17 ஜனவரி 2011

துரத்திச்செல்லப்பட்ட திருடன் கிணற்றில் வீழ்ந்தான்!

வீடொன்றில் திருடுவதற்காகச் சென்ற கும்பல் ஒன்றினைப் பொதுமக்கள் துரத்திச் சென்ற போது திருடன் ஒருவன் கால் தடுக்கிக் கிணற்றினுள் விழுந்ததனால் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டான். இச் சம்பவம் யாழ். சுண்டுக்குழி பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:
வீடொன்றில் திருடுவதற்காகச் சென்ற கும்பலைக் கண்டவுடன் வீட்டு உரிமையாளர் விழிப்படைந்து வீட்டைச் சுற்றி வெளிச்சங்களைப் போட்டதும் திருடர்கள் முன் வீட்டுக்காரர் தான் வந்திருப்பதாகவும், கதவைத் திறவுங்கள் எனவும் கூறியிருக்கின்றனர்.
குரலில் வேறுபாடு இருந்ததனால் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து அயலவர்கள் கூடி ஆரவாரத்துடன் வருவதைக் கண்ட திருடர்கள் அயலிலுள்ள காணி ஒன்றினூடாகத் தப்பியோட முயன்ற வேளையிலேயே அவர்களில் ஒருவன் வழி தவறிக் கிணற்றினுள் விழுந்திருக்கின்றான்.
சம்பவம் குறித்து, பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் திருடனைக் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தற்போது பரவாலாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களுடன் கைது செய்யப்பட்டவருக்குத் தொடர்புகள் இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக