29 நவம்பர் 2010

அமெரிக்க சட்டங்களை உருத்திரகுமாரன் மீறவில்லை.

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள உருத்திரகுமாரன் அமெரிக்க சட்டங்களை மீறிச் செயற்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிக்கா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ இராச்சியம் குறித்த ருத்ரகுமாரனின் நடவடிக்கைகள் தமது நாட்டு சட்டங்களை மீறும் வகையில் அமையப் பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வாழும் மக்கள் வேறும் நாட்டு அரசாங்கங்களையோ அல்லது அமெரிக்க அரசாங்கத்தையோ விமர்சனம் செய்வதனை தடுக்க முடியாது எனவும், கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமது நாட்டு அரசியல் சாசனம் அமையப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை உத்தரவில் மாற்றங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசியப் பாதுகாப்பு மற்றும் அரசியல் சாசன சட்டம் ஆகியன தொடர்பில் அமெரிக்க மிகவும் சமநிலையான கொள்கைகளை பின்பற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
1997ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைப் போன்றே அமெரிக்காவிலும் தேசியப் பாதுகாப்பு காரணிகளுக்கும், அரசியல் சாசனத்திற்கும் சமநிலையான முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒர் அரசாங்கத்திற்கு எதிராக பயங்கரவாத அமைப்பொன்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு வெளிநாடுகள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என இலங்கை கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக