08 ஜனவரி 2011

என்னை மின்சாரக் கதிரையில் ஏற்ற முயல்கிறார்கள்!

போர்க் குற்றங்களுக்காக தன்னை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சியினரும், உதவி நிறுவனங்களும், வெளிநாட்டு சக்திகளும், புலிகளின் அனுதாபிகளும் முயற்சி செய்வதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடுவெலவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சில சக்திகள் எனக்கும் பிரதம நீதியரசருக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முனைகின்றன. நவம்பர் 19ம் திகதி நடந்த பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர் பிரதம நீதியரசரை நான் சந்திக்கவேயில்லை. அப்படியிருக்கும் போது எங்களுக்குள் எப்படி பிரச்சினை வந்தது.
குறிப்பிட்ட சில எதிர்க்கட்சிக் குழுக்கள், உதவி நிறுவனங்கள், வெளிநாட்டு சக்திகள், புலிகளின் ஆதரவாளர்கள் போன்றோர் எனதும் சிறிலங்காவினதும் பெயரைக் கெடுக்கும் நோக்கில் செயற்படுகின்றனர். இவர்கள் என்னை போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மின்சாரக் கதிரைக்குக் கொண்டு போக விரும்புகிறார்கள்.
சிறிலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை வழங்கக் கூடாது என்றும் வெளிநாட்டு வங்கிகள் கடனுதவிகளை வழங்கக் கூடாது என்றும் இவர்கள் கோருகின்றனர். சிறிலங்கா தோல்வியடைந்த நாடு என்று காட்டுவதற்கும், இங்குள்ள ஆட்சியாளர்கள் அனைத்துலக சட்ட திட்டங்களை மீறும் வகையில் செயற்படுவதாகவும் இவர்கள் பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர். என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக