11 ஏப்ரல் 2011

மன்னாரில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடைபெறுகிறது!

மன்னார் மாவட்டத்தின் தெற்குப் பக்க எல்லைப் பகுதியில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் பெரும்பான்மை இன மக்கள் மிக வேகமாகக் குடியேற்றப்பட்டு வருகின்றனர். ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களால் கூடத்தட்டிக் கேட்க முடியாத நிலையில் மரமுந்திரிச் செய்கைக்குப் பெயர்பெற்ற கொண்டாச்சிப் பகுதி உட்பட வளம் நிறைந்த பிரதேசங்கள் படைத்தரப்பினரின் உதவி ஒத்தாசையுடன் அபகரிக்கப்படுகின்றன. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். தென் எல்லையில் உள்ள கடற்கரைப் பிரதேசத்தில் அப்பிரதேச மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படாமல், கடற்படைத்தளமாக மாற்றி அமைக்கப்படுவதாகவும் அவர் விடுத்த அறிக்கை ஒன்றில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது: மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாக உள்ள பகுதிகள் அரசின் திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றத்துக்கு உட்படுத்தப்படவுள்ளன என அறிய முடிகின்றது.இப்பகுதிகளை உள்ளடக்கிய முள்ளிக்குளம் கிராமம், கொண்டச்சியிலுள்ள தம்பப்பள்ளி மற்றும் மடு வீதியிலுள்ள பல பகுதிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன எனக் கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிய வருகின்றது.முள்ளிக்குளம் பிரதேசம் யுத்தம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்ட பின்னர் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மீள் குடியேற்றம் இதுவரை மறுக்கப்பட்டு இதன் கரையோரப் பிரதேசங்கள் கடற்படைத்தளமாக மாற்றப்பட்டுள்ளன. கொண்டச்சி பிரதேசம் மன்னார் மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கைக்குப் பெயர் பெற்றது. யுத்தகால நடவடிக்கையின் காரணமாக மரமுந்திரிகைச் செய்கை அங்கு மிகமோசமாக பாதிக்கப்பட்டதுடன் முற்றாக அழிக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் புனரமைப்பு என்ற போர்வையில் பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் முயற்சிகளே நடைபெறுகின்றன. இவ்வாறுதான் மடுவீதி மற்றும் மடுப்பிரதேசப் பகுதிகளில் பௌத்த விகாரைகள் விஸ்தரிப்பு, பெரும்பான்மைக் குடியிருப்புகள் ஆகியன தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரப் பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் பெரும்பான்மையின மக்களை குடியேற்றும் அரசின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் இது பாதகமான விளைவுகளையே எதிர்காலத்தில் உருவாக்கும்.தமிழ் மக்களின் மிகப் பெரும் பாரம் பரிய பிரதேசங்களில் ஒன்றான யாழ். குடாநாட்டில் அதிகாரத்திலுள்ளவர்களின் துணையுடன் பெரும்பான்மையினக் குடியேற்றம் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறே கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் யுத்தத்துக்கு பிந்திய காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோரால் கூட இதனை தட்டிக்கேட்க முடியாத நிலைமையே தொடர்ந்து காணப்படுகின்றது.அதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் முஸ்ஸிம் மக்களுக்குச் சொந்தமான பெருமளவான நிலப்பரப்புகள் பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன. இதனைக்கூட தட்டிக்கேட்க முடியாத நிலையிலேயே ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்ஸிம் அரசியல் வாதிகள் உள்ளனர் என்பதனையும் சுட்டிக்காட்டவேண்டும்.பெரும்பான்மை இன மக்களின் திட்டமிட்ட குடியேற்றம் தொடருமானால், மக்கள் போராட்டத்தினூடாக கிளர்ந்தெழுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக