14 நவம்பர் 2010

சரணடைந்த புலி உறுப்பினர்கள் இரகசிய தடுப்பு முகாம்களில்!

வன்னி இறுதி யுத்தத்தின் பின் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்து சரணடைந்தவர்களை இராணுவம் இரகசிய தடுப்பு முகாம்களிலும் வைத்துள்ளது என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் பொதுமக்கள் சாட்சியமளித்தனர்.
இக் கருத்தை ஏற்றுக்கொண்ட ஆணைக் குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா, பதிவு செய்யபடாத தடுப்பு முகாங்களிலும் தாம் விசாரணைகளை மேற்கொள்வோம் எனப் பதிலளித்தார். ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு நேற்று கரவெட்டி, பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவு மக்களின் சாட்சிகளை நெல்லியடி கலாசார மண்டபத்தில் பதிவு செய்தது. இதன்போது சாட்சியமளித்த உதயபாஸ்கரன் பத்சலா என்ற தாயார் தெரிவிக்கையில்,
எனது மகள் உதயபாஸ்கரன் நிரோயினி (வயது 17) விடுதலைப்புலிகள் பிடித்துச் சென்று தமது அமைப்பில் உறுப்பினராக வைத்திருந்தனர். நான் இறுதியாக எனது மகளை 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி சந்தித்தேன். அதற்குப் பின் நான் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டேன். பின்னர் எனது மகள் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அவருடன் கல்வி கற்ற நண்பி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றில் முறைப்பாடு செய்தும் மகள் தொடர்பில் எதுவித தக வல்களுமில்லை. அத்துடன் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து முகாம்களுக்கும் சென்று பார்த்தபோது அங்கேயும் எனது மகள் இல்லை.ஆனால் எனது மகள் உயிருடன் உள்ளார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.எனவே இராணுவம் இரகசியத் தடுப்பு முகாமில் எனது மகளை தடுத்துவைத்துள்ளது என கண்ணீருடன் தெரிவித்தார்.
காயமடைந்திருந்த மகன் இராணுவத்தினரிடம் உள்ளார்
இந்த விசாரணையின் போது சாட்சியமளித்த பருத்தித்துறையைச் சேர்ந்த வல்புரன் மார்க்கண்டு தெரிவிக்கையில், யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடம் கணிதத்துறையில் படிப்பை மேற்கொண்டு வந்த எனது மகன் மயூரன் பல்கலைக்கழகப் பகிஷ்கரிப்பினால் வீட்டில் தங்கியிருந்தார்.
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி நானும் மனைவியும் ஏனைய 05 பிள்ளைகளும் கோயிலுக்குச் சென்றபோது மயூரன் மட்டும் வீட்டில் இருந்தார். எனினும் பிற்பகல் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மயூரன் வீட்டிலில்லை. ஆனால் வீட்டு வாசலில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வந்துசென்ற அடையாளத்தைக் கண்டு சந்தேகமடைந்த நான் உடனடியாகவே பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.
முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார் உடனடியாகவே முகமாலைப் பொலிஸாரிடம் கேட்டபோது அதே தினம் 3.20 மணிக்கு மார்க்கண்டு மயூரன் என்பவர் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிக்கு செல்லக் குறிப்பிட்டு முகமாலை சோதனைச் சாவடியைத் தாண்டி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது தெரியவந்தது.
பின்னர் 6 மாதங்களின் பின் வன்னியிலிருந்து இணையத்தளத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மகன் விடுதலைப்புலிகள் அமைப்பில் மீளமுடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தார். பின்னர் அவரைப் பார்ப்பதற்கு பல முயற்சிகள் எடுத்தும் முடியாமற் போனது.
இந்நிலையில் 2009 ஆம் ஆணடு மே மாதம் 10 ஆம் திகதி இணையத்தள தொலைபேசி மூலம் வேறொருவர் அழைத்து மயூரன் காயமடைந்து விட்டதாகத் தகவல்தந்தார். இதனைத் தொடர்ந்து போர் நிறைவடைந்த நிலையில் நான் வெலிக்கந்த, பொலநறுவை, ஓமந்தை என விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மற்றும் செட்டிக்குளம் நலன்புரி முகாம் என அனைத்திலும் தேடியும் மயூரன் இல்லை.
ஆனால் கடந்த யூன் மாதம் குருநாகல் வைத்தியசாலையில் வைத்து மகனை சந்தித்ததாக ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து நான் அங்கு சென்றேன்.ஆனால் மயூரன் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்த ஒருவர் குருநாகல் வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டமை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வவுனியா வைத்தியசாலைக்குச் சென்றும் அங்கு எனது மகன் இல்லை. எனவே எனது மகனின் தகவலைப் பெற்றுத் தரு மாறு கேட்டுக் கொள்கின்றேன் என தந்தையார் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
இராணுவம் தூக்கிச்சென்ற எனது கணவரை மீட்டுத்தாருங்கள் இவ் விசாரணையில் திருமதி ரஞ்சிதன் சாட்சியமளிக்கையில், வன்னி இறுதி யுத்தத்தின்போது செல் வீச்சில் காயமடைந்த எனது கணவரான இரட்ணம் ரஞ்சிதனே இராணுவக் கட்டுப்பாட்டிற்கு வரும் போது என்னால் அழைத்து வரமுடியவில்லை.
எனது பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அவரை அங்கேயே விட்டு நான் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டேன். நான் வவுனியா வலயம் 4 முகாமில் தங்கியிருந்தேன் எனினும் முள்ளிவாய்க்காலில் காயமடைந்திருந்த எனது கணவரை 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி இராணுவத்தினர் தூக்கிச் சென்றதாக கண்டவர்கள் கூறினார்கள்.
ஆனால் அவர் தொடர்பில் எந்தத் தகவலும் அதற்குப்பின் எனக்குக் கிடைக்கவில்லை. அத்துடன் எனது சகோதரனும் அவரது மனைவியும் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் அவர்களது 3 பிள்ளைகளையும் என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். தற்போது சசோதரனும் அவரது மனைவியினதும் தகவல் ஏதுமில்லாத நிலையில் பிள்ளைகள் என்னிடம் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
கொழும்பில் வைத்துஎனது கணவரை இராணுவம் கடத்தியது
இவ் விசாரணையில் சாட்சியமளித்த கரணவாயைச் சேர்ந்த திருமதி பிரேமசிறி சுதர்சினி, 2006 ஆம் ஆண்டு யூலை 3 ஆம் திகதி கொழும்புக்கு சென்ற எனது கணவர் செல்லையா பிரேமசிறியை காணவில்லை.கொழும்பில் புதிய செட்டித்தெருவில் விடுதி ஒன்றில் வெளிநாடு செல்வதற்காக தங்கியிருந்த எனது கணவரை 2006 ஆம் ஆண்டு 3 ஆம் திகதி சீருடையில் வந்த இராணுவத்தினர் கடத்திச் சென்றனர் என அவர் தெரிவித்தார்.
கருணா குழுவினர் எனது கணவரை கடத்தினர்
இவ்விசாரணையில் சாட்சியமளித்த திருமதி பாலகுமார், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கொழும்பு சென்ற எனது கணவர் செல்வராசா பாலகுமார் கொழும்பில் தங்கியிருந்த வேளை கருணா குழுவினரால் கடத்தப்பட்டார். இக்கடத்தலில் கருணா குழுவைச் சேர்ந்த குணபாலசிங்கம் ஜினதாஸ் தலைமையில் 10 பேர் கொண்ட ஆயுதக் குழுவினரே கடத்திச் சென்றனர் என திருமதி பாலகுமார் சாட்சியமளித்த வேளை இரகசியமாக உங்கள் சாட்சியத்தைப் பதிவுசெய்து கொள்கிறோம் என ஆணைக்குழுவினர் தெரிவித்தனர். இவற்றை செவிமடுத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா, பதிவுசெய்யப்பட்ட மற்றும் இரகசிய இராணுவ முகாம்கள் குறித்து விசாரணை செய்வதாக உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக