16 நவம்பர் 2010

வடக்கில் படையினரின் அட்டகாசம் ஓயவில்லை!

நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் சரிசமமாக நடத்தப்படுகின்றனரா? அவர்கள் சரியான உரிமையோடு வாழ்கின்றார்களா? அந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்படுகின்றதா? என்பதை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந் நாட்டில் வாழும் தமிழர்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
வடக்கில் தற்போது யுத்தம் முடிவடைந்தும் இராணுவத்தினரின் அட்டகாசம் ஓயவில்லை. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல இயந்திரங்களுடைய உதிரிப்பாகங்கள் பிரிக்கப்பட்டு பின்னர் இரும்பு வாணிபத்துக்காக தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அண்மையில் வட பகுதியில் 6 ஆம் திகதியன்று கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேசத்தின் கிராஞ்சி பகுதியில் உள்ள மொட்டையன்குளம் என்ற கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவரை இரண்டு இராணுவத்தினர் இணைந்து அதிகாலை 4 மணயளவில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். இதனை அருகில் உள்ள இராணுவ முகாமுக்குச் சென்று முறைப்பாடு செய்தும் கூட இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முறைப்பாடும் செய்யும் போதும் எமது மக்கள் தமிழ் மொழியில் முறைப்பாடு செய்ய அனுமதி வழங்குவது இல்லை. இதனால் இவர்களின் முறைப்பாடுகள் சிங்கள மொழியிலேயே பதிவு செய்யப்படுகின்றது. எதனை பதிவு செய்கின்றார்கள்? எதற்காக தங்களிடம் கையெழுத்து வாங்குகின்றார்கள் என்பது கூடத் தெரியாத சூழலில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் கொலை, கொள்ளை என்பன அதிகரித்துள்ளது. இவ்வாறான விடயங்களில் அரசு ஒரு மந்தப்போக்கைக் கடைப்பிடிக்கின்றது. என மேலும் தெரிவித்தார்.

1 கருத்து:

  1. அன்றும் இல்லை இன்றும் இல்லை இனியும் இல்லை. இந்த கொலை வெறி இனவெறி அரசியல்வாதிகள் என்றும் தமிழருக்கு உரிமைகள் தரமாட்டார்கள். அடிமைச் சேவகம் செய்யும் தமிழ்(?) அரசியல் விபாசரிகளுக்கா ஏதோ செய்கிறோம் என்ற படம் காட்டலே நடக்கும்.நடந்து கொண்டிருக்கிறது. இதை புரிந்து கொள்ளாது படுகுழியினுள வீழ்ந்துள்ள தம் இனத்தை மண்போட்டு மூடி சமாதியாக்கிக் கொண்டிருக்கின்றனர். மறுபடியும் ஒரு உரிமைக்குரல் உரக்க எழ வேண்டும். இதுவே இன்றைய ஈழத்தமிழனின் எதிர்பார்ப்பு.

    பதிலளிநீக்கு