புது டெல்லியில் விடுதலைப் புலிகள் தடை மீதான தீர்ப்பாயத்தின் தலைவரான டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம் ஜித் சென் அவர்கள் முன்னிலையில் நேற்று (02.11.2010) விசாரணை நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பின்வருமாறு வாதங்களை எடுத்து வைத்தார். தமிழ் ஈழத்தை அடைவதற்காக விடுதலைப் புலிகள் போராடுவது தமிழ்நாட்டையும் அதில் சேர்த்துக் கொள்வதற்காகத்தான் என்றும், இதனால் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார். அவர் மேலும், தமிழ் ஈழத்தை அமைப்பதன்மூலம் இந்தியாவிலுள்ள தமிழர்களையும் முஸ்லிம்களையும் அதில் சேர்த்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள் என்றும் கூறினார்.
அக்டோபர் 5-ஆம் தேதி அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில் புலிகள் தந்துள்ள தமிழ் ஈழ வரைபடத்தில் தமிழ்நாடும் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதில் ஒரு சதவீதம்கூட உண்மை இல்லை. இதற்கான ஆதாரங்களை அவர் காட்ட முடியாது. அப்படி ஒரு ஆதாரம் காட்டப்பட்டாலும் நான் புலிகளுக்காக வாதாடுவதையே விட்டு விடுகிறேன்.
தமிழ் ஈழக் கோரிக்கை ஏன் வந்தது என்ற வரலாற்றை இந்த நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கிறேன்.ஈழத் தமிழர்கள் அந்தத் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனி அரசு அமைத்து ஆண்டு வந்தனர். போர்ச்சுகீசியரும் டச்சுக்காரரும் பின்னர் ஆங்கிலேயரும் அத்தீவில் நுழைந்த பின்னரே நிலைமை மாறியது. 1948 பிப்ரவரி 4-இல் ஆங்கிலேயர்கள் சிங்களவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெளியேறினர்.தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக சிங்களவர்கள் அடிமைப்படுத்தினர். புத்த மதமே அரசு மதமாக்கப்பட்டது. சிங்களமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. தமிழரின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. கற்பழிப்பு, கொலை, கொள்ளை தமிழர்கள் மீது ஏவப்பட்டது.
தங்கள் உரிமைகளுக்காகத் தமிழர்கள் அறவழியில் போராடினர். ஆனால், சிங்கள இனவாத அரசோ போலீசையும், இராணுவத்தையும் ஏவி அழித்தது.தமிழர் தலைவர் தந்தை செல்வா சிங்கள அரசோடு 1957-ஆம் ஆண்டிலும், 1965-ஆம் ஆண்டிலும் போட்ட ஒப்பந்தங்களைச் சிங்கள அரசு குப்பைத் தொட்டியில் வீசியது. 1976-ஆம் ஆண்டு மே மாதம் 14-ஆம் தேதி வட்டக்கோட்டையில் தந்தை செல்வா தலைமையில் அனைத்துத் தமிழர்களும் ஒன்றுகூடி சுதந்திரத் தமிழ் ஈழம் பிரகடனம் செய்தனர். வட்டக்கோட்டைத் தீர்மானத்தை என்னுடைய பிரமாண வாக்குமூலத்தோடு இணைத்திருக்கிறேன். நீதிபதியின் கவனத்திற்கு அதனைக் கொண்டு வருகிறேன்.தமிழ் ஈழம் என்பது இலங்கைத் தீவின் வடக்கும் கிழக்கும்தான் என்பதைத் திட்டவட்டமாக அதில் கூறியுள்ளனர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கள் தாயக விடுதலைக்காக இரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்காக ஆண்டுதோறும் நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் நாள் உரையாற்றி வந்துள்ளார். அந்த உரைகளின் தொகுப்பை எனது பிரமாண வாக்குமூலத்தோடு இணைத்து நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளேன்.அந்த உரைகளில் தமிழ் ஈழம் என்பது இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் தான் என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அவர் உரையாற்றுகிறபோது அந்த மேடையில் தமிழ் ஈழ வரைபடம் உள்ளதை அந்தப் புகைப்படங்களில் நீங்கள் பார்க்கலாம். அதில் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு தான் தமிழ் ஈழம் என்பது தெளிவாகப் புரியும்.
புலிகளைத் தடை செய்யாத நார்வே நாட்டின் அரசு பல ஆண்டுகளாக இலங்கையில் அமைதி ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. தமிழ் ஈழத்தில் இந்தியப் பகுதியையும் சேர்க்கும் திட்டம் புலிகளுக்கு இருந்திருக்குமானால், அது நார்வே அரசுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் நார்வே இந்தப் பிரச்சினையில் தலையிட்டிருக்கவே செய்யாது. 1984- ஆம் ஆண்டு, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் அன்றையப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் ஆற்றிய கடைசி உரையில் ‘இலங்கைத் தீவின் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழர்கள் அம்மண்ணின் பூர்வீகக் குடிமக்கள்’ என்று குறிப்பிட்டார்.
நியூசிலாந்து நாட்டின் உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு ஆகஸ்டு 10-ஆம் தேதி புகழ் மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனக் காயத்திற்கு அது மருந்தானது. ஈழத் தமிழர் ஒருவர் 2001-இல் நியூசிலாந்தில் தஞ்சம் புகுந்து அகதி அந்தஸ்து நாடியபோது முதலில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் அந்தக் கோரிக்கையைத் தள்ளுபடி செய்தது.
ஈழத் தமிழர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் அளித்த அந்தத் தீர்ப்பின் நகலை நான் பிரமாண வாக்குமூலத்தோடு இந்தத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ளேன். அந்தத் தீர்ப்பின் 92-ஆவது பாராவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் அரசியல் இயக்கம் என்றும், இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தங்கள் தமிழ் ஈழத் தேசமாகச் சுதந்திரம் பெற போராடும் இயக்கம் என்றும் கூறியதோடு, நீதிகேட்ட அந்த ஈழத் தமிழரின் கோரிக்கையை ஏற்று அகதி அந்தஸ்தும் தந்து விட்டது.
நான் இதுகுறித்து இவ்வளவு விளக்கம் தருவதற்குக் காரணம் யாதெனில் விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்திய அரசு போடுவதற்குத் தமிழ் ஈழத்தையே காரணமாகக் கூறியுள்ளதேயாகும். இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்றும் இறையாண்மைக்கு ஆபத்து என்றும் கூறுகிறது. இதன் அடிப்படையிலேயே தன் மொத்த வழக்கையும் அரசாங்கம் எழுப்பியுள்ளது. இப்பொழுது அடிப்படையே தகர்ந்து போவதால் தடையை நீடிக்க எந்த நியாயமும் இல்லை.
இலங்கைத் தீவில் நடைபெறும் சம்பவங்களால் தமிழ்நாட்டில் புலிகளை ஆதரித்துக் கூட்டம் போடுவதும், பேசுவதும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் அதிகமாகின்றன என்று அரசாங்கம் கூறியுள்ளது.
ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்யப்படும்போது - தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்படும்போது - பச்சைக் குழந்தைகளும், வயோதிகர்களும் கொல்லப்படும்போது - மனிதாபிமானமுள்ள யாராக இருந்தாலும் துடிப்பார்களே! தொப்புள்கொடி உறவுள்ள தமிழ்நாட்டு மக்கள் வேதனையில் துடிப்பது நியாயம் தானே!
புலிகளை ஆதரித்துப் பேசலாம் என்று 2009 பிப்ரவரி 26-இல் பேசியதற்காக பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். உயர்நீதிமன்றத்தில் அதை எதிர்த்து கொளத்தூர் மணி வழக்கு தொடுத்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து பேச்சுரிமையை அங்கீகரித்து கொளத்தூர் மணியை விடுதலை செய்தனர்.
புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக 19 மாத காலம் வேலூர்ச் சிறையில் நான் இருந்தபோது உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். எனக்காகப் புகழ்மிக்க வழக்கறிஞர் பாலி நாரிமன் அவர்கள் வாதாடினார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றம் இல்லை என்று தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பின் நகலையும் இங்கு தந்திருக்கிறேன்.
விடுதலைப்புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்குகள் போட்டதை அரசு வழக்கறிஞர் சொன்னார். போதைப் பொருள் கடத்தல் இந்தியா முழுவதும் நடக்கிறது. புலிகள் ஆதரவாளர்கள் மீது போட்ட வழக்குகள் பொய் வழக்குகளாகும். எங்கள் அமைப்புச் செயலாளர் சீமா பஷீர் மீது போட்ட வழக்கே அதற்கு ஆதாரமாகும். விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறி ஒருவர் மீது கூட தமிழ்நாட்டில் வழக்கு போடப்படவில்லை என்று கடந்த 28-ஆம் தேதி என் குறுக்கு விசாரணையின்போது காவல்துறை அதிகாரியே ஒப்புக் கொண்டார்.
இந்தியத் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றெல்லாம் ஒரு வாதத்தை அரசு முன்வைக்கிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டத்தின் விளக்கத்தின்படி இந்தக் காரணம் சட்ட விரோதச் செயல் என்ற விளக்கத்திற்குள் வர முடியாது. விடுதலைப்புலிகளைத் தடை செய்ததன்மூலம் ஈழத் தமிழர்கள் தமிழகத்திற்கு வந்தால் அவர்களைப் புலிகள் என்று முத்திரை குத்தி அரசு சிறையில் அடைக்கிறது. சர்வதேச அநாதைகளாகி விட்டனர் ஈழத் தமிழர்கள். தமிழகத்திலேயே அவர்கள் தஞ்சம் புக முடியாவிடில் அவர்கள் எங்கே செல்வது?
இந்தியா புலிகளைத் தடை செய்ததால்தான் உலகின் பல நாடுகள் தடை செய்து விட்டன. இரத்தக் கண்ணீர் சிந்துகிற ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.
மனிதகுல மனசாட்சியின் கதவுகளைத் தட்டுவதற்காகவே இந்தத் தீர்ப்பாயத்தின் கதவுகளைத் தட்டுகிறேன். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு நீதிபதி அவர்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்.
இவ்வாறு கூறி தனது வாதத்தை வைகோ முடித்துக் கொண்டார்.
ஒரு வழக்கறிஞர் தீர்ப்பாயத்திற்கு வந்து "சுப்பிரமணிய சாமி கேரளா போய் விட்டதால் அவர் வர முடியவில்லை; அவர் எழுத்து மூலம் ஒரு மனுவைத் தாக்கல் செய்வார்" என்றார். உடனே வைகோ எழுந்து "நீதிபதி அவர்களே! சட்டப்படி அரசு தரப்புக்காக சுப்பிரமணிய சாமி வாதாட இடமில்லை. அவர் மனு கொடுக்கவும் சட்டத்தில் இடமில்லை" என்றார். நீதிபதி அவர்கள், "ஆளே வராமல் நான் இதுபற்றி எதுவும் சொல்ல முடியாது" என்று கூறி வழக்கை ஒத்தி வைத்து விட்டார்.
தீர்ப்பாயத்தில் இரு தரப்பு வாதங்களும் முடிவுற்றன.
தீர்ப்பாயத்தில் வைகோ அவர்களுடன் கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி. தேவதாஸ், சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் வழக்கறிஞர் இரா. அருணாசலம், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ. நன்மாறன், தலைமைக் கழக வழக்கறிஞர் ஆர். பிரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரு. பழ. நெடுமாறன் அவர்கள் சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் அவர்கள் புலிகள் மீதான தடையை நீக்க வாதங்களை எடுத்து வைத்தார். அதேபோன்று திரு. புகழேந்தி அவர்களின் சார்பில் வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் வாதங்களை எடுத்து வைத்தார்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.,
02.11.2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக