01 ஏப்ரல் 2011
விடுதலைப்போரை ஒடுக்க கூட்டிணைந்த அமெரிக்கா,இந்தியா!
விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் இணைந்து இயங்கியது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப்புலிகளிள் ஆயுத விநியோகத்தையும், நிதி திரட்டல்களையும் முறியடிக்கும் நோக்கத்துடன், 2006 ஆம் ஆண்டு அமெரிக்கா இரண்டு தகவல்கொடுப்போர் குழுக்களை அமைத்திருந்தது. 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குண்டுத்தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளின் ஆயுதக்கொள்வனவுகள், அவர்களின் ஆயுத விநியோக வழிகள், நிதி திரட்டும் நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை வழங்கும் குழுக்களை உடனடியாகவே அமெரிக்கா அமைத்திருந்தது. இந்த குழுவில் இந்தியாவை இணைத்துக்கொள்ள அமெரிக்கா முற்பட்டபோது, அவ்வாறான நடவடிக்கைகளை தாம் ஏற்கனவே மேற்கொண்டுவருவதாக இந்தியா தெரிவித்திருந்தது. இவ்வாறான குழுக்கள் அமைக்கப்படுவது தொடர்பில் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் கொழும்பில் இருந்து அமெரிக்க தூதுவர் ஜெஃப்ரி ஜே லுன்ஸ்ரன்ட் அனுப்பிய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக மட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த குழுக்களில் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, யப்பான், இத்தாலி, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், சுவிற்சலாந்து, தய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பணியாற்றியிருந்தன. இது தொடர்பில் அமெரிக்க தூதரகத்தில் அரசியல் விவகார அதிகாரி, இந்திய அரசின் செயலாளர் அமன்தீப் சிங் கில் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோகங்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா மற்றும் தாய்லாந்து வழியாகவே நடைபெற்றுவருவதால் அதனை உன்னிப்பாக அவதானிக்குமாறு அமெரிக்கா தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் இந்த திட்டத்தை தற்போதைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவும் வரவேற்றிருந்தார் என அது மேலும் தெரிவித்துள்ளது. இதனிடையே, அமெரிக்க – இந்தியாவின் இந்த கூட்டு “தகவல்களை வழங்கும்” குழுக்களில் கணிசமான தமிழர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக