06 நவம்பர் 2010

கருணாவிடம் பெருந்தொகை ஆயுதங்கள்!-அதிரடிப்படை.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த காலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தன்னிடமிருந்த ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்காது இன்று வரை இரகசியமாக மறைத்து வைத்திருப்பதாக விசேட அதிரடிப்படை குற்றம் சாட்டுகின்றது.
புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த வந்த காலத்தில் முரளிதரன் பெருந்தொகை ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், அவர் பிரிந்து வந்த சில நாட்களில் ஊடகவியலாளர்களுக்கு அவை காண்பிக்கப்பட்டதாகவும் விசேட அதிரப்படையினர் தெரிவிக்கின்றனர்.
அதன் பின் முரளிதரனின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் குறித்த ஆயுதங்கள் கொள்கலன் பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டதாக தாங்கள் அறிந்திருந்ததாகவும், அவற்றில் ரி-56 ரக துப்பாக்கிகள், நடுத்தர வகை பீரங்கிகள், கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் என்பவை அடங்கியிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.
ஆயினும் இதுவரை முரளிதரன் அவற்றை அரசாங்கத்திடம் கையளிக்காதுள்ளதுடன் அவரது ஆதரவாளர்களிற் சிலர் தற்போதைக்கும் ஆயுதங்களை வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் இது தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் எதுவித கருத்துக்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக