07 நவம்பர் 2010

வெலிக்கடைக் கைதிகள் போலீசார் மீது தாக்குதல்: 50 போலீசார் காயம்!

இன்று அதிகாலையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தேடுதல் மேற்கொள்ளச் சென்ற போலீசார் மீது அங்கிருந்த கைதிகள் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் குறைந்தது 50 போலீசாருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. 46 போலீஸ் அதிகாரிகளும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வேறுபட்ட காயங்களுக்குச் சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.
தலை, மார்பு மற்றும் வயிறு என பல இடங்களிலும் பல போலீசாருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இக்காயங்களின் ஆபத்துத்தன்மையைக் கண்டறிவதற்கான பல்வேறு சோதனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆனால் இத்தாக்குதல் சம்பவத்தின்போது எதுவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஹெக்ரர் வீரசிங்க தெரிவித்தார்.
இன்றைய தேடுதலுக்காக கிட்டத்தட்ட 4000 சிறைக்கைதிகளை அவர்களின் அறைகளில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர் போலீசார். போதை மருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்தே கிட்டத்தட்ட 500 போலீசாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் இத்தேடுதலை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இதைப் பொறுக்காத கைதிகள் போலீசைத் தாக்கியதில் கலவரம் ஏற்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக