02 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்கா அணிக்காக ஏழுமலையானை தரிசித்த மகிந்த.

ஸ்ரீலங்கா அணி வெற்றி பெற திருமலை ஏழுமலையானை தரிசித்தேன் என, ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெறும் ஸ்ரீலங்கா இந்தியா மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை காண ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார். இந்தியா சென்றுள்ள அவர் திருப்பதி சென்றார். திருமலையில் தனது குடும்பதினருடன் தரிசனம் செய்தார். இதன் போது செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீலங்கா அணி வெற்றி பெறவும் ஏழுமலையானை வேண்டினேன். ஆந்திர முதல்வரும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளும் எனக்கு உற்சாக வரவேற்பளித்தனர். எனக்கு தேவையான உதவிகளை செய்த தேவஸ்தான அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மகிந்த நேற்று மாலை தனது குடும்பத்துடன் திருப்பதி சென்றார். ராஜபக்ஷ கோவிலுக்கு சென்றதும் மத்திய காவற்துறையினர் பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை அழைத்து சென்றனர். வேத பண்டிதர்கள் அவரை நுழைவு வாயிலில் இருந்து கருவறைக்கு அழைத்து சென்றனர். ராஜபக்ஷ நன்றாக சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாதாரண பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். ராஜபக்ஷ சுமார் 45 நிமிடம் வரை கருவறையில் சாமிதரிசனம் செய்தார். அப்போது ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் கருவறையை சுற்றி வந்தார். தரிசனத்திற்கு பிறகு ராஜபக்ஷவுக்கு வேதபண்டிதர்கள் பட்டு வஸ்திரம் அணிவித்து லட்டுகள் மற்றும் அனைத்து விதமான பிரசாதங்களையும் கொடுத்து ஆசி வழங்கினர். ராஜபக்ஷ ஏழுமலையான் கோவிலில் தனது எடைக்கு எடையாக 55 ஆயிரம் ரூபா நாணயங்களை துலாபாரம் செலுத்தினார். பின்னர் அவர் காரில் அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவரை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் அவருக்கு ஏழுமலையான் பத்மாவதி தாயார் உருவ படங்களை பரிசாக வழங்கினார். இருவரும் சுமார் 30 நிமிட நேரம் கலந்துரையாடினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக