05 நவம்பர் 2010

மஹிந்த பயத்தால் பிரயாணத்தை ரத்துச்செய்தாரா?

போர்க் குற்றங்கள் புரிந்தமைக்காகக் கைது செய்யப்படுவேனோ என்ற பயத்தில் மஹிந்தவின் பிரிட்டன் விஜயத்தை ரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. லண்டன் செல்லவிருந்த மஹிந்த ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற இருந்தார். ஆனால் இங்கு வரும் அவரை பிரிட்டன் நீதிமன்றம் கைது செய்யும் விதமாக சில நடவடிக்கைகளை ஈழத் தமிழர் அமைப்புகள் முன்னெடுத்துள்ளன. எனவே இவற்றால் தனக்கு நிச்சயம் ஆப்பு உள்ளதை அறிந்துள்ள மஹிந்த பயணத்தையே ரத்துச் செய்துள்ளார்.
இப்பயணம் குறித்த தகவல்களைப் பெறுவதற்கென இலங்கை உயர் ஸ்தானிகத்துக்கு தொலைபேசி அழைப்புமேல் அழைப்பு வந்துகொண்டிருக்கின்ற போதிலும், பெரும்பாலான அழைப்புகளுக்கு பெருமூச்சு மட்டுமே பதிலாகக் கிடைத்துள்ளது. "ஜனாதிபதி தனது திட்டங்களை மாற்றியுள்ளார்" என்று மட்டுமே பிரிட்டிஷ் வெளிநாட்டு அலுவலகம் பதிலை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் சட்ட விதிமுறையின் பிரகாரம், ஒருவர் போர்க்குற்றங்களையோ அல்லது மனித உரிமை மீறல்களையே பிரிட்டனில் செய்திருக்காவிட்டாலும் கூட, அந்நபர் அங்கு வரும்போது அவரை விசாரணை செய்வதற்கு இடமுள்ளது. இதன் பிரகாரமே, 1998 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் சிலியன் சர்வாதிகாரி ஒகஸ்ரோ பினோசெட்டை லண்டனில் வைத்து ஸ்கொட்லாந்து யார்ட் போலீஸ் கைது செய்தது. இவர் தனது 17 ஆவது ஆண்டு ஆட்சியின்போது ஸ்பனிஷ் மக்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்திருந்தார்.
தற்போது மஹிந்தவின் பயணம் ரத்துச் செய்யப்பட்டிருப்பது இந்தியா, குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் ஒரு பாடமாக அமைகிறது. ஏனெனில் இவர் சமயச் சுதந்திரத்துக்கு எதிரான பல குற்றச் செயல்களைச் செய்துள்ளார். இதனால் இவர் 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்லவிருந்தும் அவருக்குரிய வீசா வழங்கப்படவில்லை.
ஆனால், 2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மோடி லண்டன் சென்றிருந்தார். ஆனால் இவருக்கு வீசா கொடுத்தமைக்காக பிரிட்டன் உள்துறை அலுவலகம் குறைகூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனவே இந்நிலையில் மஹிந்த ஒன்றில் தனது பயணத்தை ரத்துச் செய்ய வேண்டும் அல்லது லண்டன் விமான நிலையத்தில் இறங்கியதும் மீண்டும் அடுத்த விமானத்தைப் பிடித்து இலங்கை திரும்ப வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக