28 நவம்பர் 2010

எமது இலட்சியத்தை அடையும்வரை போராடுவோம்!துணை முதல்வர் ராமசாமி.

நேற்றைய மாவீரர் நாளுக்காக மலேசிய பினாங்கு துணைமுதல்வர் பேராசியர் டாக்டர் பி.இராமசாமி உரையாற்றியிருந்தார். அவர் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டதாவது,
இன்று (27.11.2010) மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள்.
‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் இலட்சியக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை. சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை. தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது.
தமிழினம் தன்னிகரற்ற வலுவாற்றல் மிக்க தனித்துவமான இனம். பண்பாட்டு வாழ்வையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட இனம். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை போராடுவோம். வரும் சவால்களுக்கு முகம் கொடுப்போம். இடையூறுகளைத் தாண்டிச் செல்வோம், எதிர்ப்புச் சக்திகளை முறியடிப்போம், தாயகத்தின் விடிவிற்காகப் போராடுவோம். விடுதலைப் போரை வலுப்படுத்த உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் அணிதிரளுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக