01 நவம்பர் 2010

கிண்ணியா தமிழ் மக்கள் மீது சிங்களம் அடாவடி!

சிறுபான்மையினர் மீது அத்துமீறிய குடியேற்றம் எனக் கூறி மீள்குடியேறிய கிண்ணியா கண்டாக்காடு மக்களை விரட்டியதோடு அவர்களது குடிசைகளையும் அரசியல்வாதிகளின் அடாவடிக்குழுவினரோடு 200இற்கும் மேற்பட்ட பொலிசாரும் சேர்ந்து எரித்து நாசப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநரின் கட்டளைக்கமைய மூன்று வாகனங்களில் வந்த குழுவினரே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதோடு, இப்பகுதியில் பலஆண்டுகளாகத் தாம் குடியிருந்து பயிர் செய்து வருவதாகவும், அரசாங்க அதிபரின் அனுமதியுடனேயே தாங்கள் குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் எங்களுக்கு காணி உறுதிப் பத்திரம், தேர்தல் இடாப்பு, பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை என்பனவும் கண்டாக்காடு என்ற பெயரிலேயே உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கண்ணீர்மல்க தெரிவிக்கின்றனர்.
இந்த அராஜகத்தினால் அங்கிருந்து வெளியேறி ஊர் மக்கள் அல்-அதான் வித்தியாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்த 213 குடும்பங்களுள் 152 முஸ்லிம் குடும்பங்களும், 61 தமிழ் குடும்பங்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.
மீளக்குடியேறிய மக்களின் 20இற்கும் மேற்பட்ட குடிசைவீடுகள் எரித்துநாசமாக்கப்பட்டதோடு பள்ளிவாசல் முற்றுமுழுதாக நாசமாக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் பயிரிடப்பட்ட பயிர்களையும் பிடுங்கி எறிந்ததோடு, குறிப்பட்ட சில பகுதிகளுக்குச் சென்ற பொலிஸார் அங்குள்ள கடைகளையும் உடைத்து பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் சுமார் 200ற்கும் மேற்பட்ட பொலிசாரும் குண்டர்களும் ஈடுபட்டதாகவும் அவர்களைக் கண்டவுடன் தாங்கள் சிதறியடித்து ஓடியதாகவும் மக்கள் தெரிவித்தனர்.தாம் பயிரிடக் கொண்டு சென்ற பொருட்களையும், உபகரணங்களையும் இழந்து உடுத்திய உடையுடனேயே தாங்கள் அகதிகளாக வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை 61 தமிழ்க் குடும்பங்களும் ஆலங்கேணி, ஈச்சந்தீவுப் பகுதிகளில் தஞ்சடைந்துள்ளனர்.இக் குடும்பங்கள் உணவுக்குப் பெரிதும் அல்லோலப்படுவதாகவும் தற்பொழுது சில பொது சமூக அமைப்புக்கள் உணவு வழங்கி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக