09 ஏப்ரல் 2011

பதவிக்காக ஈ.பி.டி.பி.போன்று வால் பிடிக்கும் அவசியம் எமக்கில்லை!

பதவிக்காக நாங்கள் ஈ.பி.டி.பியினர் போன்று அடிபணிந்து வால் பிடிக்கவும், குடை பிடிக்கவும் வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான தேவையும் இல்லை. பிச்சை இடுவதைப்போல் ஒரு சிலரை விடுதலை செய்துவிட்டால் அதற்காக நன்றிக்கடன் செலுத்தவேண்டுமா என்று யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சவால் விடுத்தார். அவசரகாலச்சட்ட நீடிப்பு மீதான பிரேரணை விவாதத்தில் பேசிய அவர் மேலும் கூறுகையில், பிரதமர் மாதாமாதம் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து விடுகின்றார். கடந்த மாதம் இந்தியாவில் புலிகள் இயக்கம் மூன்று முகாம்களை நடத்துகின்றது என்று பிரதமர் கூறினார். அதன்பின்னர் இந்தியாவின் எதிர்ப்பினால் வருத்தம் தெரிவித்து அறிக்கை விடவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார். இம்முறை புலிகள் இயக்கம் சர்வதேச வலையமைப்பில் செயல்படுகின்றது. அமெரிக்காவில் இரகசியமாகப் பேச்சுகள் நடத்தினர். மீண்டும் புலிகளுக்கு புத்துயிரூட்ட முனைகின்றனர் என்று கூறுகின்றார். எப்படியோ ஒரு காரணம் கண்டுபிடித்து விடுகின்றார் பிரதமர். குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் வடக்கு, கிழக்கில் எல்லாம் முடிந்துவிட்டது. சுமுகநிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணியினர்தான் குழப்பம் விளைவிக்கின்றனர் என்றார். அவரிடம் ஒன்று கேட்கின்றேன். யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் முடியப்போகிறது. இந்த நிலையில் எத்தனை பாடசாலைகள், எத்தனை கல்லூரிகள், எத்தனை நூல்நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்பதையும் எத்தனை பாடசாலைகள் இயங்குகின்றன என்பதையும் இந்த சந்திரகுமார் அறிவாரா? எமது மக்கள் மீள்குடியமர்த்தப்படவேண்டும். சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். பாடசாலைகள் திறக்கப்படவேண்டும். எம் மக்களின் காணிகளும், வீடுகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்க்கும் உரிமை வேண்டும் என்றால் அது அரச விரோத செயலாகுமா? இராணுவத் தளபதி மேஜர் மஹிந்த ஹத்துருசிங்க தட்ஸ்தமிழ் இணையத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், மீண்டும் யுத்தத்தை கட்டவிழ்த்து விட சில விஷமிகள் செயல்பட்டு வருகின்றனர். புலம்பெயர் வாழ் தமிழ் அமைப்புகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பின்னணியில் இயக்குகின்றன. சுரேஷ் பிரேமச்சந்திரனும், மாவை சேனாதிராஜாவும் இராணுவத்துக்கு எதிராகவே குற்றம்சாட்டிப் பேசுகின்றனர் என்று எம்மை மிரட்டுவது போல் கூறி உள்ளார். ஹத்துருசிங்கவின் மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. நாங்கள் ஜனநாயத்துக்கும், சமாதானத்துக்கும் எதிரானவர்கள் அல்லர். அனுபவமிக்க மூத்த தலைவர் சம்பந்தரின் தலைமையில் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகின்றோம். புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டால் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக அர்த்தம் அல்ல. இப்பொழுதுதான் பிரச்சினைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு ஜனநாயக அடிப்படையில் பேச்சுகள் நடத்தி தீர்வு காணத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டணிதான் அரசுக்கு முதன் முதலாக அழைப்பு விடுத்தது? இந்த உண்மை புரியாத தளபதி ஹத்துருசிங்க எங்களைப் பார்த்து அரச விரோதச் செயலுக்குத் துணை போகின்றோம் என்கிறார் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக