23 ஏப்ரல் 2011

புலிகளின் தேவைக்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை என்கிறார் கோத்தபாய!

நான் நினைத்ததை செய்பவன்; எவரும் கருத்துக் கூறும்வரைப் பார்த்துக்கொண்டிருப்பவன் அல்ல என பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இரிதா லங்கா பத்திரிகையில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.செயலர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர் நீங்கள் ஏன் அது குறித்து கருத்து வெளியிட்டீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் உள்ள எவரும் பான் கீ மூனின் அறிக்கைக்கு எதிராக எதனையும் செய்ய முடியும். நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கைக்கு எதிராக விடுதலைப்புலிகளின் தேவைக்கு அமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை.யுத்தகாலத்தில் கூட விசேட பொறுப்புடன் செயற்பட்ட நாடு இலங்கை.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணாக தயாரிக்கப்பட்ட அறிக்கை என அண்மையில் ரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.பிரபாகரனின் தேவைதான் அறிக்கையில் உள்ளது. இலங்கையை அடிப்படைவாத பெளத்த நாடாக மாற்றப்போவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அத்துடன் விடுதலைப் புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.இதேவேளை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் கே.பி.யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான முன்னாள் பொறுப்பாளர் கே.பியை கடும் சிரமத்தின் மத்தியில் பிடித்து கைது செய்து,தடுப்புக்காவல் உத்தரவின் பெயரில் தடுத்து வைத்துள்ளோம்.அவ்வாறான ஒருவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக