மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று பரவலாக இடம்பெற்ற மாவீரர் தின வைபவங்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றிருந்ததாக எமது தகவல் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.
புலிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக பெருமெடுப்பிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இலங்கை அரசாங்கமானது மாவீரர் வாரத்தை முன்னிட்டு படைத்தரப்பை உச்சகட்ட உசார் நிலையில் வைத்திருந்தது.
அதனையும் மீறி நேற்று வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் பரவலாக மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதுடன், ஏராளம் பொதுமக்களும் அதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான முறையில் இராணுவக் கண்காணிப்பும் படைப்புலனாய்வாளர்களின் கடுமையான அவதானிப்புகளுக்கும் மத்தியில் நேற்று நடைபெற்ற மாவீரர் தின அனுஷ்டானங்கள் இரகசியமான முறையில் பரவலாக நடைபெற்றிருந்ததாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவீரர் தின வைபவங்களின் முக்கிய அம்சமான ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் அதன் போது நடைபெற்றிருந்தது.
வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்து இருப்பதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக ஒரு சில அரசியல் வாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் நேற்றைய நிகழ்வுகள் அதனைப் பொய்யாக்கியுள்ளன.
உணர்வு பூர்வமான இலட்சியப் பயணத்தில் பங்கேற்க கிழக்கு மாகாண மக்கள் இன்னும் தயாராக இருப்பதையே நேற்றைய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
மிகவும் இறுக்கமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் மீறி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டமையும், பெருமளவான பொதுமக்கள் அதில் ஆர்வம் காட்டியிருந்தமையும் அதனையே பறைசாற்றி நிற்கின்றதாக கூறப்படுகின்றது.
ஆயினும் பாதுகாப்புக் கருதி மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்ற இடங்களின் விபரம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக