21 ஜனவரி 2011

புங்குடுதீவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட உடலம் அடையாளம் காணப்பட்டது!

நல்லூர் ஆனந்தா வித்தியாலத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய துரைராஜசிங்கம் உத்தமகுமாரி (வயது 40) என்பவருடைய சடலமே புங்குடுதீவு முனைப்புலவில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் இவர் காணாமல் போயிருந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம் மிக மோசமாக அழுகிய நிலையில் காணப்பட்டதால் அதனை அடையாளம் காண முடியவில்லை. எனினும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அப்பெண்ணின் ஆடைகளைக் கொண்டு உறவினர்கள் சடலம் உத்தமகுமாரியுடையது என அடையாளம் காட்டினர்.உத்தமகுமாரி நல்லூர் ஆனந்தாக் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றி வந்தார்.
கடந்த நவம்பர் 16ஆம் திகதி வழமை போல் பணிக்குச் சென்ற அவர் பின்னர் காணாமல் போயிருந்தார் என்று உறவினர்கள் கூறுகின்றனர். பாடசாலை முடிந்து இரண்டு மணியளவில் அவர் வெளியேறி உள்ளதற்கான பதிவுகள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர். அவர் காணாமல் போனமை தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், புங்குடுதீவு முனைப்புலவில் பாழடைந்தகிணறு ஒன்றினுள் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட பொலிஸார், கல்லில் கட்டி கிணற்றினுள் போடப்பட்டிருந்த அப் பெண்ணின் ஆடைகளையும் மீட்டனர். யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த ஆடைகளை உறவினர்கள் நேற்று அடையாளம் காட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக