17 ஏப்ரல் 2011

ரஷ்யா,சீனாவிடம் அடைக்கலம் கோரும் கோத்தபாய!

தனது உறுப்பு நாடான இலங்கையைப் பாதுகாக்க ஐ.நா. சபை தவறும் பட்சத்தில் ரஷ்யா சீனா போன்ற நாடுகளிடம் அடைக்கலம் கோர வேண்டிய நிலைமை ஏற்படலாம் என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஒரு சில நாடுகளின் மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் தனது அங்கத்துவ நாடொன்றுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு இவ்வாறான அறிக்கைகளை வெளியிட முனைப்பு காட்டினால், சீனா, ர'ஷ்யா போன்ற நாடுகளிடம் பாதுகாப்பு கோர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை மறைமுக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு சில நாடுகளினால் தமக்குத் தேவையான முறையில் பலாத்காரமாக கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. தனது அங்கத்துவ நாடொன்று என்ற வகையில் இலங்கைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஐக்கிய நாடுகளின் கடமையாகும். தவிரவும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு புரிந்துகொள்ளத் தவறியுள்ளது. விமானப்படை, கடற்படை மற்றும் தரைப் படைகளைக் கொண்டமைந்ததாக வலுவான படைக்கட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர். ஆனால் அவையெல்லாம் கவனத்திற்கொள்ளப்படாமல் சில மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தவறான தகவல் மூலங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த வலயத்திற்குள் நேரடி அனுபவத்தைக் கொண்டிருந்த உலக உணவுத் திட்டம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற முன்னணி தொண்டு நிறுவனங்களின் கருத்துக்களுக்கு நிபுணர் குழு முக்கியத்துவம் அளிக்கத் தவறியுள்ளது. இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள், பொதுமக்கள், அரசாங்க சொத்துக்களை இல்லாதொழிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் ஏராளம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இராணுவத்தினருடனான இறுதிக்கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதுடன், பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என களத் தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுவோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கட்டடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் சிறிதளவேனும் உண்மையில்லை என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக