04 ஏப்ரல் 2011

நடைமுறைக்கு வராத இந்தியாவின் அரியாலை வீட்டுத்திட்டம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவினால், அரியாலையில் நாட்டப்பட்ட, 50 ஆயிரம் வீட்டுக்கான அடிக்கல் பிரதேசம் நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கால் நடைகளின் ஓய்விடமாகியுள்ளது. அடிக்கல் நாட்டப்பட்ட தினத்தன்று வழங்கப்பட்ட வீடுகளுக்கான மாதிரி வரைபடங்களை அப்பகுதி மக்கள் வீடுகளில் பேணிப்பாதுகாத்தே வருகின்றனர். இதே போன்று போருக்குப் பின்னான வடக்குகிழக்கின் அபிவிருத்தி குறித்து இந்தியா இலங்கைகக்கு வழங்கிய உறுதி மொழிகள் எதுவும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமலே உள்ளன. வடக்கு கிழக்கிற்கான புகையிரதப் பாதை மறுசீரமைப்பு, காங்சேகன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய அபிவிருத்தி, யாழ்.மாநகர சபை அபிவிருத்தி, யாழ்பல்கலைக்கழகத்திற்கான பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான உதவி எனப் பல உதவிகள் வெறும் பேச்சளவிலேயே தொடர்ந்திருக்கின்றன. 1999இல் நுகுணு பல்கலைக்கழகத்திற்கான பொறியியல் பீடத்தை நிர்மாணித்த போது கட்டிடத் தொகுதிகளுக்கு மாத்திரம் 9000 லட்சம் ரூபாய்கள் செலவழிக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 10 வருடங்களுக்குப் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திற்கான பொறியியல் பீடத்தை நிர்மாணிக்க வெறும் 2500 லட்சம் ரூபாய்களையே தர முடியும் என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் தெரிவித்திருருந்தார். அதுவும் இன்னமும் வழங்கப்படவில்லை. வடக்கு கிழக்கு மக்களின் மறுவாழ்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளுக்கு அப்பால் ஓரடியேனும் நகராதிருப்;பதையே இவை எடுத்துக் காட்டுகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு என்பது வெறும் ஆவுரஞ்சிக் கற்களின் நிலைமையில் தான் இன்னமும் இருக்கிறது என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக