29 நவம்பர் 2010

மகிந்தவிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கமுடியாதென பிரித்தானியா தெரிவிப்பு!

பிரித்தானியாவில் கைது செய்யப்படலாம் என முன்னர் தனது பயணத்தை ஒத்திவைத்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்த வாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணமும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. தனிப்பட்ட பயணமாக பிரித்தானியாவுக்கு வரும் மகிந்தா ராஜபக்சாவின் பாதுகாப்புக்களை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என பிரித்தானியா அதிகாரிகள் பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்திடம் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் அழைப்பில் அவர் பயணத்தை மேற்கொண்டால், தம்மால் அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், ஆனால் தனிப்பட்ட பயணங்களின் போது அது முடியாது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனால் நாளை (30) பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த மகிந்தா தனது பயணத்தை கைவிடலாம் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.
பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் தென்னிலங்கை மாணவர்களின் அழைப்பை தொடர்ந்தே மகிந்தா அங்கு செல்கிறார், ஆனால் பிரித்தானியாவில் தற்போது மாணவர்களின் போராட்டம் நடைபெறுவதால் அங்கு உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், மகிந்தா பிரித்தானியாவுக்குள் நுளைந்த பின்னர் கைது செய்யும் நீதிமன்ற உத்தரவுகளை பெற்று உடனடியாக அவரை கைது செய்வதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் காத்திருப்பதாகவும், அதற்கான ஆணை 27 ஆம் நாள் நடைபெற்ற மாவீரர் தின விழாவில் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மாவீரர் தினத்தில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்துகொண்டது, பிரித்தானியாவில் அவர்களுக்கு உள்ள ஆளுமையை காட்டுவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்களும், பொன்சேகா மீதான நடவடிக்கை தொடர்பில் மகிந்தா மீதான புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கான ஆதரவுகளை வழங்கும் நிலையில் உள்ளனர்.
இதனிடையே, பிரித்தானியா பிரதமரை சந்திப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றிபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக