10 ஏப்ரல் 2011
வடபகுதிக்குள் இந்திய கடற்படை!
கடந்த வாரம் வடபகுதி கடலில் மரணமடைந்த தமிழக மீனவரின் சடலத்திற்கு இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்களின் ஆறு உறவினர்களை அழைத்துக்கொண்டு இந்திய கடற்படையினர் சிறீலங்காவின் வடபகுதிக்குள் அறிவித்தல்கள் இன்றி நுளைந்தது சிறீலங்கா பாதுகாப்பை அமைச்சகத்தை கடும் சீற்றமடைய வைத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த வாரம் தமிழகத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் வடபகுதி கடலில் காணாமல்போயிருந்தனர். எனினும் அவர்களின் ஒருவரின் சடலம் புங்குடுதீவு கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த மீனவருக்கு இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தை சேர்ந்த ஆறு உறவினர்கள் இந்திய கடற்படையின் உதவியுடன் நேற்று (09) யாழ்ப்பாணம் வந்துள்ளனர். அவர்கள் வசம் எந்தவிதமான பயண ஆவணங்களும் இருக்கவில்லை. சிறீலங்காவின் குடிவரவுத்திணைக்களத்தின் நடவடிக்கைகளையும் அவர்கள் புறக்கணித்துள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்ற அவர்கள் தமது உறவினரின் சடலத்தையும் பார்வையிட்டுள்ளதுடன், இறுதிச்சடங்குகளையும் மேற்கொண்டுள்ளனர். சிறீலங்காவிற்குள் நுளைவதற்கான அனுமதிகளை தாம் இந்திய கடற்படையினருக்கோ அல்லது, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கோ வழங்கவில்லை என சிறீலங்கா குடிவரவுத்திணைக்களத்தின் அதிகாரி சுலநந்தா பெரேரா தெரிவித்துள்ளார். பயணத்திற்கான ஆவணங்கள் இல்லாது அவர்கள் வந்திருந்தால் அது சிறீலங்காவின் சட்டங்களை மீறும் செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் இந்தியாவுக்கு எதிராக சிறீலங்கா அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை. தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்கள் உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணமடைந்த தமிழக மீனவரின் உடலில் காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரின் மீன் பிடி படகுக்கு அண்மையாக பெரிய படகு ஒன்று வந்ததை தான் கண்டதாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக