வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலை பிற்போடவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதன் போது கூட்டமைப்பினரின் விளக்கங்களை கேட்டறிந்த தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்ட சம்பூர் வாக்காளர்கள் தொடர்பில் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டிய போது சம்பூர் என்ற இடம் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அது உயர்பாதுகாப்பு வலயம் என்ற போதிலும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியுடன் அங்கு வாழ்ந்த மக்கள் அங்கு சென்று வரலாம் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் சுமார் 3 லட்சம் பேர் வரையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இரட்டை பிரஜாவுரிமை இருக்குமானால், அவர்களும் தேர்தல்களில் வாக்களிக்கும் முறையை கொண்டு வரலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்.
இதனை ஆலோசிப்பதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், காங்கேசன்துறையில் அதியுயர் பாதுகாப்பு வலயம் இன்னும் அகற்றப்படாமை காரணமாகவே அங்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்காளர் பதிவுகள் திருப்பியனுப்பப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக