12 நவம்பர் 2010

எனது கணவர் எங்கே?யோகியின் மனைவி உருக்கம்.

இராணுவத்திடம் சரணடையும் விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழக்கப்படும் என்ற அறிவித்தலை ஏற்றே எனது கணவர் சரணடைந்தார்.ஆனால் இன்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் அவர் தொடர்பான எந்தவொரு தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை என விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் யோகியின் மனைவி ஜெயவதி தெரிவித்தார்.
நேற்று அரியாலை சரஸ்வதி சன சமூக நிலைய கலாசார மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது, வன்னியில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தினால் இடம் பெயர்ந்து கடந்த வருடம் மே மாதம் 17ஆம் திகதி நாங்கள் வட்டுவாகல் பிரதேசத்தைச் சென்றடைந்தோம். மறுநாள் 18ஆம் திகதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை சென்றடைந்தோம்.
அங்கு இராணுவத்தினரிடம் சரணடையும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.இதனை நம்பி எனது கணவர் யோகரட்ணம் யோகி, கவிஞர் புதுவை இரத்தினதுரை, கல்விப்பிரிவைச் சேர்ந்த பேபி சுப்பிரமணியம், அரசியல் பிரிவைச்சேர்ந்த லோரன்ஸ் திலகர் உட்பட 50இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர். சரணடைந்த அனைவரும் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டனர். அவர்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு, அவ் வாகனம் புறப்படும் வரை நான் சம்பவ இடத்திலேயே நின்றிருந்தேன்.
இன்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் எனது கணவர் தொடர்பான எந்தவிதமான தகவல்களும் எவராலும் எனக்கு தெரி விக்கப்படவில்லை.சரணடைந்தவர்கள் தொடர்பில் அண்மையில் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன. புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் எனது கணவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை.
சரணடைந்தால் பொதுமன்னிப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் சரணடைந்த எனது கணவர் எங்கே? தயவு செய்து அவர் தொடர்பான தகவல்களை பெற்றுத்தாருங்கள் என அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக