11 ஜனவரி 2011

இலங்கையை சமஷ்டி நாடாக மாற்றியிருப்பேன்!

நாடாளுமன்றத்தில் இன்னும் 8 வாக்குகள் இருந்திருந்தால் இலங்கை சமஷ்டி நாடொன்றாக இருந்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள விசேட செவ்வியொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
'2000ஆம் ஆண்டில் தற்காலிகமாக நான் 6 மாதங்களுக்கு சர்வதிகாரியாக மாறியிருந்தால் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வந்திருப்பேன். அத்தோடு மீண்டும் ஜனநாயக முறைமைக்கு சென்றிருக்க வேண்டும்.
எனக்குப் பின்னர் சர்வாதிகாரம் வரும் என்று தெரிந்திருந்தால் நாட்டின் நன்மைக்காக நான் அதை செய்திருப்பேன்' எனக் கூறியிருக்கிறார். நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நான் மிகுந்த முயற்சியை எடுத்தேன், அதை எதிர்க்கட்சிகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் விரும்பவில்லை.
அப்போது எனக்கு 8 வாக்குகள் இருந்திருந்தால் நான் இலங்கையை சமஷ்டி நாடொன்றாக மாற்றியிருப்பேன். அதை அனைத்து தமிழ் மக்களும் விரும்பினார்கள்.
புலம்பெயர்ந்துள்ள மக்களும் வலியுறுத்தினார்கள். அதற்கு இப்பொழுது அவசியம் இல்லை ஏனென்றால் யுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
யுத்தம் முடிவடைந்துள்ள சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் கௌரவத்தையும், சுயமரியாதையையும் அளிக்கக் கூடிய ஏதாவது ஒன்று கொடுக்கப்பட வேண்டும்.
அது வெறும் பிரதேச சபைகள் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் முடிவுக்கு வந்து 18 மாதங்களின் பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கு வெறும் 8000 வீடுகளே நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சுனாமிக்கு பின்னர் 7000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தோம்.
சுனாமி ஏற்பட்டடு 11 மாதங்களில் நான் ஓய்வு பெறும்போது ஏறத்தாழ அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டிருந்தன.
யுத்தம் முடிவடைந்து 19 மாதங்கள் கடந்துள்ளன, எனினும் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை இதற்கு என்ன காரணம் என தெரியவில்லையனெ இலங்கையில் வெளியாகும் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக