22 நவம்பர் 2010

கைதான ஊடகவியலாளர் கே.பியுடன்?

கொழும்பில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் திரு.கார்த்திகேசு திருலோகச்சந்தர் விடுவிக்கப்பட்டு கே.பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்செய்தி குறித்து மேலும் தெரியவருவதாவது;
கடுமையாக சுகவீனமுற்றிருந்த தனது தாயாரை பார்வையிடுவதற்கு சென்ற பிரித்தானியா குடியுரிமை பெற்ற தமிழ் ஊடகவியலாளர் திரு கார்த்திகேசு திருலோகச்சந்தர் (37) கொழும்பில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினரால் கடந்த புதன்கிழமை 17.11.2010 அன்று கைது செய்யப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது யாவரும் அறிந்ததே.
ஆனால் இவர் தற்போது கே.பியின் அறிவுறுத்தலுக்கமைய விடுவிக்கப்பட்டு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கே.பியுடன் பங்குபற்றியிருந்ததாக அறியப்படுகிறது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட தீபம், ஜி.ரி.வி மற்றும் ஐ.பி.சி ஆகிய ஊடகங்களில் பணியாற்றிய இவருக்கு இலங்கை அரசால் கே.பியிற்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்று திணிக்கப்பட்டு அதை ஏற்றுக்கொண்டாலே விடுதலை என்ற நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே விடுவிக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
அண்மை நாட்களாக தமிழீழ விடுதலையில் ஆழமான பற்றுறுதிகொண்டவர்களை தங்கள் வலையில் விழ வைத்து சிறிலங்காவிற்கு எதிராக சர்வதேச ரீதியில் பலமாக விளங்கும் தமிழர் கட்டமைப்புக்களை சிதைக்கும் முயற்சியில் சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலிற்கு உயிர் கொடுப்பவர்கள் முழுவேகத்துடன் செயற்பட்டு வருவது அனேகமான இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக புலம்பெயர் தமிழ் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கையகப்படுத்தும் முயற்சியில் கேபி தீவிரமாக ஈடுபட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்தகாலங்களில் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சில தமிழ்த்தேசியத்திற்காகவென உருவாக்கப்பட்ட ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் வலை வீசப்பட்டுவிட்டதாக அறியப்படுகிறது. இந்த வலைக்குள் சிக்காத ஊடகங்களை சிதைத்து செயலிழக்க வைக்க பல படிமுறைச் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
ஊடகங்களுக்கு கேபியால் அச்சுறுத்தல் விடப்பட்டதென்ற விபரமும். எந்தெந்த ஊடகங்கள் வலையில் சிக்கித்தடுமாறுகின்றன என்ற விபரமும் மக்கள் முன் ஆதாரத்துடன் வெளிவரும் என அறியப்படுகிறது.
எனவே பொறுப்புள்ள ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எத்தகைய சவால்கள் வரினும் எதிரியின் நரித்தனமான நகர்வினை புரிந்து கொண்டு தமிழீழ விடியல் என்ற உண்ணத இலட்சியத்துக்காக உண்மையுடனும் உறுதியுடனும் உழைக்க மாவீரத் தெய்வங்களை வணங்கும் இப்புனிதமான காலத்தில் திடசங்கற்பம் ஏற்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக