மகிந்த ராஜபக்ச சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இவர்கள் இருவரும் எவ்வித உதவியாளர்களும் இன்றி அரை மணித்தியாலத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாகவும், இப் பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமானதாக அமைந்ததாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இச் சந்திப்புத் தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்தோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தரப்பிலிருந்தோ இதுவரை செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை.இந்நிலையில் இச் சந்திப்புக் குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாவது,
மகிந்த ராஜபக்சவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனும் சுமார் அரைமணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த இரகசிய ஆலோசனைகளில் கலந்து கொள்வதற்காக ஜி.எல்.பீரிஸும் அழைக்கப்பட்டுள்ளார். இப்பேச்சுவார்த்தையின்போது முக்கிய விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்குமிடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதுடன் இதன் அடிப்படையில் அதிகாரபூர்வமான முறையில் விரைவில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
அதேவேளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆயினும் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி தனது இரண்டாவது பதவிக்காலத்தை பதவி ஏற்கவுள்ளதால் அந் நிகழ்வுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கத் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னர் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் இப் பேச்சுக்களை ஆரம்பித்துவிடவேண்டும் என்பதில் புதுடில்லி அதிககரிசினை கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா கடந்த திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவர்களைச் சந்தித்து அரசாங்கத்துடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அத்துடன் கடந்த மாத இறுதியில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக புதுடில்லி அழைத்து வரப்பட்ட மகிந்த ராஜபக்சவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என மன்மோகன்சிங் உறுதியாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக