வன்னியில் நடைபெற்ற போரின் போது அனைத்து படைத் தளபதிகளும் போர்தர்மங்களைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டிருக்காது என்று சிறீலங்கா இராணுவத்தின் முன்னாள் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பிரித்தானிய தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தனது நண்பர்கள் மட்டத்தில் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறீலங்கா இராணுவத்தின் 55 மற்றும் 59வது படைப் பிரிவுகளை வழிநடாத்தியிருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, தற்போது பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றுகின்றார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யுத்த காலத்தின் போது நான் வழிநடாத்திய படைப்பிரிவின் எந்தவொரு படைவீரரும் பொதுமக்களின் இலக்குகளைத் தாக்கவில்லை என்பதுடன், யுத்தத்தில் இறந்த விடுதலைப்
புலி உறுப்பினர்களின் உடல்களை போர் தர்மங்களுக்கு ஒப்ப புதைப்பதற்கு நடவடிக்கை எடுந்திருந்தனர்.
மேலும் அவ்வாறு புதைக்கப்பட்ட இடங்களை வரைபடமாக பதிவு செய்து அதனை இராணுவத் தலைமையகத்துக்கு அனுப்பி வைத்திருந்தோம். சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சாதாரண உறுப்பினர்களைக் கூட பாதுகாப்புடன் அழைத்துச் சென்று ஓமந்தை சோதனைச் சாவடியில் ஒப்படைத்திருந்தோம்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்களான தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் மட்டுமன்றி விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய், தந்தையும் எனது படையணியினரிடம் சரண் அடைந்தவர்களே.
ஆயினும் ஏனைய படைத்தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோர் போர் தர்மங்களை மதித்து நடக்காததே இன்றைய சர்வதேச நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்து வரும் நிலையில் சிறீலங்கா அரசு தான் தப்புவதற்காக கட்டளைத் தளபதிகளை பலி கொடுக்கலாம் என்ற அச்சம் சிறீலங்கா இராணுவத்தரப்பினரிடம் ஏற்பட்டுள்ளது.
எனவே தான் பிரசன்னா டி சில்வா போன்றவர்கள் தாம் தப்பிக்கவும், பழியை ஏனைய கட்டளைத் தளபதிகள் மீது சுமத்தவும் முற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக