09 ஜனவரி 2011

மகிந்தவை விட்டு விலகோம்!டக்ளஸ்,பிள்ளையான் தமிழ் அரங்கத்திலிருந்து வெளியேறினர்.

பத்துத் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இருந்து ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன வெளியேறியுள்ளன.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான சந்திப்பு ஒன்று நேற்று முன்தினம் இரவு தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இடம்பெறும் வீ.ஆனந்தசங்கரி, எம்.கே.சிவாஜிலிங்கம், த.சித்தார்த்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.இராசமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா), தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து பெரிய அளவிலான கூட்டமைப்பு அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதில் இணைந்து போட்டியிடுவீர்களா என அமைச்சர் டக்ளஸிடம் ஏனைய பிரதிநிதிகள் கேட்டனர்.
அரச தரப்புடன் இல்லாது வெளியில் அமையவிருக்கும் இந்தக் கூட்டணியில் இணைவதன் மூலம் அரசுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். இதை ஏற்கமறுத்த அமைச்சர் டக்ளஸ், அரசுடன் சேர்ந்தே தேர்தலில் போட்டியி டப்போவதாக தெரிவித்தார்.
டக்ளஸ் தேவானந்தாவின் அதேகருத்தை பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சிப் பிரமுகர்களும் தெரிவித்துவிட்டனர்.
தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இருந்து இவ்விரு கட்சிகளும் வெளியேற எடுத்த முடிவு மூலம் அரங்கம் பிளவுபட்டுவிட்டது எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
அதேவேளை, வெளியேறியுள்ள அரசாங்கத்தின் அங்கமாக விளங்கும் இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு எதிர்காலத்தில் இவ்வாறு தான் அமையும் என அரங்கம் ஆரம்பித்த காலத்திலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்வு கூறியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சித் திட்டமேயன்றி வேறொன்றுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக