என தெரிவிக்கப்பட்டு, இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் பேரை, முல்லைத்தீவு மாவட்டத்தின் கோம்பாவில் பகுதியில் குடியேற்றுவதற்கு இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையைக் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபணை தெரிவித்துள்ளார்.
கோம்பாவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, ஆனந்தபுரம், பொக்கணை, புதுக்குடியிருப்பின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்று பொய்யான காரணத்தைக் கூறுகின்ற இராணுவத்தினர் அந்தப் பிரதேசங்களைச் சொந்த இடமாகக் கொண்ட மக்களை அங்கு செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
அதே வேளை, இறுதி யுத்தம் நடைபெற்ற இந்தப் பகுதிகளை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு கண்ணுக்கும் கருத்தக்கும் விருந்தளிக்கின்ற சுற்றுலா பிரதேசமாக்கி, அவர்களை நாள்தோறும் பெரும் எண்ணிக்கையில் அங்கு சென்று பார்த்து வருவதற்கு அனுமதித்திருக்கின்றார்கள்.
இந்த 6 கிராம சேவகர் பிரிவுகளையும் இராணுவம் தனது தேவைக்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டு, அது அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற காரணத்தி;னால், அந்தப் பிரதேசம் மீள்குடியேற்றத்திற்குப் பொருத்தமற்றது என அறிவித்திருந்தது.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நடத்தி வருகின்ற நேரடி பேச்சுவார்த்தைகளின்போது நாங்கள் எடுத்துக் கூறி, அதற்கான ஆவணங்களையும் வழங்கியிருந்தோம். ஆயினும் அந்தப் பகுதிகளில் இன்னும் கண்ணி வெடி அகற்றப்பட்டு சிவிலியன்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியிருப்பதாகவே அரசாங்கம் கூறியதுடன், இதுபற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தது.
ஆனால் அரசாங்கத்தின் இந்தக் கூற்றிற்கு மாறாக அந்த 6 கிராம சேவகர் பிரிவுகளையும் சேர்ந்த 20 ஆயிரம் பேரையும் கோம்பாவில் பகுதியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை இராணுவம் இரகசியமாக மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக 260 ஏக்கர் காணியில் காடுகள் அழிக்கப்பட்டு நிலம் துப்பரவு செய்யப்பட்டிருக்கின்றது.
இங்கு குடும்பம் ஒன்றிற்கு அரை ஏக்கர் காணி வீதம் வழங்குவதற்கும் வசிப்பதற்குரிய வீடு, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால் மனிக்பாம் முகாமிலும். உறவினர் நண்பர்களது வீடுகளிலும் வசித்து வருகின்ற மாத்தளன், முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம், பொக்கணை, புதுக்குடியிருப்பின் ஒரு பகுதி ஆகிய கடல் வளமும், விவசாய வளமும் மிக்க பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தாங்கள் தமது பூர்வீகப் பிரதேசமாகிய தமது சொந்தக் கிராமங்களுக்கே செல்ல வேண்டும் என கோரியிருக்கின்றார்கள்.
வேறு இடங்களில் தம்மைக் குடியேற்றுவதை இந்த மக்கள் விரும்பவில்லை. தமது கிராமங்களில் தமக்கென காணிகள் சொத்துக்கள் இருப்பதாகவும், அத்துடன் தமது வாழ்பாதாரத்திற்குத் தேவையான வசதிகளும் அங்கு இருப்பதனால், பரம்பரை பரம்பரையாகத் தாங்கள் வசித்து வந்த அந்தப் பகுதியில் சென்று மீள்குடியேறுவதற்கே தாங்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கோம்பாவில் பகுதியில் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தை அழித்தே காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கு குடியேற்றப்பட்டால் அந்த மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு எந்த வழியும் கிடையாது. வசதிகளும் இல்லை. அத்துடன் அவர்களுக்கென சொந்த கிராமங்கள் காணிகள் இருக்கும்போது வேறிடத்தில் அவர்களைக் குடியேற்றுவதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கையை எந்த வகையில் நியாயமானது?
எனவே, இந்த முயற்சியை இராணுவம் கைவிட வேண்டும். அதேவேளை முல்லைத்தீவு மக்கள் தமது பூர்வீக சொந்தக் கிராமங்களில் உடனடியாக மீள்குடியேறுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய வேண்டும் என நாங்கள் கோரியிருக்கின்றோம் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக