26 ஏப்ரல் 2011

தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள கட்சிகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே .சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்தகாலச் சோக வரலாறு எமக்குத் தந்திருக்கும் மிக இறுக்கமான சந்தர்ப்பம் இது. கடந்த காலங்களைப் போலவே இந்தச் சந்தர்ப்பத்தையும் தவறவிடக்கூடாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர்.
நிபுணர் குழு அறிக்கையில் பொது மக்கள் இழப்புக்களுக்கான பிரதான குற்றவாளியாக இலங்கை அரசு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் இந்த விடயத்தில் குற்றவாளிதான். படுகொலைகளை நிறுத்துவதற்கு மத்திய அரசுக்குப் போதிய அழுத்தங்களைக் கொடுக்காத தமிழ்நாடு அரசும் குற்றவாளிதான். இந்தப் பட்டியல் இதனுடன் நின்றுவிடாது.
அது நீளும்போது ஈழத் தமிழர்கள் சிலரும் அதில் சேர்க்கப்படுவார்கள். அதனை நாம் விவரிக்க வேண்டியதில்லை. போர் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் அமைதியாக இருந்த மேற்கு நாடுகள், எமது மக்கள் நம்பிக்கை இழந்து போய் இருக்கின்ற இன்றைய நிலையில் போர்க் குற்றங்கள் குறித்து உரத்துப் பேசுகின்றன.
எனினும் அதனை நாம் வரவேற்கலாம். இந்த நிலையில் எம் முன்னால் உள்ள கேள்வி நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான். தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த விடயத்தில் ஒத்த கருத்துக்கும் அணுகுமுறைக்கும் வரவேண்டும். இதற்கான கோரிக்கையை நாம் பகிரங்கமாக விடுக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு தமிழ் மக்களுடன் அரசியல் ரீதியான உடன்பாட்டுக்கு வருவது நாட்டுக்கும் அரசுக்கும் மக்களுக்கும் நல்லது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக