18 ஜனவரி 2011

சுவிஸ் வங்கி கணக்குகளை வெளியிட விக்கிலீக்ஸ் தயாராகிறது!

சுவிஸ் வங்கியில் ரகசியமாக முதலீடு செய்திருப்பவர்களின் விவரங்களை விரைவில் வெளியிட விக்கிலீக்ஸ் இணையதளம் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இவ்வங்கியில் முதலீடு செய்பவர்களின் விவரங்களை ரகசியமாக வைப்பது வங்கியின் பாலிஸி என்பதால், உலகநாடுகளின் பெரும்பாலான தலைவர்கள் இவ்வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுப் பரவலாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா உட்பட பல நாடுகளின் ரகசிய விவரங்களை வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளம், தற்போது சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் விவரங்களை விரைவில் வெளியிட உள்ளது. ஜூலியஸ் பேயர் என்னும் பிரபலமான சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பிரபல நபர்கள் வைத்திருக்கும் ரகசிய முதலீட்டு விவரங்கள் அடங்கிய குறுந்தகட்டை (சி.டி.) விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜேயிடம் வழங்கியுள்ளார்.
லண்டனில் உள்ள "ஃபிரன்ட்லைன் கிளப்"பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜுலியன் அசான்ஜேயிடம் சுவிஸ் வங்கியின் முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர் அந்தக் குறுந்தகட்டை ஒப்படைத்தார். இதையடுத்து, ருடால்ஃப் எல்மருக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ஜே தனது பாராட்டைத் தெரிவித்தார்.
"இதன் மூலம் நிதி உலகின் நிழல் நடவடிக்கைகளை ஒழித்துக்கட்ட முடியும்" என்று அசான்ஜே குறிப்பிட்டார். "சி.டி.,யில் உள்ள தகவல்கள் ஆராயப்பட்டு விக்கிலீக்ஸ் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும்" என்றும் அவர் கூறினார். அமெரிக்கா உட்படபல நாடுகளின் ரகசிய செய்தி பரிமாற்றங்களை வெளியிட்டு வந்த விக்கிலீக்ஸ் இணையதளம், தற்போது சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக