ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு பான் கீ மூனின் பேச்சாளர் அலுவலகத்திடம் இன்னர்சிற்றி பிரஸ் மீளவும் மீளவும் வலியுறுத்திக் கேட்டிருந்தது.
குறிப்பாக கடந்த டிசம்பர் 17இல் , எதிர்வரும் ஜனவரி 14 இல் நிபுணர்குழுவானது இலங்கைக்குச் செல்லுமென பான் கீ மூன் அறிவித்திருந்தார். எனவே அது தொடர்பாக அதனைக் கூறுவதற்கு முன்னர் பான் கீ மூன் யாருடன் உரையாடியிருந்தார் அதற்கு என்ன பதில் கூறப்பட்டது என்பது குறித்து தினமும் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டிருந்தது.
இன்னர் சிற்றி பிரஸின் கேள்விகளுக்கு ஜனவரி 25 இல் ஐ.நா.வின் பேச்சாளர் பதிலனுப்பியிருந்தார். அதில் ஆலோசனைக் குழுவின் பயணத்திற்கான சாத்தியப்பாடு குறித்து நீங்கள் கேள்விகளை எழுப்பியிருந்தீர்கள். அது தொடர்பாக கூறுவதற்கு பின்வரும் விடயங்களை நாம் கொண்டிருக்கிறோம்.
கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட இலங்கையருடன் நிபுணர்குழு நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறது. அந்நிலையில், பயணமானது பயன்பெறக்கூடியதாக அமையும். ஆனால், அது அத்தியாவசியமானதல்ல. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை கூறுவதற்கு அந்தப் பயணம் அத்தியாவசியமானதாக இருக்கவில்லை. என அப்பதிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான கேள்வியுடன் சம்பந்தப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தரப்பினர்களுடன் நிபுணர்குழு நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பினால் அவர்கள் ஏன் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை பேட்டி காண்பதற்கு கோரிக்கை கூட விடுத்திருக்கவில்லை? அவர்கள் இருவரும் இந்த வாரம் அமெரிக்காவில் இருந்தார்களே? என்றும் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
முன்னதாக போரின் இறுதிநாட்களில் மோசமான போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்ற போதும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்குச் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருவதைக் கடுமையாகக் கண்டித்து சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
'போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றவை எவையோ அவற்றுக்குப் பொறுப்புச்சொல்லும் செயற்பாட்டை முன்னெடுக்க சிறிலங்கா மறுத்து வருவது பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்துவதாகவே அமைகிறது' என மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதிப் பணிப்பாளர் பியர்சன் குறிப்பிட்டிருந்தார்.
'நாட்டிலுள்ள ஊடகங்கள் மற்றும் மக்கள் அமைப்புக்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அடிப்படையில் நோக்குமிடத்து விடுதலைப் புலிகளுடனான போரில் தாங்கள் போர்க்குற்றங்களிலோ அன்றி மனித உரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை' என்று கூறும் சிறிலங்கா அரசாங்கத்தின் வாதம் கேள்விக்குறியாகிறது.
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படையினருக்கும் இடையிலான இறுதிப்போரில் பொதுமக்கள் எவரையும் அரச படையினர் கொல்லவில்லை என அரசாங்கத்தினர் கூறுகிறார்கள்.
இடம்பெற்றதாகக் கூறுப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேசத்;தினது குரல்கள் வலுவடைந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றினை கடந்த மே 2010ல் உருவாக்கியிருந்தார்.
போரின் இறுதி ஆண்டுகளில் இடம்பெற்றது என்ன என்பதை ஆராயும் பணி இவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் இது வெறும் கண்துடைப்பு முயற்சியே எனக்கூறி மனித உரிமைக் கண்காணிப்பகம் சிறிலங்காவினது முயற்சிகளை நிராகரித்தது.
'எவ்வாறிருப்பினும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆணைக்குழுவில் பல குறைபாடுகள் உள்ளன. ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் பக்கச்சார்பின்றியோ அன்றி சுதந்திரமாகவோ இதுவரை செயற்படவில்லை மற்றும் சாட்சியங்களுக்கான பாதுகாப்பு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அத்துடன் இந்தச் செயற்பாட்டுக்கு மிகவும் அவசியமான அரச அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய இராணுவத் தளபதிகள் வாக்குமூலங்களை மாத்திரம் ஆணைக்குழு அதிகம் நம்பிச் செயலாற்றுகிறது' எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
தமக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கும் ஊடகங்கள், மக்களமைப்புக்கள் மற்றும் எதிர்த் தரப்பினரை மௌனமடையச் செய்யும் முனைப்புக்களிலும் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது என மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம் சுமத்துகிறது.
இதன் விளைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செற்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து செய்திகளையும் ஆய்வுகளையும் வெளியிடுவதற்கு ஊடகங்கள் தயங்குகின்றன எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டு;கிறது.
'பல்வேறுபட்ட உரிமைகளையும் மதித்துச் செயற்படும் ஒரு கட்டமைப்பாக சிறிலங்கா அரசாங்கம் விரைவில் மாறும் என்ற நம்பிக்கை எமக்கில்லை' எனவும் பியர்சன் அதில் கூறுகிறார்.
'போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், சிறுபான்மையினரது துன்ப துயரங்கள் சரியாகத் தீர்த்து வைக்கப்படாவிட்டால் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் எதிரான அடக்குமுறை முடிவுக்குக் கொண்டு வரப்படாவிட்டால் சிறிலங்காவின் அரசாட்சி தொடர்பாக மகிந்தவும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் மாத்திரம்தான் மகிழ்வடைவார்கள் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக