22 ஏப்ரல் 2011

வன்னியில் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வரும் சிங்களப்படைகள்!

சிறீலங்காவில் போர் நிறைவுபெற்று இரு வருடங்கள் அண்மிக்கும் நிலையிலும் வன்னியில் மீள்குடியேறிய மக்கள் இராணுவ வலையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தொடர்ந்தும் இராணுவத்தினர் இளம் தமிழ் பெண்களை கூட்டமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திவருவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் 4 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அதன் செய்தித் தொகுப்பில் அண்மையில் வன்னி சென்று திரும்பிய அதன் ஊடகவியலாளர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வன்னியில் போர் நிறைவடைந்த பின்னரும் மக்கள் மீதான வன்முறைகள் தொடர்கின்றன. போரில் தப்பியவர்களே அதிக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர்.
அங்கு சென்ற எமது ஊடகவியலாளர் சில தகவல்களை படம் பிடித்தும் வந்துள்ளார். ஆனால் அவை சிறீலங்கா இராணுவத்தினருக்கு தெரியாது திரட்டப்பட்ட தகவல்கள், அவர்களின் கையில் அவை கிடைத்திருந்தால் தண்டனையின் அளவு விபரீதமாக இருந்திருக்கும்;.
வன்னியில் கிராமம், கிராமமாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் இராணுவத்தினர் தமது வசப்படுத்திவருகின்றனர். மக்கள் தமது வாழ்வுக்கு வேறு இடங்களை தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சிப் பகுதியில் 57 ஆவது படையணியின் தலைமையகம் உள்ளது. எங்கு பார்த்தாலும் இராணுவத்தனரையே காணமுடிந்துள்ளது.
தனது வீடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஏதுவுமற்ற ஒரு பிரதேசத்தில் தான் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தெரிவத்துள்ளார். அவரின் கணவர் போரில் கொல்லப்பட்டுவிட்டார்.
இடம்பெயர்ந்த மக்களில் பெருமளவானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு வேறு வீடுகள் வழங்கப்படவும் இல்லை.
மேலும் அங்கு வாழும் இளம் பெண்களை சிறீலங்கா இராணுவத்தினர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். தன்னை ஏழு இராணுவத்தினர் கூட்டமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்கான அவரின் அடையாளத்தை நாம் வெளியிடவில்லை. தனது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரே தன்னை இழுத்துச் சென்று இந்த வன்முறையை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்காவில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் பிரதிநிதி அலன் கீனனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அங்கு வாழும் தமிழ் மக்கள் மீது போர் முடிந்த பின்னரும் வன்முறைகள் தொடர்வதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி ஜொலந்தா போஸ்ரர் என்வரும் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக