15 ஏப்ரல் 2011

பான் கீ மூன் சர்வதேச விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்!

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில், சிறீலங்காவில் இடம்பெற்ற போக்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐ.நாவின் ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை தொடர்பில் பதிலை வழங்குவதற்கான அழுத்தம் ஐ.நா மீது பிரயோகிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை அது தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என நம்புகிறோம். சிறீலங்கா அரசு அமைத்துள்ள விசாரணை குழு போதுமானது அல்ல. எனவே அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றை அமைப்பது அவசியமானது. சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைக்குழு ஒன்றை அமைக்கும் சாத்தியம் ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கோ அல்லது மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கோ கிடையாது. ஏனெனில் சிறீலங்காவுக்கு ஆதரவுகளை வழங்கிவரும் சீனா மற்றும் ரஸ்யா போன்றவை வீட்டோ அதிகாரம் கொண்டவை. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டதாக ஒரு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும். அந்த குழுவானது மேலதிக விசாரணைகளை நடத்தும் அதிகாரம் கொண்டதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக