27 ஏப்ரல் 2011

போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம்!

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி தருகின்றது. எனவே அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த மேலதிக சுயாதீன விசாரணைகள் அவசியம் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை இன்று (27) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்காவில் நடைபெற்ற சமரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை காத்திரமானது.
மூவர் கொண்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல கவலைப்படும் தகவல்கள் உள்ளன. அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
நேரில் கண்டவர்களின் சாட்சியங்களையும், பல காத்திரமான ஆதாரங்களையும் அறிக்கை கொண்டுள்து. எனவே முழுமையான, சுயாதீனமான, காத்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
அறிக்கையின் பரிந்துரைகளை சிறீலங்கா அரசு முற்றாக மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுத்தால் அனைத்துலக விசாரணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக