30 ஜனவரி 2011

போர்க்குற்றத்தை மறைக்க ஸ்ரீலங்கா விளையாடும் விளையாட்டு அனைத்துலக கருத்தரங்கு!

சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கைகளை முறிடியடிக்கும் நோக்கிலேயே அனைத்துலக கருத்தரங்கை சிறிலங்கா இராணுவம் ஒழுங்கு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இறுதிகட்டப் போரில் சிறிலங்கா இராணுவம் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.
இது தொடர்பாக ஐ.நா நிபுணர்குழுவும் விசாரணைகளை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் இதுபோன்ற அழுத்தங்களை முறியடிக்கும் நோக்கிலேயே சிறிலங்கா இராணுவம் அனைத்துலக இராணுவக் கருத்தரங்கை நடத்த ஏற்பாடு செய்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
ஐ.நா நிபுணர்குழு போர்க்குற்ற விசாரணைகளை நடத்த முனையும் நிலையில் அனைத்துலக இராணுவக் கருத்தரங்கை சிறிலங்காவில் ஒழுங்கு செய்திருப்பது ஏன் என்று கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய,
“ இந்தக் கருத்தரங்கை நடத்த நாங்கள் மிகவும் தாமதமாகி விட்டது என்பதே எனது தனிபட்ட கருத்து. போர் முடிவடைந்தவுடன் இந்தக் கருத்தரங்கை நடத்தியிருக்க முடியும். அந்த வாய்ப்பை பயன்படுத்தியிருந்தால், போரில் என்ன நடந்தது என்று உலகத்துக்குத் தெரிந்திருக்கும்.
இந்தக் குற்றசாட்டுகளுக்கு நாம் முகம் கொடுத்திருக்க வேண்டி வந்திருக்காது. உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் விரைவில் தூக்கியெறியப்பட்டு விடும்.
அதற்காகவே அனைத்துலக தீவிரவாத முறியடிப்பு நிபுணர்களையும், களத்தில் செயற்பட்ட ஐ.நா அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இந்தக் கருத்தரங்கில் உண்மை நிலையைக் கூறுவதற்கு அழைத்துள்ளோம்.
இந்தக் கருத்தரங்கிற்கு 54 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்“ என்று அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக போர்க்குற்ற விசாரணை அழைப்புகள் தொடர்ச்சியாக அழுதங்களைக் கொடுத்து வருவதாலேயே புலிகளுக்கு எதிரான போரின் அனுபவங்களைப் பகிர்வதாகக் கூறி தமது பக்க குற்றச்சாட்டுகளை மறைக்கும் வகையிலான கருத்தரங்கிற்கு சிறிலங்கா அரசு ஒழுங்கு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக