தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க ஒரு சொத்து என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சூரியப்பொங்கல் விழாவில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இன்று ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் சூரியப் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் டக்ளஸ் தேவானந்தா, புத்தசாசன பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன, வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிரி, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சில்வஸ்டர் அலன்ரின், முருகேசு சந்திரகுமார், அப்பாத்துரை விநாயகமூர்த்தி உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி தமிழிலேயே உரையாற்றினார். அதன் போது அவர் ஆற்றிய உரையின் சாரம்சம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.
வடபகுதி மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதி மிக்க ஒரு சொத்து. நாம் எந்தவொரு கட்டத்திலும் எமது மக்களைக் கைவிட மாட்டோம். நாட்டின் ஏனைய பகுதிகள் போன்றே சகல வளங்களும், வசதிகளும் கொண்ட பிரதேசமாக வடமாகாணத்தையும் அபிவிருத்தி செய்வோம். அதற்கான நோக்குடன் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதே வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டமாகும்.
வடக்கில் நாம் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட சிலர் முயற்சிக்கின்றனர். சர்வதேச மட்டத்தில் அது தொடர்பான போலிப் பிரச்சாரங்களை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். அதன் மூலம் எமது பணி முழுமையடையாமல் தடைப்பட்டுள்ளது உண்மைதான்.
ஆயினும் எந்தக் கட்டத்திலும் நாம் எமது அபிவிருத்தித் திட்டங்களை இடை நிறுத்த மாட்டோம். வடக்கின் கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி போன்றவற்றில் புரட்சியை ஏற்படுத்துவோம். உங்களுக்கோர் வளமான வாழ்வை ஏற்படுத்தித் தரவே நான் பாடுபடுகின்றேன். என்னை நம்புங்கள். நான் உங்களை வழிநடத்திச் செல்வேன்.
இனிமேல் இந்நாட்டில் பயங்கரவாதம் உருவாக நான் எந்தக் கட்டத்திலும் இடமளிக்க மாட்டேன். யாழ்ப்பாணத்திலும் தென் பகுதியிலும் உருவாகியிருக்கும் பாதாள உலகக் கும்பல்களையும் விரைவில் இந்நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டி விடுவேன்.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக நாம் பிரிந்து நிற்காது ஒரு தேசியக் கொடியின் கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதாகவும் அவர் தனதுரையில் வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக