16 ஏப்ரல் 2011

ஐ.நா.அறிக்கையை ஆராயும் இராஜதந்திரிகள்!

ஐ.நாவின் அறிக்கை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதில் பெரும் எண்ணிக்கையான இராஜதந்திரிகள் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழு தனது அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை (12) செயலாளர் நாயகத்திடம் கையளித்தபோதும் அது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. எனினும் சிறீலங்கா அரசுக்கு அது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நிராகரிப்பதாக சிறீலங்கா அரசு உடனடியாக தெரிவித்தபோதும், அது தற்போது அறிக்கையை ஆய்வு செய்வதில் உள்ளூர் மற்றும் அயல்நாடுகளின் இராஜதந்திரிகளின் உதவிகளை நாடியுள்ளது. ஐ.நாவின் அறிக்கையில் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற பரிந்துரைகள் காணப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, ஐ.நா தனது ஆலோசனைக்குழுவை அமைத்தபோது சிறீலங்கா அரசு கொழும்பில் உள்ள ஐ.நா தூதரகத்திற்கு முன்பாக மேற்கொண்ட வன்முறைகளை போன்றதொரு வன்முறைகள் மீண்டும் இடம்பெறலாம் என ஐ.நா அதிகாரிகள் அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக