இலங்கையின் இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச மட்டத்தில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின், இலங்கை தொடர்பான அறிக்கையை பொதுச்செயலர் பான் கீ மூன் ஆராய்ந்து வரும் பின்னணியில் சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளன என்பதை இராஜதந்திரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவென பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழு நேற்றுமுன் தினம் தனது அறிக்கையை கையளித்தது.
மேற்கொண்டு என்ன நடவடிக்கையை எடுப்பது என்பதை முடிவு செய்வதற்காக அந்த அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் கவனமாக ஆராய்ந்து வருகிறார். அந்த அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான, பாதகமான அம்சங்களே அதிகம் காணப்படுகின்றன என உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இரு தரப்பினரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை ஐ.நா. நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என ஐ.நா. ராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்
எனவே அவற்றுக்குப் பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளை இலங்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அனைத்துலக விசாரணையை ஐ.நா. முன்னெடுக்க வேண்டும் எனவும் நிபுணர் குழு அறிக்கையில் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம் என அந்த ராஜதந்திரி மேலும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய ஐ.நாவுக்கான ஆசிய வதிவிடப் பிரதிநிதி ஒருவர், 'இலங்கை நிகழ்வுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மிகப் பெரியளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அத்தகைய ஒரு விசாரணைக்கு நிபுணர் குழு கோரிக்கை விடுக்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்படவேண்டும்'' எனவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக