25 நவம்பர் 2010

வடக்கில் சிங்களம் திணிக்கப்படுவதால் தமிழ் கலாச்சாரத்திற்கு ஆபத்து!

வடக்கில் சிங்களம் பலவந்தமாகத் திணிக்கப்படு வதால் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது ஓர் இனவாத வரவு செலவுத்திட்டம் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக காலத்துக்குக் காலம் நடத்தப்பட்ட தமிழினத்துக்கு எதிரான தாக்குதல்கள் மூலமான உயிரிழப்புகள், சொத்தழிப்புகள், சொத்துக்களைச் சூறையாடல், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வரைமுறையற்ற கைதுகள், கொலைகள், உயர் கல்வி வாய்ப்பு பறிப்பு, உத்தியோக பறிப்பு என உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல முனைகளில் தமிழ் இன ஒழிப்பை நிகழ்த்தி வந்த சிங்கள ஆட்சியாளர்கள், தமிழ் வேகப்படுத்தும் வேலைத்திட்டத்தை பயங்கரவாதத்துக் கெதிரான யுத்தம் என்ற போர்வையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக செயற்படுத்தி வருகின்றனர்.
இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமையை உதாசீனம் செய்து, நிர்வாக அதிகாரிகளின் சுதந்திர மானதும் சட்டபூர்வமானதுமான செயற்பாடுகளைத் தடுத்து, இனவெறியூட்டப்பட்ட இராணுவத்தின் துணையுடன் தமிழ் இனஅழிப்பு நடவடிக்கையை அதிவேகப்படுத்தும் செயற்திட்டத்தை அபிவிருத்தி என்ற பெயரால் இந்த அரசு செயற்படுத்தி வருகிறது. இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத் திட்டமானது தமிழ் இன அழிப்பு செயற்றிட்டத்தை நாசூக்காகவும் தாக்கமாகவும் நடை முறைப்படுத்துவதற்கேற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை துலாம்பரமாக வெளிப் படுத்துகிறது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக