
அராலி மத்தி, ஊரத்தி என்னும் இடத்தில் முன்பள்ளி, 3 ஆலயங்கள், பொதுநோக்கு மண்டபம் என்பன அமைந்துள்ள கேந்திர இடத்தில் ஈ.பி.டி.பி அமைப்பின் துணையோடு கள்ளுத்தவறணை ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த இடம் ஆலயங்கள் மற்றும் கல்விச்சாலை என்பன அமைந்துள்ள இடம் என்பதாலும், பொதுமக்களுக்கு இங்கு தவறணை அமைப்பதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படும் என்பதாலும் இத்தவறணையை கடற்கரையை அண்டிய பகுதியில் அமைக்குமாறு ஊர்மக்கள் கோரினர். இது குறித்து கிராம சேவையாளர், பிரதேச செயலர் ,அரச அதிபர் ஆகியோருக்கும் அவர்கள் முறையிட்டனர்.
அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத ஈ.பி.டி.பியினர் அவ்விடத்திலேயே தவறணை அமைப்பது என்ற முடிவில் விடாப்பிடியாக நின்று , கட்டடம் கட்டுவதற்காக கற்களையும் குறித்த காணியினுள் கொண்டு வந்தனர். இந்நிலையில் அவர்களின் அச்செயலுக்கு மக்கள் ஒன்றுதிரண்டு தம் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தம்மை எதிர்த்தால் அவர்கள் தேவையற்ற விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என ஈ.பி.டி.பியினர் அச்சுறுத்தினர். எனினும் " எம்மை நீங்கள் வெட்டிக் கொன்றாலும் பரவாயில்லை. உங்கள் அடாவடித்தனத்தால் எங்கள் கிராமம் அழிந்துபோக விடமாட்டோம்� என ஊர் மக்கள் தம் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து, அவ்விடத்துக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விரைந்து சென்று மக்களின் பிரச்சினை குறித்துக் கேட்டறிந்தார்.பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய சரவணபவன் எம்.பி தென்னிலங்கையில் ஒரு இடத்தில் இவ்வாறு மதுபான நிலையம் ஒன்றை அமைக்க முடியுமா? ஆனால் இங்கு 3 ஆலயங்கள் இருக்கும் புனிதமான இடத்தில் தவறணை அமைக்க ஒரு கட்சி கங்கணம் கட்டுகிறது. ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி நிகழும் இந்த அராஜகத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் மக்களின் போராட்டத்துக்கு இறுதிவரை நான் துணையிருப்பேன் என்று உறுதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக