08 ஏப்ரல் 2011

பிளேக்கை சந்திப்பதை தவிர்த்தது ஸ்ரீலங்கா!

அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளருக்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் இடையில் கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற சந்திப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே சிறீலங்கா அரசு றொபேட் ஓ பிளேக்கின் பயணத்தை பிற்போட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த மாதம் 28 ஆம் நாள் உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும், அமெரிக்காவின் துணைவெளிவிவகாரச் செயலாளர் றொபோட் ஓ பிளேக்கிற்கும் இடையில் 75நிமிடங்கள் சந்திப்பு நிகழ்ந்திருந்தது. இந்த சந்திப்பை தொடர்ந்து ஆத்திரமடைந்துள்ள சிறீலங்கா அரசு இன்று (08) சிறீலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பிளேக்கின் பயணத்தை இடைநிறுத்தியுள்ளது. சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தற்போது நாட்டில் இல்லாததால், அவர் உள்ள நேரத்தில் பயணம் மேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரசு பிளேக்கிடம் தெரிவித்துள்ளது. அதேசமயம், உலகத் தமிழர்; பேரவையுடன் பிளேக் மேற்கொண்ட சந்திப்புக்கு கடுமையான எதிர்ப்புக்களை தெரிவிக்குமாறு பீரீஸ் இடம் தெரிவித்துள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தனக்கு பிளேக்கை சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிளேக் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலும் ஆத்திரமடைந்துள்ள மகிந்தா, பிளேக்கை பீரீஸ் சந்தித்தால் போதும், தான் சந்திக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, அண்மையில் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரித்தானியாவின் அமைச்சர் அலிஸ்ரர் பேட்டை சந்திப்பதற்கும் மகிந்தா மறுத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக