31 ஜூலை 2011

இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.

போரின் பின்னர் தமிழர்கள் இந்த நாட்டில் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று ரொய்ட்டரிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர் வடக்குத் தமிழர்கள். நல்லிணக்க முயற்சியில் அரசு முழுமையான இதயசுத்தியுடன் ஈடுபடவில்லை என்று பெரும்பாலான தமிழர்கள் கருதுகின்றனர் என்றும் ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் வடக்கில் ரொய்ட்டர் செய்தியாளர் நேரடியாகப் பயணம் செய்து இதனை எழுதியுள்ளார்.
ரொய்ட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இலங்கையர்களின் வாழ்க்கையில் சிங்களம் தமிழ் என்ற இனப்பாகுபாடு தொடர்ந்தும் இருக்கிறது என்பதையே நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று தேர்தல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பதற்றம் மற்றொரு மோதலுக்கான பொறியை ஏற்படுத்திவிடக்கூடும் என்று பலரும் கருதுகிறார்கள்.
போர் முடிந்ததில் இருந்து தமிழர்கள் அடிமைகள் போன்று நடத்தப்படுகிறார்கள் என்றே நாம் நினைக்கிறோம் என்றார் தங்கராஜா புஸ்பராஜா. 60 வயதான இவர் யாழ்ப்பாணத்தில் வியாபாரம் செய்கிறார். புலிகள் ஏதோ சிறந்தவர்கள் என்று நான் சொல்லவில்லை; ஆனால் இப்போது எங்கள் வாழ்க்கை நன்றாக இல்லை என்றார் அவர். அவருடைய மகனை 17 வயதில் புலிகள் தமது படையில் பலவந்தமாக இணைத்துக் கொண்டார்கள். இலங்கை அரசு இன நல்லிணக்கத்தில் இதயசுத்தியுடன் ஈடுபடவில்லை என்பதால் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கி இருந்து விட்டோம் என்று பெரும்பாலான தமிழர்கள் ரொய்ட்டரிடம் தெரிவித்தார்கள். பொருளாதார அபிவிருத்தி என்று அரசு சித்து விளையாட்டுக் காட்டுகிறது என்றும் அவர்கள் கூறினார்கள்.
இராணுவத்தாலும் அரச ஆதரவு துணைப்படையினரைக் கொண்ட தமிழ்க் கட்சியாலும் நிகழ்த்தப்பட்ட தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு தவறியதால் அதற்கு எதிராக வாக்களித்தார்கள் என்று மேலும் பலர் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் தமிழர்களின் தலைமைக்கான வெற்றிடம் இன்னும் நிரப்பப்பட வில்லை என்றே ரொய்ட்டரிடம் பேசிய தமிழர்கள் பலர் தெரிவித்தனர்.

30 ஜூலை 2011

கோத்தபாயவிற்கு பிரித்தானியா பதிலடி.

ஊடக சுதந்திரத்தில் பிரித்தானிய அரசு ஒருபோதும் தலையீடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சனல் 4 ஊடகம் பொறுப்பற்ற விதத்தில் போலியான ஆவணப்படமொன்றை தயாரித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
சனல் 4 ஊடக நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் பிரித்தானியாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரித்தானியா ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது. சனல் 4 ஊடக சுதந்திரம் கொண்டது. ஒவ்வொரு ஜனநாயக அரசாங்கமும் ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

சனல்4 விவரணம் நிபுணர் குழு அறிக்கையில் உள்ளடக்கம்.

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்வது இலங்கை அரசாங்கத்தின் கடமை எனவும் அதனை கண்காணிப்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள சனல் 4 தொலைக்காட்சி புதன்கிழமை இரவு வெளியிட்ட இலங்கையின் போர் குற்ற ஆதார காணொளி குறித்து நேற்று முன்தினம் ஐ.நா. அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
சனல் 4 காணொளி குறித்து ஐ.நா. நடவடிக்கை எடுக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி சனல் 4 கூறிய விடயங்கள் நிபுணர் குழு அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளதென தெரிவித்தார்.
நடவடிக்கை எடுப்பது குறித்து விடயங்களை ஐக்கிய நாடுகளின் நிர்வாக பிரிவுகளிடம் ஒப்படைப்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மார்ட்டின் நெசர்க்கி குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கொலைக்களங்கள் காணொளியை ஐ.நா. பொதுச் செயலாளரின் சிரேஷ்ட ஆலோசகர்கள் பார்த்துள்ள நிலையில் பொதுச் செயலாளர் பார்த்தாரா இல்லையா என்பது தொடர்பில் தன்னால் கூற முடியாது என மார்ட்டின் கூறியுள்ளார்.

28 ஜூலை 2011

சிங்களத்தை சிக்கவைக்க சனல்4 வெளியிட்டுள்ள புதிய ஆதாரம்!

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்களைக் கொல்வதற்கான கட்டளை மிகவும் மேல்மட்டத்திலிருந்து பிறப்பிக்கப்பட்டதற்கான ஆதாராம் தம்மிடம் உள்ளதென சனல் 4 தொலைக்காட்சியின் இச்செய்தி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்சவும் படையணிகளின் தலைமையதிகாரி சர்வேந்திர சில்வாவும் உத்தரவிட்டதாக இறுதிப்போர் இடம் பெற்ற போது அங்கிருந்த இரண்டு பேர் சனல் 4க்கு அளித்த புதிய சாட்சியங்களை அது இன்று வெளியிட்டுள்ளது.
சாட்சிதாரிகளில் ஒருவரான இராணுவ அதிகாரி ஒருவர் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கான உத்தரவாதம் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நிலையில், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொல்லுமாறு ஜனாதிபதியின் சகோதரரான கோட்டாபேய ராஜபக்ச பிரிகேடியர் சர்வேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக சனல் 4க்குத் தெரிவித்துள்ளார்.


பிரிகேடியர் சர்வேந்திர சில்வாவின் 58வது படையணியில் களமுனையில் பணியாற்றிய இன்னொரு சாட்சிதாரர் தேவையான என்ன நடவடிக்கைகளையும் எடுத்து காரியத்தை முடிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்ச பிரிகேடியர் சர்வேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக சனல் 4க்குத் தெரிவித்துள்ளார்.
இது படையினரால் கொல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியாக விளங்கிக் கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுததாரிகளல்லாத தமிழ்ப் பெண்களும் சிறுவர்களும் எவ்வாறு சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதை தான் கண்ணால் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

26 ஜூலை 2011

தேர்தல் வெற்றி உயிர் நீத்த மக்களுக்கு காணிக்கை-கிளிநொச்சி பணியகம்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் அமோக வெற்றியை இதுவரை காலம் மண்ணில் உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு காணிக்கையாக்கி சமர்ப்பணம் செய்கின்றோம். இவ்வாறு தேர்தல் வெற்றி குறித்து கிளிநொச்சி மாவட்ட த.தே.கூட்டமைப்பு பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.தன்மானத் தமிழ் உறவுகளே!
சர்வதேசமே எதிர்பார்த்த உள்ளுர் அதிகார சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. தேர்தல் களத்தில் தமிழர் படை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டது.
நேற்று எங்கள் தெருக்களில் எக்காளம் இட்டவர்கள் இன்று தலைகுனிந்து தடுமாறுகிறார்கள். தமிழர்களின் நாடித்துடிப்பின் அர்த்தங்கள் புரிந்து கொள்ளாது தாம் ஆடிய நாடகங்கள் அம்பலப்பட்டு இருப்பது கண்டு குறுகிப் போய்விட்டார்கள்.
தமிழர்களின் தேசியக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தன்மானத் தமிழர்களாகிய நீங்கள் தந்த தர்மத்துக்கான தீர்ப்பாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.
குறிப்பாகப் போரால் உயிரிழந்து சொத்திழந்து அகதி வாழ்வு சுமந்து சிறையில் தங்கள் உறவகள் இருக்க வதைபட்டு காணாமல போன உறவுகளைத் தேடி இன்னும் அலைந்தும் நலிந்தும் வாழும் எங்கள் உறவுகளாகிய உங்களை வெறும் பருப்புக்கும், சீனிக்கும், நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கும், துவிச்சக்கரவண்டிகளுக்கும், சில காசுத் தாள்களுக்கும் விலை பேசியவர்களுக்கு நீங்கள் கொடுத்த தன்மான உணர்ச்சி மிகுந்த தீர்ப்பை என்றும் தமிழின வரலாறு மறக்காது.
தமிழ் மக்களே ! நீங்கள் மிகச் சிறந்த ஜனநாயகப் போராளிகள். நீங்கள் மிகச்சிறந்த நீதிவான்கள். நீங்கள் மிகச்சிறந்த வரலாற்று மாந்தர்கள். உங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைகூப்பி உங்கள் பாதராவிந்தங்களைத் தொட்டு வணங்குகின்றது.
உங்களுக்காக உங்களோடு உங்களால் வாழ்வதை நினைத்து நாம் மிகப் பெருமிதம் கொள்கிறோம். உங்களை மக்களாகப் பெற்றதற்கு இந்த மண் பெருமைப்படுகிறது.
சுடச்சுடச் செழுமை பெறும் தங்கம் போல அடக்க அடக்க, மிதிக்க மிதிக்க தமிழினத்தின் தன்மான உணர்ச்சி மெருகேறும். நீறு பூத்த நெருப்பாய் இருந்த தாகத்தைத் தமிழர்களே! தக்க தருணத்தில் தீர்த்தீர்கள் நன்றி.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேசத்தில் வீட்டுச் சின்னத்திலும், பூநகரி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு மூன்று சபைகளில் அமோக வெற்றி மூலம் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக வடகிழக்கிலே 17 சபைகளைக் கைப்பற்றி பெரும் சரித்திர வெற்றி பெற்றுள்ளது.
அன்பான தன்மானத் தமிழர்களே! எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்களோடு சேர்ந்திருக்கும் புல்லுருவிகளும் தந்த சொல்லொணா நெருக்கடிகளுக்கு மத்தியில் அதைத் தாங்கித் தகர்த்தெறிந்து வீறு கொண்டு வாக்களித்த கிளிநொச்சி யாழ் மாவட்ட மக்களுக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும் முல்லை மாவட்ட மக்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவிப்பதோடு,
பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் எமது பங்காளிக்கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போட்டியிடுவதற்கு ஒத்துழைத்த அக்கட்சியின் தலைவர் மூத்த அரசியல்வாதி திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கட்கும்,
இத் தேர்தலில் பங்கெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக பின்பலமாகவிருந்து தார்மீக உணர்ச்சியாக வலுவூட்டும் புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கும் தமிழ் நாட்டின் தொப்புழ் கொடிச் சொந்த உறவுகளுக்கும் தலைசாய்த்து நன்றி தெரிவிக்கிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுர் அதிகாரசபைத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வெற்றியை எங்களோடு இருந்து எங்களுக்காக உயிர் தந்த அனைத்து உறவுகளுக்கும் சமர்ப்பணம் செய்கின்றோம்.
நன்றி

அறிவகம் பணிமனை
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு
கிளிநொச்சி மாவட்டம்.

தமிழ் மக்களின் தீர்ப்பை இனவாதக்கட்சிகளும்,சிங்களமும் புரிந்துகொள்ள வேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பினை இனவாதக் கட்சிகளும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் எம்.பி. யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்ற சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு தமிழர்களின் தீர்ப்பானது உந்து சக்தியாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக கருத்துத் தெவிக்கையிலேயே புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெவிக்கையில்: உரிமைகள், அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்பதிலேயே தமிழ் மக்கள் அக்கறை காட்டியுள்ளனர்.இதனை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான இனவாத ரீதி யில் சிந்திக்கும ஜாதிக ஹெல உறுமய மற்றும் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.அரசாங்கம் மட்டுமல்ல, தென்பகுதி பெரும்பான்மை இன மக்களும் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. இந்த அழுத்தத்திற்கு தமிழ் மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வழங்கிய தீர்ப்பு மேலும் உந்து சக்தியாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

நாட்டின் நிலையான தீர்வுக்கு காணி,காவல்துறை அதிகாரம் அவசியம்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களின்றி அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டத்தில் மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பற்றி கலந்துரையாடப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களினால் வழங்கப்பட்டுள்ள ஆதரவின் மூலம் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் நடைமுறைப் பிரச்சினைகைளையும் அரசாங்கம் சரியாக புரிந்துகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு அடைந்துள்ள வெற்றி தொடர்பிலும் அரசாங்கத்திற்கு போதிய விளக்கம் கிடைக்கப் பெற்றிருக்கும் என கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட மாட்டாது என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது. எனினும், நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரம் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமான தீர்வுத் திட்டமொன்றை ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துடன் விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய நிலை காணப்படுகின்ற போதிலும், அதனை அரசாங்கம் சரியான முறையில் புரிந்துகொள்ளத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகரமான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள்; அமைப்பு, மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச சக்திகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நம்கரகமான விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் இலங்கை தொடர்பான சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு பாதகமாக அமைவதனை தடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் செயற்பாடு அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி உள்ளிட்ட சிங்கள கடும்போக்குடைய கட்சிகளின் நிலைப்பாட்டினால் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

23 ஜூலை 2011

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டைகளை பறித்துச்செல்லும் ஆயுததாரிகள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான பகுதிகளில் வாக்காளர் அட்டைகள் ஆயுததாரிகளால் ஆயுதமுனையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியின் வட்டக்கச்சி, இராமநாதபுரம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம் உட்பட்ட கிராமங்களுக்கு நள்ளிரவிற்குப் பின்னர் முகம்மூடிகள் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் சென்றநபர்கள் ஆயுத முனையில் வலுகட்டாயமாக வாக்குச் சீட்டுக்களை மக்களிடம் இருந்து பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.
இதனைவிடவும் கிளிநொச்சியின் பெருமளவான பின்தங்கிய கிராமங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.ஆயிரக்கணக்கான வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமையால் குறித்த தேர்தலை மீண்டும் நடத்தவேண்டும் என்று மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
வாக்காளர் அட்டைகளை கள்ள வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இராணுவம் பயன்படுத்தலாம் என்று நோக்கர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

22 ஜூலை 2011

கூட்டமைப்பு வேட்பாளர்களை கடத்தி,படம் பிடித்து பொய்ப்பிரச்சாரம் செய்கிறது அரசு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி வேட்பாளர்களைப் பணம் கொடுத்து வாங்க அரச தரப்பு முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேச வேட்பாளர் 4 பேரை பலவந்தமாக அழைத்துச் சென்ற, நாமல் ராஜபக்ஷ போட்டியில் இருந்து விலகுமாறும் அதற்காக லட்சம் லட்சமாக பணம் கொடுப்பதாகவும் அச்சுறுத்திள்ளார் எனவும் சிறீதரன் கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளுக்குத் தேர்தல் நடக்கிறது. பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் உதய சூரியன் சின்னத்திலும் கரைச்சி பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திலும் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.
இதில் கரைச்சி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களான மாரியப்பன், சுகந்தன், பொன்னையா இராமலிங்கம், இராமசாமி வடிவேல், சின்னையா சுப்பையா போன்றோரே பல வந்தமாக நாமலிடம் அழைத்துச்செல்லப்பட்டார்கள் என முறையிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தில் வேட்பாளர்கள் தமக்கு நடந்தவற்றை விளக்கினார்கள்.'திடீரென என்னிடம் வந்த நான்கைந்து பேர் என்னைப் பலவந்தமாக நாமலிடம் அழைத்துச் போனார்கள். அங்கு சென்றதும் இவர்கள் என்னைக் கடத்தி வந்திருக்கிறார்கள் என நாமலிடம் முறையிட்டேன். அவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள் என நாமால் கூறினார் என வேட்பாளர் சுப்பையா தெரிவித்தார்.
கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்குத் தனக்கு 5 லட்சம் ரூபா தருவதற்கு தயார் என நாமல் கூறினார் எனவும் அவர் தெரிவித்தார்.அரசுடன் சேர்ந்து கொண்டால் இன்னும் அதிக பணம் தருவதாக நாமல் வாக்குறுதியளித்ததாகவும் சுப்பையா குறிப்பிட்டார்.
வேட்பாளர்களை நாமலுடன் வைத்து ஒளிப் படங்கள் எடுதுள்ளார்கள். அவற்றை ஆதாரமாகக் காட்டி கூட்டமைப்பு வேட்பாளர்கள் அரசுடன் சேர விருப்பம் என்பது போன்ற பொய்ப் பிரசாரங்களில் அரச ஊடகங்கள் மூலம் ஈடுபடப்போகிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார்.

இலங்கைக்கு உதவிகள் வழங்கக்கூடாது.அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்.

இலங்கைக்கான உதவிகள் நிறுத்தப்பட வேண்டுமென அமெரிக் காங்கிரஸ் சபை கோரிக்கை விடுத்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் உதவிகளை வழங்கக் கூடாது என காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
மனிதாபிமான உதவிகளைத் தவிர்ந்த ஏனைய சகல உதவிகளும் நிறுத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் சபை வலியுறுத்தியுள்ளது. நிலக்கண்ணி வெடி அகற்றுதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பரக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் சபை சிரேஸ்ட உறுப்பினர் ஹோவார்ட் பெர்மன் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். இலங்கை நிலைமைகள் தொடர்பில் அவதானித்து அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னரே உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரம், அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுதல் ஆகியன தெடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2010ம் நிதியாண்டில் இலங்கைக்கான உதவிகளுக்காக 13 மில்லியன் அமெரிக்க டொலர் கோரப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், இலங்கைக்கு உதவிகள் நிறுத்தப்படும் தீர்மானம் உடனடியாக அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த யோசனைத் திட்டத்தை செனட் சபையும் அங்கீகாரம் செய்தால் மட்டுமே உதவிகளை நிறுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிங்களப்படைளுக்கு தமிழகத்தில் பயிற்சியாம்!

இலங்கையும்,இந்தியாவும் பிராந்திய நலன்,இராணுவ, வர்த்தக நலன்களில் இணக்கமான நாடுகளாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தினர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுப் பயிற்சியும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் குன்னூர் அருகே உள்ள இந்திய இராணுவ பயிர்ச்சி மையத்தில் இலங்கை இராணுவத்தினர் மூன்று நாள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இவ்வாறு பயிர்ச்சிக்கு வந்துள்ள இலங்கை இராணுவத்தினரை குன்னூர் வெலிங்டன் அருகே உள்ள தனியார் ஓட்டலில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளதாக கூறப்படுகிறது. என்ன நிகழ்ச்சி என்பது போன்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இவர்கள் தங்கியுள்ள ஓட்டலைச் சுற்றி, 20க்கும் மேற்பட்ட போலீசார் 'மப்டி'யில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் வருகை குறித்து செய்தி சேகரிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ஓட்டல் நிர்வாகம் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. குன்னூரில் உள்ள இராணுவ பயிற்சிக் கல்லூரியில் ஆசியாவில் பல நாடுகளைச் சார்ந்த இராணுவத்தினரும் பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம் என சொல்லப்படுகிறது.

நாமல் ராஜபக்சவால் விலைக்கு வாங்கப்பட்ட கூட்டமைப்பு வேட்பாளர்!

மஹிந்தராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவினால் விலைகொடுத்து வாங்கப்பட்ட கூட்டமைப்பு வேட்பாளரின் படத்தினையும் விபரத்தினையும் அரச ஊடகம் இன்று வெளியிட்டிருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் எம். சுப்பையா என்பவரே தம்முடன் இணைந்து கொண்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுப்பையாக்கு சில இலட்சம் ரூபாய்களே விலை பேசப்பட்டதாகவும் ஆனாலும் இதுவரையில் அவருக்கான பணம் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

21 ஜூலை 2011

ஈழத்தமிழர் பிரச்சனை தீர்வுக்கு புது யோசனைகளை தேடுவதாக கிலாரி தெரிவிப்பு.

சென்னை வந்துள்ள மெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு நாள்கள் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு அவர் சென்னை வந்தார். நேற்று மாலை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார்.
இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், இலங்கைத் தமிழர் பிரச்சினையிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு அமெரிக்கா புதிதான, ஆக்கபூர்வமான சில யோசனைகளை தேடுவதாக கூறியுள்ளார்.
முகாம்களிலுள்ள தமிழர்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்புவதற்கு வழி அமைக்கக்கூடிய வகையிலும் தமிழர் பிரச்சினையிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கும் அமெரிக்கா புதுவகையான யோசனைகளை தேடுவதாக ஜெயலலிதாவிடம் ஹிலாரி கிளின்டன் கூறினார்.
இலங்கையில் யுத்தம் முடிந்து இரு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த வீடுகளுக்குச் செல்ல முடியாமல் இன்னும் முகாம்களில் உள்ளதாக ஹிலாரியிடம் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பான கலந்துரையாடலின்போது, உள்ளூர் பிரஜைகைளுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் இலங்கை அகதிகளுக்கும் வழங்கப்படுவதாக ஜெயலலிதா தெரிவித்தார்.இவ்விருவரும் அரசியல், பொருளாதார விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக உத்தியோகபூர்வ செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றிக்கு ஹிலாரி கிளின்டன் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜெயலலிதாவுக்கு ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளார்.

வீட்டுக்கு வாக்களியுங்கள்! தமிழ் மண்ணைக் காப்பாற்றுங்கள்!-ஐ.எம்.இம்தியாஸ்!

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்து தங்கள் சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்பது நிச்சயம். முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இம்தியாஸ் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய ஒரு சில அரசியல்வாதிகள் அரசின் ஊதுகுழலாய் இருப்பதைப் பார்த்து முழு முஸ்லிம் சமுகத்தையும் முழுமையாக எடைபோட்டுவிட முடியாது. இஸ்லாம் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு எப்பொழுதுமே உதவி வந்துள்ளது; குரல் கொடுத்து வந்துள்ளது.
தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர் இன்றும் கிழக்கிலே வாழ்ந்தும், மறைந்தும் உள்ளார்கள்.
அநியாய ஆட்சிக்கு எதிராகத் துணிந்து சத்தியத்தைச் சொல்லி மரணித்த தியாகிகளும் உள்ளனர். தமிழ் மக்கள் நிம்மதியுடனும், சுய மரியாதை, கெளவரம், சுய உரிமையுடனும் வாழவேண்டும் என்பதே முஸ்லிம் மக்களின் ஏகோபித்த முடிவாகும்.
நல்லதை ஏவி, தீயதைத் தடுக்கும் பணியில் நாம் முழுமையாக உங்களுக்கு உதவத் தயாராக உள்ளோம். அப்பாவி மக்களைக் கொன்று குவித்தவன் முழுச் சமூகத்தையுமே அழித்தவனாகிறான். ஓர் அப்பாவியைக் காத்தவன் ஒரு நாட்டையும், சமூகத்தையும் காத்தவனாகிறான். உயிர்த் தியாகங்கள் செய்த அத்தனை நெஞ்சங்களின் சார்பில் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்தமான வேண்டுகோள். வீட்டுக்கு வாக்களியுங்கள்! தமிழ் மண்ணைக் காப்பாற்றுங்கள்!

தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளார் மகிந்த ராஜபக்ச.

தேர்தல் விதிமுறைகளை ஜனாதிபதியே அப்பட்டமாக மீறியுள்ளார். ஜனாதிபதியும் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆட்திரட்டல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் ஆணையாளரோ நலத்திட்டங்கள், வேலைத்திட்டங்கள், வேலைவாய்ப்புக்கள் நிதிஒதுக்கீடுகள் என்பவை தேர்தல் விதிமுறைகளை மீறுபவை என அறிவித்துள்ளார். ஆனால் அவை அனைத்தையும் ஜனாதிபதியே மீறியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி இவ்வாறான சிறிய தேர்தல் விதிமுறையை மீறுவது மக்களை அச்சமூட்டுவதாக இருக்கிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். இங்கு நீதியான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என கபே உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்பினரும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் கூறிவருகின்றனர். அதனையே நாமும் கூறிவருகின்றோம்.
வாக்காளர் அட்டைகள் ஒழுங்காக விநியோகிக்கப்படவில்லை, கிளிநொச்சியில் விநியோகிக்கப்பட்ட வாக்காளர் அட்டைகளை படையினர் வீடுவீடாகச் சென்று பெற்று வருகின்றனர். தீவகத்தில் உள்ள தபாலகத்தில் வாக்காளர் அட்டைகளை இனந்தெரியாதவர்கள் எடுத்துச் சென்றுள்ளார்கள்.அரச தரப்பினரும் அதன் அதிகாரிகளும் இராணுவத்தினரும் முறைகேடாக தேர்தலை நடாத்தி வெற்றியீட்ட முற்படுகின்றனர். தீவகப்பகுதிகளுக்கு அரசாங்கத்தின் பங்கு கட்சி தவிர்ந்த எவரும் பிரச்சாரத்திற்கு செல்லமுடியாது உள்ளது. மக்களை நாங்கள் நேரடியாக சந்திக்க சென்றால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
கடந்த காலங்களில் கூட்டமைப்பு மட்டுமன்றி முன்னாள் அமைச்சரான அமரர் மகேஸ்வரன் கூட தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் தீவக வாக்காளர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாட்டை பற்றி மாற்றுவழிகள் ஊடாக தெரியப்படுத்தியுள்ளோம். தீவகத்தில் எமது கட்சி வேட்பாளர்களினதும் வாக்காளர்களினதும் பாதுகாப்பு தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு தெரியப்படுத்தி கூடியளவு கண்காணிப்பாளர்களை நியமிக்குமாறும் கோரியுள்ளோம்.
ஜனாதிபதி மீதும் அரசினர் மீதும் ஐ.நா. போர்க்குற்றம் சுமத்தப்பட்டநிலையில் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேசம் பேசி வருகின்ற நிலையில் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடாது தமிழ்தேசியகூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு அரசியல் தீர்வை பெறுவதற்கு ஒரேயணியில் பொதுமக்கள் திரள வேண்டும் எனவும் கோருகின்றோம் என்றார்.

20 ஜூலை 2011

சிறீலங்காவை கலங்க வைக்கும் வகையில் மலேசியாவில் நடந்த மாபெரும் நிகழ்வு!

மலேசியாவில் ஈழத் தமிழர்களுக்காக நடைபெற்ற கூட்டத்தில் 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை ! கடந்த 16ம் திகதி மலேசியாவில் ஈழத் தமிழர்களுக்கு உதவும் அறக்கட்டளை அமைப்பு ஒன்று மலேசிய தமிழர் பேரவையோடு இணைந்து நன்கொடை திரட்டும் நிகழ்வு ஒன்றை நடாத்தியிருந்தது.
இந் நிகழ்வில் சுமார் 1 மில்லியன் மலேசிய ரிங்கிட்டுகள் பணம் நன்கொடையாகப் பெறப்பட்டதாகவும், அவை அனைத்தும் ஈழத்தில் பாதிப்படைந்த சிறுவர்களுக்காகச் செலவிடப்படும் என உலகத் தமிழர் பேரவையும்(GTF) மற்றும் மலேசிய தமிழர் பேரவையும்(TFM) இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந் நிகழ்வுகளில் பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அவர்கள் அதில் கலந்துகொள்ளமாட்டார்கள் என இலங்கை அரசு கருதி வந்தது. ஆனால் 16ம் திகதி இரவு நிலை தலைகீளாக மாறியது. பிரபல கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழ் எதிலிச் சிறுமிகள் முதலில் நாட்டிய நிகழ்வு ஒன்றை நடத்தினர்.
மலேசியாவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான, மற்றும் 20 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாண்புமிகு டாக்டர்.சாமி வேலு அவர்கள் இக் கூட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். தொழிலதிபர்கள், துறைசார் வல்லுனர்கள், புத்திஜீவிகள், ராஜதந்திரிகள், ஆளும் மற்றும் எதிர்கட்சி எம்.பீக்கள் என அந் நிகழ்வு ஏகோபித்த ஆதரவுடன் நடைபெற்றது.ஐரோப்பாவுக்கு வெளியே பிறிதொரு நாட்டில் ஈழத் தமிழர்களால் எதுவும் செய்துவிட முடியாது என இறுமாப்போடு இருந்த இலங்கை அரசுக்கு ஈழத் தமிழர்களின் பலம் இந் நிகழ்வூடாக மீண்டும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. மலேசியாவின் எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஈழத் தமிழர்களுக்காக ஒன்றுசேர்ந்து இந் நிகழ்வில் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
உலகத் தமிழர் பேரவை சார்பில் வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்சி ஆரம்பமாகி சிறிது நேரத்தில் அங்கே கலந்துகொண்டவர்கள் தமது நன்கொடைகளை வழங்கி இருந்தனர். இவை ஈழத்தில் அல்லலுறும் தமிழ் எதிலிச் சிறுமிகளுக்கு சென்றடையும் என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் திரு.சுரேன் சுரேந்திரன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

தம்மை பிணை எடுக்கவே யாழ்,மக்களிடம் அரசு மண்டியிட்டுள்ளது.

ஆடை அவிழ்ந்து நிர்வாணமாக உள்ள அரசாங்கம் இதனை மறைக்கவே யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்களிடம் வந்துள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். வலி. தெற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து சுன்னாகம் நகர் பகுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அங்கு தெரிவிக்கையில், யாழ். மக்கள் மீது அரசாங்கத்துக்கு திடீர் என பாசம் என்று நினைக்காதீர்கள். தன்னை பிணை எடுப்பதற்காக அழித்தவர்கள் காலில் மண்டியிட்டுள்ளனர். சர்வதேசமும் சனல் 4 தொலைக்காட்சியும் அரசாங்கத்தை துரத்திக் கொண்டிருக்கிறன. பயங்கரவாத்தை ஒழிப்பதாக கூறி இன அழிப்பைச் செய்துள்ள அரசாங்கம் சர்வதேசத்தின் போர்க் குற்றத்தை மறைப்பதற்காக இன்று தமிழ் மக்களின் காலடியில் வந்து இருக்கிறார்கள்.
கல்விமான்களான யாழ். மக்கள் விழிப்பாகச்செயற்படவேண்டும். இறுதிக் கட்ட போரினை சாட்சியங்கள் இல்லாமல் நடாத்தினோம் என கூறி உள் நாட்டில் முக்கியஸ்தர்களை கூப்பிட்டு செயலமர்வு நடத்தினார்கள். இறுதி யுத்தத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களை துரத்தினார்கள். ஊடகவியலாளர்களைத் துரத்தினார்கள். இறுதியில் என்ன நடந்தது. தனது படை வீரர்களின் கைத்தொலைபேசிப் பாவனையைத்தடைசெய்யாததன் காரணமாக யுத்த குற்றம் வெளியுலகிற்குச் சென்றது. அவை ஆவணமாக சர்வதேச நாடுகளில் வெளியிடப்படுகின்றன.
உள்ளூராட்சி தேர்தலை அறிவித்த அரசாங்கம் அதற்காக அமைச்சர் பட்டாளங்களை அனுப்பி தமிழ் மக்களின் காலைப் பிடிக்கின்றது. இந்த சூழலை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகின்ற பேõது அரசாங்கத்தின் போஸ்ரர்களும் கொடிகளும் காணப்படுகின்றன. இவற்றில் அதிகளவானது பனை, தென்னை மரங்களிலே காணப்படுகின்றன. ஏ 9 பாதை பகுதி ஒன்றில் கூட்டம் நடைபெற்றது. அதனை பார்வையிட்டபோது அங்கு அமைச்சர் ஒருவர் உரையாற்றுகிறார். அங்குள்ள மக்களை பார்த்தால் அவர்கள் கொழும்பில் இருந்து வந்த மக்கள் இந்த நிலைமையை யாரிடம் சொல்வது. சாட்சியம் இல்லாது போர் செய்த அரசு இன்று நிர்வாணமாக ஆடை அவிழ்ந்து நிற்கிறது. இதனை மறைக்க யாழ்ப்பாணத்தில் அமைச்சர் பட்டாளம் ஏற்கனவே திறக்கப்பட்ட வீதிகள் , திறக்கப்பட்ட பாடசாலைகளை மீளவும்திறந்து வைக்கிறது.
இது ஒரு சாதாரணமான ஓர் உள்ளூராட்சித் தேர்தல். இதில் ஒன்று இரண்டை கைப்பற்றி சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் தம்முடன் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கப்போராடுகிறார்கள். யாழ். மக்கள் இதனை உணர்ந்து கொள்ளவேண்டும். மீண்டும் தவறு விடக்கூடாது.
தற்போது யாழ்ப்பாணத்தைப் பார்க்கும்போது இலங்கையின் தலை நகர் போல் இருக்கிறது. காரணம் அமைச்சர்கள் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். இதனால் அமைச்சரவை இங்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி உட்பட அவரது சகோதரர் முதற்கொண்டு யாழ்ப்பாணத்தில் நிற்கிறார்கள். கடந்த காலங்களை போலன்று இந்த அரசு படுமோசமான பாதக செயலைச் செய்துவிட்டு தற்போது காலில் விழுந்துள்ளது.
இதனை கவனத்திற் கொண்டு சுதந்திர தீர்வைப் பெறுவதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அரசு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தைப்பயன்படுத்தி மாறித்தானும் வெற்றிலைச் சின்னத்திற்கு அடையாளம் இட வேண்டாம். அது அனைத்தையும் மாற்றிவிடும் வீட்டைத் தெரிவு செய்யுங்கள். அனைவரும் அதிகாலை சென்று வாக்களிக்க வேண்டும்.
தற்போது கொழும்பில் இருந்து வாக்களிப்பதற்கு ஆட்களைக் கொண்டு வந்து வாக்களிப்பு நிலையங்களில் பெட்டிகளை மாற்றும் திட்டமும் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது என்றார்.

19 ஜூலை 2011

யாழ்ப்பாண நாய்களுக்கும் தமிழுணர்வுண்டு,அவை சிங்களம் போடும் எலும்புகளை கெளவுவதில்லை.

நாய் நன்றி உள்ள மிருகம் அதிலும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நாய்கள் தமிழ் உணர்வு மிக்கவை. காரணம் அரசாங்கம் அதன் அமைச்சர்களும் போடுகின்ற எலும்புத் துண்டுகளைக் கூட கௌவிச் செல்வதில்லை. இதன் காரணமாக இன்று நாய்களின் தலைகளை வெட்டி இனவெறியை காண்பிக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் நாய்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேலும் பேசுகையில், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீட்டு வாசல்களில் சிலர் மலர்வளையம் சாத்திவிட்டும் கழிவு நீரை ஊற்றிவிட்டும் செல்கின்றனர். இத்தகை யோருக்கு நாம் கூறுவது இதுதான், இன்று தமிழினம் ஒன்றுபட்ட சக்தியாக விழிப்படைந்து விட்டது. சோரம் போகும் இனமல்ல மானமுள்ள மறவர் குலம். எதிர்வரும் 23ஆம் திகதி எமது வேட்பாளர்களின் முற்றத்தில் சாத்தப்பட்ட மலர் வளையங்கள் வரலாறு காணாத வெற்றியினைப் பெறும்.
எமது வேட்பாளர்களின் கழுத்தில் நறுமண மலர்களாக விழவுள்ளன. கழிவு நீர்களின் துர்நாற்றம் அகன்று பன்னீர் வாசம் பரவவுள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுமன்றி சர்வ தேச நாடுகளிலும் தமிழினம் உணர்வுடன் தயாரித்துள்ள பன்னீர்வாசம் பரவவுள்ளது. அபிவிருத்தி அபிவிருத்தி என்று வடக்குக்கும் கிழக்குக்கும் படையெடுக்கும் அமைச்சர்களும் அவர்களின் எடுபிடிகளாக உள்ளவர்களும் கடந்த பன்னிரெண்டு வருட காலமாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர், யுவதிகளை விடுதலை செய்து விட்டு அபிவிருத்தி பற்றி பேசட்டும் பார்க்கலாம்.
வடக்கு கிழக்கில் வகை தொகையின்றி இடம்பெற்ற கைதுகள், ஆட்கடத்தல்கள், படுகொலைகள் என்பன பற்றி இந்த அபிவிருத்தி அரசியலாளர்கள் மௌனமாக இருப்பது ஏன்? அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகளை சிறையில் அடைத்து வைத்திருப்பது சிறைக்கூடங்களை அழகுபார்க்கும் அபிவிருத்தியா?
வடக்கில் ஒரு கதையும் கிழக்கில் ஒரு கதையும் தெற்கில் ஒரு கதையும் என ஒரே நாவால் பேசும் அரசியல் எமக்குத் தெரியாது. அன்று தொட்டு இன்றுவரை எல்லா இடங்களிலும் நாம் ஒரே பேச்சுத் தான் பேசுகின்றோம். நாம் இடத்திற்கிடம் மாறுபட்ட விதத்தில் பேசி அரசியல் நடத்தும் வங்கு ரோத்துக்காரர்கள் அல்ல.
தமிழினத்தின் வாக்கு வங்கியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது.இந்த வங்கியை சூறையாட முனையும் கூட்டத்திற்கு சுட்டெரிக்கும் சூரியன் போன்று சூட்டுக்கோல் வைக்க தமிழினம் தயார் நிலையில் விழிப்புடன் உள்ளது யூலை 23 ஆம் திகதி.
தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் அன்றைய ஆட்சியாளர்கள் வழங்கிய நிவாரணங்களை யெல்லாம் பெற்ற கையோடு எதுவுமே கொடுக்காமல் இலங்கைத் தமிழர்களுக்காக பரிந்து பேசியதற்காக ஜெயலலிதாவை முதலமைச்சராக்கிய வரலாற்றை மறந்து போல் நேரடியாக வெந்து போயுள்ள மக்களுக்கு நிவாரணங்களை காட்டி வாக்கு கேட்க முனைவது வேடிக்கையாக உள்ளது. அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் சுயலாபங்களுக்காகவும் அரசியல் செய்பவர்களை துரோகிகள் என்று பொதுப் பெயர் சூடி அழைக்கும் இனம் தமிழினம்.
கடந்த 62 வருட காலமாக அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிய தமிழினத்திற்கு கௌரவமான அரசியல் உரிமை வழங்கப்படாது போனால் மீண்டும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களை அணிதிரட்டி போராடவுள்ளதாக சம்பந்தன் ஐயா பாராளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார். அவ்வாறான போராட்டம் மக்கள் சக்தியுடன் இலங்கையில் மட்டும் இடம் பெறாது தமிழினம் புலம்பெயர்ந்து வாழும் நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளிலும் ஒரே நேரத்தில் இடம்பெறும்.
இது சர்வதேச மயமான போராட்டமாக வெடிக்கும். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் கௌரவமான அரசியல் தீர்வை எமக்கு அளிக்க வேண்டும். இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் அழுத்தம் காரணமாக நாம் இதுவரை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு விடயம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருப்பினும் நாம் பொறுமை காப்பதன் நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்வர். பதின்மூன்றாவது அரசியலமைப்பு காலாவதியாகி விட்டதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த கூறுகின்றார். அப்படியாயின் பதின் மூன்றாவது அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளை கலைத்துவிட்டு அவற்றின் முதலமைச்சர்களை வீட்டுக்கு அனுப்ப அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு முடியுமா?
வாய்க்கு வந்தபடி பேசுகின்றவர்களுக்கு எமது தமிழ் மக்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி சரியான பதிலை அளிக்கவுள்ளனர். அப்போது உண்மை புலனாகும் உலகறியும் தமிழினத்தின் தன்மான உணர்வை என்றார்.

யாழ்,பிரதேச செயலர் ஒருவரை செருப்பால் அடிப்பேன் என மிரட்டிய முஸ்லீம் அமைச்சர்.

குடாநாட்டிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர்களால் என்றுமில்லாதவாறு அரச அதிகாரிகள் நெருக்குவாரங்களையும் அவலங்களையும் சந்திப்பதாக குற்றச்சாட்டுக்களும் சீற்றங்களும் எழத்தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு தனது தனிப்பட்ட விஜயம் தொடர்பாக சென்றிருந்த முஸ்லீம் அமைச்சர் ஒருவர் பிரதேச செயலாளர் ஒருவரை செருப்பால் அடிப்பேன் எனக் எச்சரித்தாக அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தனது குடும்ப அங்கத்தவரை பார்வையிடுவதற்காக மன்னாரில் அண்மையில் சர்ச்சைகளை ஏற்படுத்திய குறித்த அமைச்சர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த உறவினர்களுடன் பள்ளி வாசலுக்கும் அவர் சென்றிருந்தார். அவ்வேளையில் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியமர்ந்த முஸ்லீம் மக்களுக்கான உதவிகள் உரிய வகையில் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து உடனடியாக தொலைபேசியூடாக அரச அதிபரைத் தொடர்புகொண்டபோது அரச அதிபர் இந்த விடயங்களுக்கு தான் பொறுப்பல்ல எனவும் யாழ்ப்பாண பிரதேச செயலரே இதற்குப் பொறுப்பெனக் கூறி காய் வெட்டியுள்ளார்.
உடனே யாழ் பிரதேச செயலருக்கு தொலைபேசியூடாக அழைப்பை எடுத்த அமைச்சர் தாறுமாறாகப் பேசத்தொடங்கியுள்ளார். ஒரு பெண் என்று கூடப் பாராது செருப்பால் எடுத்து அடிப்பேன் எனவும் அரசிடம் இருந்து கிடைக்கும் சலுகைத் திட்டங்களை நீங்கள் முடக்கி வைத்திருப்பதாகவும் வீடுகளுக்குக் கொண்டு செல்வதாகவும் கூட அமைச்சர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
அண்மைக் காலமாக பிரச்சார நடவடிக்கைக்கு என யாழ்ப்பாணத்திற்கு பெருமளவு அமைச்சர்கள் படையெடுத்து செல்லுகின்ற நிலையில் அரச அதிகாரிகள்பாடு திண்டாட்டமாக இருக்கின்றது. அரச அதிகாரிகள் தாங்கள் சாதாரண கூலித் தொழிலாளிகள் போன்று அமைச்சர்களால் நடத்தப்படுவதாக அச்சஞ்கொள்கின்றனர். பெரும்பாலான அரச உயர்மட்ட அதிகாரிகள் தமது பதவி இருப்பிற்றகாக இடைநிலை அதிகாரிகளை பலிக்கடா ஆக்குவதாக அவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக அரச சாதனைகள் தொடர்பான விளம்பரங்களை உள்ளுர் நாளிதழ்களில் பிரசுரிக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோப்பாய் பிரதேச செயலராகவும் ஏற்கனவே யாழ் செயலகத்தில் திட்டப் பணிப்பாளராகவும் இருந்த பிரதீபனை அடிப்பதற்கு கையோங்கிய சர்ச்சைகளும் உள்ளன. இந்நிலையில் அரச அமைச்சர்களின் உச்சகட்ட கெடுபிடிகளால் யாழ்ப்பாண அரச அதிகாரிகளும் திண்டாடிப்போயுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு சிறிலங்கா பொலிசார் கெடுபிடி.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் சுன்னாகத்தில் நடைபெற்ற போது காவல்துறையினர் பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி பாவிப்பதற்கும் தடை விதித்தனர். வழங்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக கூறி ஒரு 5நிமிட அவகாசம் கூட வழங்காது ஒலிவாங்கியை நிறுத்தியுள்ளனர்.
ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்காது ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதி வழங்கும் காவல்துறையினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியமான பேச்சாளர்கள் பேசும் போது ஒலிவாங்கியை நிறுத்தி விடுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திங்கட்கிழமை மாலை சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவிலை அண்மித்த பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போதே காவல்துறையினர் இந்த கெடுபிடியினை மேற்கொண்டனர். வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான பிரச்சாரக் கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் செயலாளர் பா.கஜதீபன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், விநோதராதலிங்கம், ஈ.சரவணபவன், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, ஜனநாயகமக்கள் முன்னணியின் தலைவர் மணோகனேசன், ரெலோவின் உப தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, ஆகியோருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், யாழ் மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வவுனியா மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மாலை 5.30க்கு ஆரம்பமாகி இரவு 10.15 மணிவரை இக்கூட்டம் இடம்பெற்றது. இதற்கென சுன்னாகம் காவல்துறையினரிடம் உரிய அனுமதிகள் பெற்றிருந்தபோதும் சுன்னாகம் நகர்ப் பகுதியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியை உடன் அகற்றுமாறு கூறி அகற்றி வைத்ததுடன் 10 மணி தாண்டி 5 நிமிடங்கள் ஆகுவதற்கிடையில் கூட்டம் நடைபெற்ற மேடைக்கு வந்த காவல்துறையினர் ஒலிபெருக்கியை நிறுத்த உத்தரவிட்டதுடன் மேடைக்கு அருகில் இருந்த ஒலிபெருக்கிப் பெட்டியையும் நிறுத்துமாறு உத்தரவிட்டனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உரையாற்றி முடிந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி உரையாற்றிக்கொண்டிருந்தார். எனினும் ஒலி பெருக்கி நிறுத்தப்பட்ட பின்னரும் 5 நிமிடங்கள் தனது உரையை தொடர்ந்த பின்பே நிறுத்தினார். நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மக்கள் அனைவரது உரையும் முடிந்த பின்னரே கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

18 ஜூலை 2011

ஒட்டுக்குழு வேட்பாளரை நையப்புடைத்த வல்வெட்டித்துறை மக்கள்.

டக்ளஸ் தேவானந்தா, மகிந்த ராசபக்ச ஆகியோரின் படங்கள் பிரசுரிக்கப்பட்ட தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த வல்வெட்டித்துறை நகரசபைக்கு போட்டியிடும் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி வேட்பாளர் வைரமுத்து பரமானந்தராசா என்பவர் அப்பிரதேச பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்டார்.
மிகப்பெரிய கொலைகளையும் பேரிழிவுகளையும் தமிழ் மக்கள் மீது புரிந்த மகிந்த ராசபக்சவின் படம் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தை விநியோகிக்க வேண்டாம் என பொதுமக்கள் அறிவுரை கூறிய போதிலும் அதை மதிக்காது செயற்பட்டதனாலேயே பிரஸ்தாப வேட்பாளருக்கு இக்கதி ஏற்பட்டது.
இச்சம்பவம் நேற்று மாலை வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. தமிழினத்திற்கு தலைமை தாங்கிய தலைவன் பிறந்த மண்ணில் உம்மைப்போன்ற துரோகிகளுக்கு இடம் இல்லை என்றும், துரோகம் செய்ய நினைப்பவர்களுக்கு இதுதான் பரிசாக கிடைக்கும் என்றும் வல்வெட்டித்துறை பொதுமக்கள் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி வேட்பாளர் பரமானந்தராசாவுக்கு எச்சரித்துள்ளனர்.
இதேபோன்று பருத்தித்துறை நகரசபைக்கு ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் முருகுப்பிள்ளையின் மகன் சிறிபதி முச்சக்கரவண்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவர் மீது பருத்தித்துறை இளைஞர்கள் சிலர் சேற்று நீரை வீசியதுடன் துரோகிக்கு இங்கு இடமில்லை என துரத்தியதாகவும் பருத்தித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் வலிகாமம் மற்றும் தீவுப்பகுதிகளில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி மற்றும் மகிந்த தரப்பின் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு பின்னால் செல்லும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதாகவும் யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பகுதிகளான வடமராட்சி மக்களுக்கு இருக்கும் தன்மானம், ரோசம், ஏன் யாழ். நகர் மற்றும் வலிகாமம் தீவுப்பகுதி மக்களிடம் இல்லாமல் போனது என யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வருடன் கிலாரி பேசக்கூடும்?

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் இலங்கை தொடர்பாக பேசப்படலாம் என அமெரிக்க தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார துணைச்செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
எனினும் ஹிலாரி கிளின்டன் தனது விஜயத்தின் போது, இலங்கை தொடர்பாக பேச மாட்டார் என இந்திய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கை நிலைமைகுறித்து கூடிய அக்கறை செலுத்தியுள்ளதாகவும் அது கிளின்டன் மற்றும் ஜெயலலிதா சந்திப்பில் கட்டாயமான ஒரு அங்கமாக இருக்கும் எனவும் பிளேக் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
கிளின்டன், தனது இந்திய விஜயத்தின் போது, பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.

அமைச்சர் டக்ளஸை தமிழன் என்றல்ல மனிதன் எனக் கூறுவதே வெட்கக்கேடு.

வன்னியில் நடந்த கடைசிக் கட்டப் போரில் ஒன்றும் நடக்கவில்லை, ஒரு வரும் கொல்லப்படவில்லை என்று வாய் கூசாமல் பொய் கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவரைத் தமிழன் என்று கூறவே வெட்கப்படவேண்டும்.தமிழன் என்று மட்டுமல்ல, மனிதன் என்று கூறுவதற்கே வெட்கப்படவேண்டும் என்று தெரிவித்தார் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன்.
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
தென்னிலங்கையில் அரசுக்கு வாக்களித்த மக்கள் அங்கு ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் காணவில்லை என்று தேடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் எல்லோரும் இங்கே முகாமிட்டுள்ளார்கள். மக்கள் மீது அக்கறை கொண்டு ஜனாதிபதியோ அமைச்சர்களோ இங்கு வரவில்லை. போர்க்குற்ற விசாரணை, சனல்4 தொலைக்காட்சி போன்றவை நிரூபிக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று சர்வதேசத்துக்குக் காட்டுவதற்காகவே அவரகள் இங்கு வந்துள்ளார்.
வேட்டிக்கும் சேலைக்கும் சில அற்பசொற்ப சலுகைகளுக்கும் சோடைபோபவர்கள் அல்லர் எமது மக்கள். அவர்கள் மானம் உள்ளவர்கள். இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். 1983ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களைவிட்டு சிங்களக் காடையர்களால் விரட்டப்பட்டு, வன்னியில் வாழும் இந்திய வம்சாவளி மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும்.
வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அமைச்சர்களை நம்ப வேண்டாம். அவர்கள் தமிழ் மக்களை ஆதரிக்கவல்ல, அழிக்கவே வந்துள்ளார்கள். தமிழ் மக்கள் தாம் கோழைகள் அல்லர் என்பதை இந்தத் தேர்தலில் நிரூபிப்பார்கள்'' என அவர் மேலும் தெரிவித்தார்.



17 ஜூலை 2011

வட மாகாண முதலமைச்சராக டக்ளஸ் தேவானந்தா.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்மட்டத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில மாதங்களில் வட மாகாண தேர்தல் நடைபெறவுள்ளது.
வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட பல விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும் நீண்டகாலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த பொறுப்பு வய்ந்த தரப்பினர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பொதுக்கூட்டம்.

எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனநாயகமக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இன்று கிளிநொச்சி வருகின்றனர்.
இன்று மாலை 4 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பணிமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இவர்கள் உரையாற்றுவர். கூட்டமைப்பின் கிழக்குமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், இராசெல்வராசா, கீ.லோகேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரும் உரையாற்றுவர்.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோதராதலிங்கம் ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகி யோரும் உரையாற்றுவர்.

குடும்பத்தில் குழப்பம்!வீட்டை விட்டு வெளியேறினார் கருணாநிதி.

02 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம், தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி என்பனவற்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்ப உறுப்பினர்கள்மத்தியில் பிளவு ஏற்பட்டிருப்பதுடன், தி.மு.க.வை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் நிர்வகிப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் கருணாநிதி தனது வழிமுறையை மாற்றிக் கொள்ளவேண்டிய அழுத்தங்கள் தீவிரமாக அதிகரித்து வருகின்றன.
இந்த வார இறுதியில் கருணாநிதியின் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டிருந்த கடுமையான முரண்பாடுகளையடுத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடற்கரையோரமிருந்த வீடு ஒன்றிக்கு சடுதியாக புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க.வின் அடுத்த தலைவர் என கருத்தப்பட்ட முன்னாள் துணை முதல்வர் எம்.கே.ஸ்டாலினுக்கும் தகப்பனாருக்கும் இடையே கடுமையாக தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்தே கருணாநிதி வெளியேறிச் சென்றதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.
ஆலோசகர்கள், உதவியாளர்கள் என்று பெரும் பரிவாரத்துடன் கருணாநிதி பயணம் மேற்கொள்வது வழமையாகும். ஆனால், தனது தனிப்பட்ட செயலாளர் கே.சண்முகநாதனுடன் அன்றைய தினம் கருணாநிதி மகாபரிபுரத்துக்குச் சென்றுள்ளார். 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கடற்கரை வீட்டுக்கு அவர் சென்றதையிட்டு பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கருணாநிதியின் மற்றொரு மகனும் மத்திய அமைச்சருமான அழகிரி, இளைய மகளான கனிமொழி தொடர்பாக தந்தையுடன் ஸ்டாலின் அரைமணிநேரம் வாக்குவாதப்பட்டதாகவும் அதனையடுத்தே கருணாநிதி வெளியேறியதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன. கட்சி அரசியலில் அழகிரியின் பங்களிப்பு 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் சம்பந்தம் என்பன தொடர்பாகவே ஸ்டாலின் வாக்குவாதப்பட்டதாகக் கூறப்படுகிறது. நகரத்திலுள்ள தி.மு.க.தலைமையகமான அறிவாலயத்தை விட்டு அவர் வெளியேறியுள்ளார். கோயம்புத்தூரில் ஜூலை 23 இல் தி.மு.க.வின் பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த முரண்பாடுகள் தி.மு.க.வின் முதல் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 87 வயதுடையவரும் சக்கர நாற்காலியில் சென்று வருபவரான கருணாநிதி அன்றையதினம் மாலை சென்னைக்கு திரும்பிவிட்டார்.
தி.மு.க.பெண்கள் அணியில் உறுப்பினர்கள் தெரிவித்திருந்த முறைப்பாடு குறித்து கலந்துரையாட கட்சித் தலைமையகத்துக்கு ஸ்டாலினை கருணாநிதி அழைத்திருந்தார். கடந்த ஒரு வாரமாக தனது தந்தையை ஸ்டாலின் சந்திக்காமல் விலகியிருந்ததாக வட்டாரங்கள் கூறின. தி.மு.க.வை மறுசீரமைத்தல் மற்றும் தலைமைப்பதவிக்கு தன்னை நியமித்தல் போன்ற விடயங்களில் தந்தை மறுத்துவருவதையிட்டு ஸ்டாலின் கவலையடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தி.மு.க. பெண்கள் அணியினர் கடந்த வியாழக்கிழமை கருணாநிதியிடம் ஸ்டாலின் தொடர்பாக முறைப்பாடு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக விளக்கம் கேட்க ஸ்டாலினை கருணாநிதி அழைத்திருந்தார். தனது சகோதரி கனிமொழியுடன் பெண்கள் அணியினர் நெருக்கமாக இருப்பதாக ஸ்டாலின் குற்றச்சாட்டுத் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் அழகிரி மோதலை உருவாக்க முயற்சிப்பதாக ஸ்டாலின் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தி.மு.க.வின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
தனது மகளை கருணாநிதி நியாயப்படுத்தியுள்ளார். அதேசமயம் தனது நிலைப்பாட்டை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதனால் இருவரும் விசனத்துடன் கட்சித் தலைமையகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் கருணாநிதியின் கோபாலபுர வாசஸ்தலத்தில் அவரின் மூத்த மகளான செல்வி, அழகிரி மீது குற்றம்சாட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்த அழகிரி முயற்சிப்பதாக செல்வி குற்றம்சாட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த காலத்தில் தனது தகப்பனுக்கு எதிராக ஸ்டாலின் ஒருபோதும் கதைப்பதில்லை. ஆனால் இந்தத் தடவை அவர் உறுதியாக நின்றதுடன் அடுத்த தலைமைப்பதவி யாருக்கு என்பதை தனது தந்தை விரைவில் தீர்மானிக்க வேண்டுமென்று கூறியதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
வாரிசு போட்டி விவகாரம் குடும்பத்தின் இயக்கவியலில் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தமை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருக்க முடியாத தன்மை என்பன கட்சிக்குள் முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்துள்ளது. கட்சி விவகாரங்களில் பல்வேறு பிரிவினர் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு அவரின் அணியினர் கருணாநிதியை வலியுறுத்துவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை, கருணாநிதியே தொடர்ந்தும் தலைமைப்பதவியிலிருக்க வேண்டுமென்பதில் அழகிரியின் ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். கட்சியை தற்போதைய தருணத்தில் மறுசீரமைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறுகின்றனர்.
தி.மு.க.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் முக்கிய பதவிகளை பெற்றுக் கொள்ள ஸ்டாலின் முகாம் உபாயத்தை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. கட்சி விவகாரங்களில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருப்பது தொடர்பான விவகாரம் பற்றி பொதுச் சபைக் கூட்டத்தில் எழுப்பப்படவுள்ளதாக அறியவருகின்றது. இந்த விடயம் குறித்து தகப்பனாரிடம் அழகிரி கதைத்ததாகவும் அத்துடன் 2 முக்கியமான மாவட்டங்களின் செயலாளர்களை இராஜிநாமாச் செய்யக் கோரியதாகவும் இந்த விடயம் கருணாநிதிக்கு கவலையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தலைமை வாரிசு போட்டியால் குடும்ப உறுப்பினர்கள் பிளவு பட்டிருக்கும் நிலையில் இந்த விடயம் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தி.மு.க.வின் பொதுச் சபைக் கூட்டம் சூடானதாக இருப்பதை பார்க்கக் கூடியதாக இருக்கும்.

16 ஜூலை 2011

சர்வதேச விசாரணை அவசியமென அமெரிக்கா தெரிவிப்பு.

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செனல்4 ஆவணப்படம் தொடர்பான காட்சிகள் நேற்று அமெரிக்காவில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஜேம்ஸ் மெக்கோவன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
மனித உரிமை மீறல்களுக்கான சிறந்த உதாரணமாக இந்த காட்சிகள் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத் தரப்பினராக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினராக இருந்தாலும் தராதரம் பாராது தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
செனல்4 ஆவணப்படத்தை அமெரிக்காவில் ஒளிபரப்புச் செய்வதற்கு சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட சில தொண்டு நிறுவனங்கள் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தன.

போலிப்பரப்புரைகளுக்கு தமிழ் மக்கள் ஏமாந்து விடமாட்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கும். பல வருடங்களாகத் திறக்கப்படாமலிருந்த வீதிகளைத் திறப்பதனாலோ, ஆசை வார்த்தைகளுக்காகவோ,அற்ப சொற்ப சலுகைகளுக்காகவோ ஏமாந்து தமிழ்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். இந்தத் தேர்தலிலும் கூட்டமைப்பு பெரு வெற்றி அடையும் என்பது நிச்சயம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று தெரிவித்தார்.
போலியான பிரசாரங்களுக்குத் தமிழ்மக்கள் ஏமாறமாட்டார்கள். சலுகைகளுக்கும், அற்ப சொற்ப விடயங்களுக்கும் ஆசைப்பட்டு தமிழர்கள் வாக்குகளை விற்கமாட்டார்கள். யுத்தத்துக்குப் பின்னர் இடம்பெற்ற உள்ளூராட்சி, நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் யாருக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதோ, அவர்களுக்கே தமிழ்மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் என்ற திடமான நம்பிக்கை தமிழ் மக்களின் உள்ளங்களில் உள்ளது. எனவே, அதை வலுப்படுத்தவே அவர்கள் முனைவார்கள்.
அமைச்சர்கள் முகாமிட்டு, தமிழ்மக்களிடம் இல்லாத ஆதரவை, உள்ளது எனக் கூறி பல கோடி ரூபா செலவு செய்தாலும் அல்லது பல வருடங்களாகத் திறக்கப்படாமல் இருந்த வீதிகளைத் திறந்தாலும் தமிழ்மக்கள் ஏமாறமாட்டார்கள்.
எனவே, கூட்டமைப்பின் வெற்றிப் பாதையில் அரசு தடைகளை ஏற்படுத்தினால், இந்தத் தேர்தலை ஆரோக்கியமான ஒரு தேர்தல் எனக் கருத முடியாது போகும் இப்படி அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வருக்கு ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சராக தமிழகத்திற்கு முதன் முறையாக ஹிலாரி கிளின்டன் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஹிலாரிக்கு எதனைக் கூற வேண்டும் என்பது தொடர்பாக ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளது.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு இரு தலைவர்களும் அங்கீகாரம் வழங்க வேண்டுமெனவும் அமெரிக்கத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்திருப்பதாக பி.ஆர். இணையத்தளம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் முதற்தடவையாக காலடி எடுத்துவைக்கவுள்ளார். இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்த வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்புப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமாவுக்கான தமிழர்களாகிய நாங்கள் எப்போதுமே உங்களை நேசித்து வருகின்றோம். வட,கிழக்கு இலங்கை தொடர்பான விடயங்களை நீங்கள் ஹிலாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

15 ஜூலை 2011

தமிழ் பக்தர்களை தாக்கிய சிங்களக்காடையர்கள்!

கதிர்காம முருகன் ஆலய உற்சவ விழாவிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பக்தர்களின் பேரூந்து சிங்களக்காடையர்களினால் தாக்குதலிற்கு உள்ளாகியது.வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து சியாம்பலாண்டுவ பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை இரவு கல் வீச்சுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் பயணம் செய்த தமிழ் பக்தர்கள் பலர் காயமுற்றதுடன் பேரூந்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் நிலை குறித்து அல்ஜசீராவில் நடைபெற்ற விவாதம்.

சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்து இரு வருடங்கள் சென்ற நிலையில் இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களின் தற்போதைய நிலைவரம் குறித்து அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஆய்வரங்கம் ஒன்று ஒளிபரப்பியுள்ளது.
The Stream என்ற இந்த ஆய்வரங்கத்தில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி ஆகியன தொடா்பில் சர்வதேச சமூகத்துக்கு வழங்கி இருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசு நிறைவேற்றுகின்றதா? என்பது குறித்துவிவாதிக்கப்பட்டது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றி என்பது தமிழ் தேசியத்தின் பலமாகும். இதனை உணர்ந்து தாயகத்திலும் புலத்திலும் உள்ள உறவுகள் செயற்பட வேண்டும் என பிரான்ஸ் தமிழர் நடுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இருபத்துமூன்றாம் திகதி, வடக்கில் இடம்பெற இருக்கின்ற உள்ளுராட்சித் தேர்தலை, சிறீலங்கா அரசு அதிமுக்கியமாகக் கருதி, அதை வெற்றிகொள்ளும் வெறியுடன் முழுவீச்சில்தனது செயற்பாடுகளில் இறங்கியுள்ளது.
இத்தேர்தலில் கணிசமான வெற்றியைச் சம்பாதித்துக்கொள்வதின் ஊடாக பல விடயங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என, ராஜபக்ச அரசு கருதிச் செயற்படுகின்றது. கடந்த காலங்களில் அதிகம் கவனிக்கப்படாத உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்ள, இம்முறை சிறீலங்கா அரசின் அமைச்சுப்பரிவாரங்கள் வடக்கு நோக்கி படையெடுத்துள்ளன. சிறீலங்கா சனாதிபதி ராஜபக்சவும் வடக்கு சென்று ஐந்து நாட்கள் தங்கிநின்று, தமிழர்களை கபடத்தனமாக வெற்றிகொள்ளும் செயற்பாடுகளை முடுக்கிவிடவுள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்கள், அடிக்கல்நாட்டு விழாக்கள், நிவாரணங்கள், காசோலை வழங்கல், அன்பளிப்புக்கள், சலுகைகள், ஆசைவார்த்தைகள், உறுதிமொழிகள் என வடக்கே மக்களின் வாக்குகளைக் குறிவைத்து, வலைவீச்சுக்களும், பொறிவைப்புக்களும் இடம்பெறுகின்றன. கோடிகள் கோடிகளாக பணம் இறைக்கப்படுகின்றது.
அதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், அடாவடித்தனங்கள், தடைகள், தொடர்ச்சியான வன்முறைகள் என்பன கட்டவிழ்த்துவிடப்பட்டு, சனநாயகத்தை முற்றாக குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஒரு பயங்கரமான சூழல் ஒன்றைத் தோற்றுவித்துள்ளது ராஜபக்ஸ்ச அரசு.
கடந்த பொதுத்தேர்தலின்போது, தமிழ்மக்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும் நோக்கில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு, கூட்டமைப்பிற்கு எதிராக, ஆயிரக்கணக்கான தமிழ் வேட்பாளர்களை சுயேட்சைகளாகக் களம் இறக்கியது. இதில் தோல்விகண்ட சிங்கள அரசு, தற்போது, புதிய வழியை பரீட்சித்துப்பாக்க முனைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது என்பதிலும் பார்க்க, கூட்டமைப்பின் செல்வாக்கை தோல்வியுறச் செய்து, தமிழர்களின் திரள்வைச் சிதறடித்து, தமிழ்த் தேசியம் என்ற கருத்தைச் தோற்கடிப்பதே சிங்கள அரசினதும், அதன் அடிவருடிகளினதும் பிரதான நோக்கமாகும்.
தமிழ்த் தேசியத் தளத்தைப் பாதுகாத்து, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, இராஜீகத் தளங்களிலும், பேச்சுவார்த்தைத் தளங்களிலும் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவது, தமிழ்தேசியக்கூட்டமைப்பு மட்டும் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் அல்ல, எனக்கூறிவரும் அரசிற்கு முக்கிய தேவையாகப்படுகின்றது.
இலங்கைத்தீவு ஒரே நாடு, நாம் எல்லோரும் ஒரே மக்கள்’ எனக் கூறிவரும் சிறீலங்கா சனாதிபதி ராஜபக்சவிற்கு, தமிழ்த் தேசியத்தின் சிதைவு முக்கிய தேவையாகப்படுகின்றது.அரசஅடிவருடிகளைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கச் செய்வதின் ஊடாக தான் எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுவிடலாம் என ராஜபக்ஸ்ச அரசு கருதுகின்றது.
அனைத்துலக அரங்கில் தான் எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடிகள், மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் போன்ற விடயத்தில், தனது இந்த திட்டம் தனக்கு உதவும் என, ராஜபக்ஸ்ச அரசு கருதுகின்றது.
தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, தமிழ்மக்களைப் பலவந்தமாகப் பிடித்து, ஐ.நா.அறிக்கைக்கு எதிராக ஊர்வலங்கள் நடத்தவும், கையொப்பம் சேகரிக்கவும் முனைந்துள்ள ராஜபக்ஸ்ச அரசு, தனது விசுவாசிகளை, அடிவருடிகளை தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக்குவதன் ஊடாக பல நன்மைகளை, சாதகமான நிலைமைகளை அனைத்துலக அரங்கில் பெறலாம் எனக் கணக்குப்போட்டுள்ளது.
நெஞ்சை உறையவைக்கும் உயிர்த்தியாகங்கள், அற்பணிப்புக்கள், மாவீரச் செல்வங்களின் தற்கொடைகள், வீரம்செறிந்த போராட்டம் என்பனவற்றிற்கூடாகக் கட்டிவளர்க்கப்பட்ட எமது தேசியவிடுதலைப் போராட்டம் இன்று அடுத்த கட்டத்தில் நிற்கின்றது. தமிழ் மக்களிற்குச் சாதகமான அறிகுறிகள், பொறிகளாகத் தெரிகின்றன.
இந்தக் காலம் எமக்கு அதிமுக்கிய காலமாக உள்ளது. தாயகத்து மக்களும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டிய காலம் இது. சிங்களத்தின் நயவஞ்சகத் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதனை முறியடித்து, தமிழ்த்தேசியத் தளத்தைப் பாதுகாத்து, எமது விடுதலைக்கான பாதையைப் பலப்படுத்த, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றி, தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தின் அதிமுக்கியமான தேவை என்பதை உணர்வோம். தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கும் இதனை உணரவைப்போம்.
இதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் உரிமையுடனான எங்களது, எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் முன்வைப்போம். தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலில், விடுதலைக்காகப் போராடிவரும் ஒரு இனத்தின், அரசியல் தளத்தில் நின்று செயற்படுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், சாதாரண அரசியல்வாதிகள் என்ற நிலையில் அன்றி, அரசியல் போராளிகள் என்ற தளத்தில் நின்று செயற்படுவீர்கள் என்பதே எங்களது எதிர்பார்ப்பும், நம்பிக்கையுமாகும்.
பிரபாகரன் என்ற பேரொளியின் மெய்யுணர்வின்பாற்பட்டு நிற்கின்ற எவரும் சரணாகதி அரசியலிற்கு ஆட்படவே மாட்டார்கள் என்று திடமாக நம்புகின்றோம். தாயக மக்களும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும், உறுதியாக ஒரே தளத்தில் ஒற்றுமையாக நின்று எமது தேசியவிடுதலையை வென்றெடுப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

14 ஜூலை 2011

தென்சூடான் சுதந்திர விழாவில் நாடு கடந்த தமிழீழ அரசு.

தென் சூடானின் சுதந்திர விழாவில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தென் சூடான் அரசின் விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவாகாரத்துறை துணை அமைச்சர் கனகாந்திரம் மாணிக்கவாசகர், பிரதமர் அலுவலக பேச்சாளர் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம் ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தென் சூடானின் சுதந்திர நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தனர்.
புதியதொரு நாட்டின் பிறப்பிற்கு ஏனைய அரச பிரதிநிதிகளுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் சாட்சிகளாக இணைந்திருந்தனர். தென் சூடான் சட்ட சபையின் சபாநாயகர் ஜேம்ஸ் வானி இக்கா அவர்களின் சுதந்திரப் பிரகடன உரையுடன் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து குழலிசையில் தேசியகீதம் ஒலிக்க, சூடானின் தேசியக்கொடி இறக்கப்பட்டு புதிய தென் சூடான் குடியரசின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
குடியரசு தலைவர் சலிவா கீர் அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு சத்தியப்பிரமாணத்தை செய்து தென் சூடான் குடியரசின் தலைவராக பதவியேற்று பேசுகையில் ‘எமது மாவீரர்கள் வீணாக தமது இன்னுயிர்களை அர்ப்பணிக்கவில்லை இந்த நாளுக்காக நாம் 56 ஆண்டுகளுக்கு மேலாக பொறுத்திருக்க வேண்டியிருந்து. இந்த நாள் நிரந்தரமாக என்றைக்கும் எமது மனங்களிலும் நினைவுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும்’ என்று கூறினார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்களின் வாழ்த்துச் செய்தியில் ‘தென் சூடான் மக்கள் சுதந்திரமான மக்களாகி அடையும் மகிழ்ச்சியை, தமிழீழ மக்களும் தெளிவாக புரிந்துகொண்டு அந்த மகிழ்வில் பங்குகொள்கிறார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ மக்களும் தென் சூடான் மக்களுக்கு, அவர்களின் விடுதலைக்காக தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள். அவர்களின் தியாகத்துக்கு தலை வணங்கி அவர்களது உறுதியையும், வீரத்தையும் தமிழீழ மக்கள் பாராட்டுகிறார்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.
தென் சூடான் வானொலி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான நேர்காணலை ஒலிபரப்பியது. தென் சூடானின் சுதந்திரதின விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பங்குபற்றியது மட்டுமன்றி, அங்கு தொடர்ந்து தங்கிநின்று தென் சூடானின் அபிவிருத்திக்கு குறித்த துறைகளில் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் துறைசார் வல்லுனர்கள், உதவக்கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தென் சூடான் அரசாங்கத்துடன் கலந்துரையாடினர்.
மேலும், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் சுதந்திரதின விழாவில் பங்குகொள்ள வந்திருந்த பல வெளிநாட்டு அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து, ஈழத்தமிழரின் நிலைக்கும், தென் சூடானின் கடந்தகாலத்துக்கும் இடையேயான பொதுவான தன்மைகளை விளக்கினர். மேலும் அவர்கள் சிறிலங்கா அரசு புரிந்துவரும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விபரங்களையும் வழங்கினர்.
சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்குமான உறவு புதியதல்ல. மே 2009ல் பிலடெல்பியாவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வில் உரையாற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்காவிற்கான தமது செயலாளர் நாயகம் திரு டோமாக் வால் றுயாக் அவர்களை, சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது. தென்சூடானின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் பேசினார். மேலும் விடுதலைப் போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் ஈழமக்களுடனான தமது உறுதிப்பாட்டை குறிப்பிட்டும் அவர் உரையாற்றியிருந்தார்.
தென் சூடானில் இடம்பெற்றது போல ஈழத்திலும் சர்வதேச கண்காணிப்புடனான சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பை நடத்துமாறு சர்வதேச சமுகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 2009 இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழின படுகொலையால் தமிழர்களுக்கு தனியான நாடு ஒன்றே அவர்கள் உயிருடன் வாழ்வதற்கான ஒரே தீர்வு என்ற வகையில் தமிழரின் தனிநாட்டு கோரிக்கை மேலும் நியாயமானது என்பது இங்கு குறிப்பிட்டு காட்டப்படுள்ளது.

எவரும் புலிக்குட்டிகளுக்கு பால் வார்க்க முடியாதென்கிறார் அஷ்வர்.

இலங்கையை விற்று இந்திய அரசியல்வாதிகள் தமிழகத்தில் அரசியல் நடத்தி வருகின்றனர் என்று ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்றுக் குற்றஞ்சாட்டினார்.
காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் சாந்த புஞ்சிஹேவா தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான உரை நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு,அண்மையில் தமிழகம், காயல்பட்டினம் பகுதிக்கு நான் விஜயம் மேற்கொண்டிருந்தேன். அப்போது இலங்கை நிலைமை தொடர்பாக தமிழக அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டனர். “”ஈழத்தை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று அவர்கள் கூறினார்கள். ஆகவே, இனிமேலும் எவரும் புலிக்குட்டிகளுக்கு பால் வார்க்க முடியாது.
இலங்கையை விற்று தமிழக அரசியல்வாதிகள் அரசியல் நடத்துகின்றனர். அங்கு தேர்தல் முடிவடைந்துள்ளபோதிலும் தமிழக அரசியல்வாதிகள் இப்படித்தான் பேசி வருகின்றனர். இலங்கையின் உண்மை நிலைமையை அறிய தமிழகத் தலைவர்கள் இங்கு வந்து நேரில் பார்க்கும்படி நான் அழைக்கிறேன் என்றார்.

இராணுவத்தை முடக்கி வைக்க வேண்டும் என்கிறார் ஆனந்தசங்கரி.

நம் நாடு ஓரு சுண்டக்காய் நாடு. அதில் ஒரு சிறு பகுதியே வட மாகாணமாகும். வடமாகாணத்தின் ஒரு சிறு பகுதியிலேயே உள்ளுராட்சி தேர்த்தல் நடைபெற உள்ளது. மக்களை இஷ்டம் போல் செயற்பட்விடாது, நாம் எல்லோரும் ஆதிவாசிகள் என்ற நினைப்பிலேயே அரசும், அரசின் கையாட்களும் செயற்படுவது வேடிக்கையானதும் வேதனையை தரும் விடயமாகும். வடக்கே வசந்தம் வீசவில்லை. மாறாக அமைதிப்புயல் வீசுகின்றது என்று ஐனாதிபதிக்கே நான் பலதடவை கூறியுள்ளேன். உண்மையும் அதுவே. நடந்து முடிந்தது போர் அல்ல. போர் என்பது இரு நாடுகளுக்கு இடையில் நடப்பது. இது உள்ளுர் கிளர்ச்சியை அடக்க அரசு அதனை போராகப் பயன்படுத்தியது. நோக்கம் நிறைவேறிவிட்டது. அரசு கண்ணியமான முறையில் தனது படைகளை வெளியேற்றியிருக்க வேண்டும். அதைவிடுத்து தொடர்ந்து இராணுவத்தை வடக்கு கிழக்குப் பகுதிகளிலேயே நிலைகொள்ள வைத்து மக்களின் அடிப்படை சுகந்திரத்தை அனுபவிக்க இடமளிக்காது மூலை முடுக்கெல்லாம் தற்காலிகமாக நிலைகொண்டிருந்த இரானுவத்தை நிரந்தரமாக நிலை கொள்ள வைத்து மக்களுக்கு நிரந்தர பயத்தையும், பீதியையும் ஏற்பபடுத்த எண்ணுவது அப்பாவி மக்களுக்கு அரசும், அரசுடன் இணைந்து செயற்படும் எம்மவரில் சிலரும் செய்யும் பெருந்துரோகமாகும். யுத்தம் முடிந்து இரண்டான்டுகள் கடந்தும் இன்னும் மக்கள் தமது வீடுகளில் நிம்மதியாக வாழ முடியவில்லை. அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை. இன்னும் மூன்று நேர உணவும் உண்ண வழியில்லாமல் பலபேர் பசியுடன் வாழ்கின்றார்கள். தமது உடைமைகளை முற்றும் இழந்த நிலையிலே, அரசு கொடுத்துவந்த நிவாரணங்களும் நிறுத்தப்பட்டு அனேகர் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளார்கள். தினமும் நாலு திறப்பவிழா, நாலு அமைச்சர்களின் பவனி என்று மக்களை இங்கும் அங்கும் அலைத்து பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்று புரியாணி சாப்பிட வைத்து அனுப்பப்படும் அப்பவிகள், இரானுவத்தின் கட்டளைகளுக்குப் பயந்து தமது உழைக்கும் வாய்ப்பை இழந்து அலைக்களிக்கப்படுகின்றார்கள்.
சில பிரமுகர்கள் தம்மை மட்டும் நேசி என்று கேட்காது தாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளையும் நேசி என்கின்றார்கள். நம் மக்கள் இதுவரை காலமும் அனுபவித்ததிலும் பார்க்க இன்று படும் துன்பம் மிகப் பெரிதாகும்.
நடக்க இருக்கும் தேர்தல் வெறும் உள்;ளுராட்சி தேர்தல். இதற்கு ஐனாதிபதியோ, அமைச்சர்களோ படையெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வயல் விதைப்பது, விதை நெல்லு இதுதான் என காட்டுவது, இப்படித்தான் உழுவது என்பதெல்லாம் நம் மக்களுக்கு கற்றுதர வேண்டியளவிற்கு நாம் ஆதிவாசிகள் அல்ல. உண்மையாக ஐனாதிபதி அவர்கள் நம் மக்களுக்கு நன்மை செய்ய விரும்பினால் தனது அமைச்சர் பட்டாளத்தை உடனடியாக திரும்ப அழைத்து, திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டுதல் போன்ற வைபவங்களை நிறுத்தச் சொல்லி அதற்குச் செலவாகும் பெரும் தொகையை வறுமையாலும் பசியாலும் வாடும் நாடு மழுவதிலும் பரவியுள்ள சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குச் செலவிடுவதே நியாயமானதும், பொருத்தமானதுமாகும். இது அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயமகும்.
சுண்டைக்காய் அளவான எமது நாட்டுக்கு எவரும் சதி செய்யவுமில்லை. அதன் முன்னேற்றத்தை தடுக்கவுமில்லை. அதற்கு மாறாக அத்தனை நாடுகளும் வாரி வாரி வழங்குகின்றன. நாம் சரியாக நடந்தால் எவரின் சதிபற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை.
தேர்தலிற்கான பணிகளை பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டு தேர்தல் முடியும் வரை இராணுவம் தேர்தல் சம்பந்தமான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியதில்லையென படையினருக்கு கடுமையக எச்சரிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் பலர் இன்று அமைச்சர்களின் இணைப்பாளர்களாகவும், அளும் கட்சியின் வேட்பாளர்களாகவும் உள்ளனர். இவர்களில் சிலர் கடந்த கால குற்றச் செயல்களிற்காக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவதே அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் சம்பந்தமாக விசாரணைக்கு உட்படுத்தப்;படவேண்டும். எனவே மக்கள் தான் அரசு தரப்பை பார்த்து பயப்பட வேண்டுமே தவிர, அரசாங்கம் பயப்படத் தேவையில்லை. அரசிடம் படையினரும், முன்னாள் புலி உறுப்பினர்களுமே உள்ளனர்.
தேர்தல் சம்பந்தமான சகல விடயங்களும், வாக்காளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் அவசியமேற்படின் பிற மாநிலங்களிலிருந்து மேலதிக பொலிசாரை வரவழைத்து பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பில்; கையளித்து இராணுவம் முற்று முழுதாக முடக்கிவைக்கப்பட வேண்டும்.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி.

13 ஜூலை 2011

தாம் நினைத்தவாறெல்லாம் நடக்க முடியாதென்பதை சர்வதேசம் அரசுக்கு உணர்த்தியுள்ளது.

தமிழ் மக்கள் தங்களின் பின்னால் நிற்கின்றார்கள் என்று உண்மைக்குப் புறம்பாக அரசாங்கம் கூறிவருகின்றது. அரசாங்கம் ஒருபோதும் உண்மை பேசுவது இல்லை என்பது சர்வதேச சமூகத்திற்கு நன்றாகத் தெரிந்த ஒன்றாகும். நடந்து முடிந்த தேர்தல்களில் காட்டியது போன்று எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால்தான் ஓரணியாகத் திரண்டு நிற்கின்றோம் என்பதை தமிழ் மக்கள் உலகுக்கு மீண்டும் எடுத்துக்காட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
குச்சவெளிப் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து பிரசாரக் கூட்டங்கள் மதுரங்குளி,கல்லம்பத்தை, திரியாய் ஆகிய கிராமங்களில் நடைபெற்றன. அவற்றில் இரா.சம்பந்தன் பேசினார்.
சம்பந்தன் மேலும் பேசும்போது,
அரசியலில் ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். மக்களின் இறைமையைக் கருத்திற்கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம் இவற்றை எல்லாம் உதாசீனப்படுத்தி ஆட்சி நடத்துகின்றது. தங்களுடைய ஆட்சியில் நினைத்தபடி செயல்படலாம் என்று அரசாங்கம் நடந்து வருகிறது. ஆனால், சர்வதேச சட்டங்கள் எல்லாம் தலையிட ஆரம்பித்த பின்னர்தான் தாம் நினைத்தவாறெல்லாம் நடக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர ஆரம்பித்துள்ளது என்று தெரிவித்தார். நான் புத்தர் பெருமானை மதிக்கிறேன்.
அதற்காக திரியாய் பௌத்த விகாரைக்கு திரியாய் பிரதேசத்தின் மண்ணில் மூவாயிரம் ஏக்கரை தாரைவார்ப்பதற்கு அனுமதிக்க முடியுமா? அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அபிவிருத்தி என்ற பெயரில் பாலம் கட்டுவார்கள். மின்கம்பம் நடுவார்கள். பின்னர் அருகிலே புத்தர் சிலையும் வைப்பார்கள்.
இதனை அபிவிருத்தி என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கென சர்வதேச சமூகம் வழங்கும் நிதியில் ஒரு சிறு பகுதிதான் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கு இன்று அரசாங்கத்தினால் செலவழிக்கப்படுகிறது. எம்மண்ணை நாம் பாதுகாக்க வேண்டும். பின்சந்ததிக்காக தமிழ் மக்கள் பாரம்பரிய வாழ்விடத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் சம்பந்தன் கூறினார்.
சர்வதேச நீதிமன்ற விசாரணைக்குப் போவதா, இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். விசாரணைக்குப் போகும்படி நாம் கூறவில்லை. போகவேண்டாம் என்றும் நாம் அவருக்குக் கூறவில்லை. ஆனால், ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் நாம் வற்புறுத்துவது ஒன்றை மாத்திரமே.
அது தமிழ் மக்களின் பிரச்சினைக்குச் சரியான அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்பதையே அவரிடம் வற்புறுத்தி வருகின்றோம்.பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் பிறநாடுகள் உள்விவகாரங்களில் தலையிடுகின்றன. அது வேண்டாம் என்று கூறும் அரசாங்கத்தின் வாதம் உலக அரங்கில் இனி எடுபடாது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் பேசும்போது, தமிழ் மக்கள் தங்கள் ஒற்றுமையை சர்வதேச சமூகத்திற்கு மீண்டும் எடுத்துக் காட்டுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பமே எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலாகும்.
இவ்வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்துவதன் மூலமே தமிழ் மக்கள் தங்களுக்கென்று தனித்துவமான அரசியல் தீர்வொன்றைப் பெற முடியும் என்று கூறினார். திருகோணமலை மாவட்ட முன்னாள் எம்.பி. க.துரைரெட்ணசிங்கமும் கூட்டத்தில் பேசினார்.

சங்கிலி மன்னன் நினைவுத்தூபியை இடித்தழிக்கிறது யாழ்,மாநகரசபை!

யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. புதிதாக அமைப்பதற்காகவே இந் நடவடிக்கை எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதன் மாதிரி அமைப்பில் மோசடி நிகழலாம் என்று சந்தேகம் வெளியிடப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் முத்திரைச் சந்தியில் இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என்று யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவன் தெரிவித்திருக்கின்றார்.
புதிய சிலை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாநகரசபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சங்கிலிய மன்னனது நினைவுத் தூபியை உயிரோட்டமுள்ளதாக மீள நிர்மாணிப்பதாக முடிவெடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, சங்கிலிய மன்னனது சிலை முற்றாக இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1500 செங்கற்களும் 10 சீமெந்துப் பைக்கற்றுகளும் வழங்கவுள்ளோம். மாநகர சபை ஊழியர்களும் நிர்மாண வேலையில் பங்கேற்க உள்ளனர் என்றார் ஆணையாளர்.
மீள அமைக்கப்படும் இந்தச் சிலையில் சங்கிலிய மன்னனின் வாளேந்தும் போக்கில் சிறு மாறுதல் செய்யப்படவுள்ளதாக மாநகர சபையின் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றதாக கூறப்படுகின்ற போதிலும் சிலை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கல்வகை நீண்டகாலம் நின்று நிலைக்கக் கூடியதா? அல்லது கால ஓட்டத்தில் அழிவடையும் தன்மை வாய்ந்ததா? என்று சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த நினைவுச் சின்னத்தினை கால ஓட்டத்தில் இல்லாமல் செய்வதற்கான ஒரு நகர்வா? இது என்கின்றனர் நோக்கர்கள்.

12 ஜூலை 2011

வாக்குச்சேகரிக்க உந்து உருளியில் பவனி வருகிறார் டக்ளஸ்!

உள்ளூராட்சித் தேர்தலையொட்டி ஆளும் கட்சியின் சார்பில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சைக்கிள் மூலமான தேர்தல் பிரசாரம் தென்மராட்சி பிரதேசத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது.
இந்தப் பிரசாரம் நேற்று பிற்பகல் 3.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரை நீடித்தது.அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் களான மு.சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் மற்றும் ஈ.பி.டி.பியின் தென்மராட்சி அமைப்பாளர் சாள்ஸ், சாவகச்சேரி நகர, பிரதேசசபை ஆகியவற்றின் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களுமாக 200 க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் இந்தப்பிரசாரப் பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் கைதடியில் ஆரம்பித்து கைதடி நுணாவில், மட்டுவில் தெற்கு சந்திரபுரம், மட்டுவில் வடக்கு சரசாலைத் தெற்கு, சரசாலை மத்தி, சரசாலை வடக்கு, கனகம்புளியடி, வேம்பிராய், மந்துவில் கிழக்கு, மந்துவில் மேற்கு ஆகிய கிராமங்கள் தோறும் ஒழுங்கை ஒழுங்கையாக வீடு வீடாகச் சென்று பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்த சைக்கிள் பிரசாரம் தொடர்ந்து வரணி, கொடிகாமம், மிருசுவில், கச்சாய், கெற்பேலி, அல்லாரை, மீசாலை, சங்கத்தானை, சாவகச்சேரி ஆகிய இடங்களில் இன்னொரு தினத்தில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கள தமிழ் ஒற்றுமையை வலுப்படுத்த மகிந்த யாழ் செல்கிறாராம்!

மகிந்த ராஜபக்க்ஷ நாளை மறுதினம் யாழ்ப்பாணம் பயணமாகவுள்ளதாக ஜனாதிபதியின் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செல்லும் மஹிந்தராஜபக்ச ஐந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அபிவிருத்தித் திட்டம் பற்றி ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் சூடுபிடித்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 13 பேர் தமது தேர்தல் பிரச்சாரங்களை யாழில் மேற்கொண்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமாரை தொடர்புகொண்டு கேட்ட போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யாழ். மக்களையும் அரச உத்தியோகத்தர்களையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது சிங்கள தமிழ் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் கோப்பாய் நாவலர் பாடசாலையில் கட்டப்பட்ட கட்டடத்தொகுதியையும், பருத்துத்துறையில் கட்டடம் ஒன்றையும் திறந்து வைப்பார் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ் விஜயத்தை முடித்துக்கொண்டு 20ம் திகதி கிளிநொச்சி செல்லும் ஜனாதிபதி அங்கு 325 மில்லியன் செலவில் அமைக்கப்படவிருக்கும் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்குக்கான அடிக்கல்லை நாட்டி வைப்பார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நேற்றுக்காலை கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைகளால் வடக்கில் மக்கள் அச்சம்!

வடக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களால் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, வடக்கில் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டி நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை – என்று நீதியானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் திங்கட்கிழமை தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக வடக்கின் பல பகுதிகளுக்கு “கபே’ அமைப்பினர் விஜயம் செய்தனர். அப்பிரதேசங்களின் நிலைமைகள் தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சில பிரதேசங்களில் நூற்றுக்கு 20 சதவீதமானோரிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லை. எனவே தேசிய அடையாள அட்டைகளை உடனடியாகப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை ஒன்றை ஆரம்பித்தோம். ‘குறிப்பாக வடக்கு மக்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட அஞ்சுகின்றனர். தொடர்ச்சியாக அப்பிரதேசங்களில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள்தான் இதற்குப் பிரதான காரணம்.மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு தேர்தல் நடத்துவதில் எவ்வித பிரயோசனமுமில்லை. எனவே அரசு வடக்கில் தேர்தல் சுதந்திரத்தை நிலைநாட்டி நீதியானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கு வழிசமைத்துக் கொடுக்கவேண்டும்; இது அரசின் கடமையுமாகும். பிரதான எதிர்க்கட்சிகளுக்கு வடக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான ஓர் சூழ்நிலை அங்கு இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய மூன்று பிரதான கூட்டங்களின் போது இராணுவத்தினர் அப்பிரதேசங்களுக்குச் சென்று வீடுவீடாக சோதனையிட்டுள்ளனர். பிரசாரக் கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கரச்சி, தர்மபுரம் ஆகிய பிரதேசங்களில் ஜே.வி.பிக்கும் இதே நிலைமைதான். அரச தரப்பினரின் தேர்தல் “கட் அவுட்கள்’ தவிர வேறு தரப்பினரது “கட் அவுட்’களை அப்பிரதேசங்களில் காணமுடியவில்லை என்றார்.

11 ஜூலை 2011

ராஜபக்ஷ போர்க்குற்றவாளி என்று அனைத்து மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளி என அனைத்து மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பயணிகள் விடுதியில் நேற்று 10.07.2011 அன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் தனி ஈழம் அமைவதுதான் தமிழர்களின் குறிக்கோள். கடைசி தமிழன் உள்ளவரை அதை கேட்பான். ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என எங்களது கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
சமீபத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இதே தீர்மானத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை தவிர கர்நாடகா, குஜராத் என மற்ற அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று எங்கள் கட்சி சார்பில் விரைவில் அனைத்து மாநில முதல் மந்திரிகளை சந்தித்து பேசவும், இதுபற்றி கடிதம் எழுதவும் உள்ளோம்.
இலங்கையில் 1 லட்சத்து 76 ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டு உள்ளனர். இதுவரையில் 554 தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் முன்னாள் மத்திய மந்திரி ஜோர்ஜ் பெர்ணான்டஸ், தமிழர்களுக்கு செய்த உதவிகளை கூட தற்போது உள்ள தமிழக மத்திய மந்திரிகள் யாரும் உதவி செய்யவில்லை என்றார்.