09 நவம்பர் 2010

சிங்க ரெஜிமென்ட் முகாமில் நடந்த ஆயுதக்களைவு!

புலிகளை அழித்துவிட்டோம் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என மார்தட்டும் சிங்கள அரசியல்வாதிகள் முகத்திரை கிழிகிறது. இராணுவ முகாமுக்குச் செல்லவே பயந்து நடுங்கும் தளபதிகள்.
சரத்பொன்சேகவால் பராமரிக்கப்பட்ட, குறிப்பாகச் சொல்லப்போனால் வளர்த்தெடுக்கப்பட்ட படைப்பிரிவே, சிங்க ரெஜிமன்ட் ஆகும். அவரைக் கைதுசெய்த மூட்டம் அப்படைப்பிரிவைக் கலைத்துவிடும்படி கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் கணிசமான அளவு இராணுவத்தினர் அப்படைப் பிரிவில் இருப்பதாலும், பல அனுபவமிக்கவர்களும் இருப்பதாலும் அப்படைப் பிரிவு இன்றுவரை கலைக்கப்படவில்லை. இருப்பினும் இதில் உள்ள சிலரை வன்னிக்கு இடமாற்றி, அவர்களை காட்டுப் பகுதிகளுக்கு அனுப்பி பின்னர் அப்பகுதியில் விடுதலைப் புலிகள் இருப்பதாகக் கூறி விமானத்தாக்குதலை நடத்தி தமது இராணுவத்தை தாமே கொலைசெய்துள்ளது இலங்கை அரசு.
இது ஒரு புறம் இருக்க கடந்த 6ம் திகதி எஞ்சியுள்ள சிங்க ரெஜிமன்ட் படைப்பிரிவு முகாம் ஒன்றில் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. இந் நிகழ்வுகளில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூர்ய கலந்துகொள்ள இருப்பதைத் தொடர்ந்து அம் முகாமை இராணுவப் பொலிசார் 2 நாட்களுக்கு முன்னதாகவே தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். அம் முகாமில் இருந்த கட்டளைத் தளபதி உட்பட அனைவரது ஆயுதங்களும் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் களையப்பட்டதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அனைவரது ஆயுதங்களும் களையப்பட்ட பின்னரே, இராணுவத் தளபதியும் அவரது சகாக்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இதனால் சிங்க ரெஜிமன்ட் படைப்பிரிவில் உள்ள இராணுவத்தினர் மேலும் கொதிப்படைந்துள்ளனர். சரத்பொன்சேகாவை சிறையில் இட்டதால், அதிருப்தியடைந்துள்ள அவருக்கு ஆதரவான இராணுவத்தினர் தம்மை எப்போதும் தாக்கலாம் என்ற பயம் காரணமாகவே, இவர்களது ஆயுதங்கள் களையப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேறு முகாம்களில் நடக்கும் எந்த நிகழ்வுகளிலும், இவ்வாறு நடந்தது இல்லை என அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக