18 ஏப்ரல் 2011

தமிழீழம் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வு!

ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்கள் எதனையும் சிறீலங்கா அரசு நிறைவேற்றப்போவதில்லை. அதனை சிறீலங்கா அரசு உடனடியாகவே நிராகரித்தும் உள்ளது. எனவே சிறீலங்கா அரசின் இனஅழிப்பில் இருந்து தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமாயின் அதற்கு ஒரே தீர்வு தமிழீழம் தான் என அமெரிக்காவின் இல்னொய்ஸ் சட்டக்கல்லூரியின் பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல்ட் தெரிவித்துள்ளார். தமிழ்நெற் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் மக்களுக்கான தனியான நாடு உருவாகுவதை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும். வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்புக்கள் தற்போதும் தொடர்கின்றது. ஐ.நாவின் அறிக்கையில் உள்ள பரிந்துரை ஒன்றின் இரண்டாவது சரத்தில் காணப்படும் “சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் விசாரணைகளை அவதானிப்பதற்கு ஐ.நா ஒரு அனைத்துலக கண்காணிப்பாளர்களின் குழுவை அமைக்கவேண்டும்” என்ற கருத்திற்கு தமிழ் மக்கள் தமது ஆதரவுகளை வழங்கவேண்டும். ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் லிபியா தொடர்பில் உருவாக்கிய தீர்மானத்தை போன்றதொரு தீர்மானம் சிறீலங்கா மீது கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதனை மேற்கொள்ளும் நிலையில் சபை இல்லை. 2009 ஆம் ஆண்டு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டும். ஐ.நாவின் சார்பில் பான் கீ மூன் அனைத்துலக கண்காணிப்பாளர்களை அமைக்கலாம். அறிக்கையில் காணப்படும் ஏனைய பரிந்துரைகளை சிறீலங்கா அரசு ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்லை. எனவே இந்த நிலையில், சிறீலங்காவில் காணப்படும் நீண்டகால இனப்பிரச்சனைக்கு தமிழீழம் மட்டுமே தீர்வாக முடியும். அனைத்துலக சமூகம் அதனை அங்கீகரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக