31 ஜனவரி 2011
ஸ்ரீலங்காவில் ஊடக அடக்குமுறை மீண்டும் பகிரங்கப்படுத்தபட்டுள்ளது!
லங்காஈநியூஸ் அலுவலகம் இன்று (31) அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் எரியூட்டப்பட்டுள்ளது. இந்தத் தீயினால் லங்காஈநியூஸ் அலுவலத்தின் பிரதான பதிவேற்றல் கணனிக் கட்டமைப்பு முற்றாக அழிந்துள்ளது. அத்துடன் பெறுமதிமிக்க நூலகமும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இணையத்தளத்தின் அலுவலகம் இயங்கிவந்த கட்டிடம் பயன்படுத்த முடியாதளவில் தீயினால் அழிந்துள்ளது.
பெற்றோல் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தியே இந்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. தீபிடித்ததை அடுத்து குண்டு வெடிப்பதைப் போன்று சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு பிரதேசவாசிகள் விழித்தெழுந்து தீயை அணைக்க முயற்சித்த போதிலும் அதுவரை தீயினால் ஏற்பட்ட சேதத்தைக் குறைக்க முடியாது போனது.
பிரதேசவாசிகள் காவல்துறையின் அவசர அழைப்புப் பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து லங்காஈநியூஸ் ஆசிரியர், கொஸ்வத்த காவல்துறையின் பொறுப்பதிகாரி உபுல் பெரேராவிடம் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளதுடன் கட்டிடத்தின் உரிமையாளர்களும் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்று (30) இனந்தெரியாத இரண்டு நபர்கள் இணையத்தளம் அலுவலகம் அமைந்துள்ள பிரதேசத்தில் நடமாடித்திரிந்துள்ளனர். அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்து அலுவலகத்திற்கு எதிரிலுள்ள தேனீர் கடையில் விசாரித்தறிந்துள்ளனர்.
தற்போதைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஊடகங்களுக்கெதிரான அடக்குமுறையினால் சண்டே லீடர் ஆசிரியர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், ஊடக ஊழியர்கள் என 13 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தவிர உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதுடன் அவரின் கால் உடைக்கப்பட்டது.
லங்காஈநியூஸ் ஊடகத்தின் அரசியல் பத்தி எழுத்தாளர் காணாமல் போகச் செய்யப்பட்டார். சிரச ஊடக வலையமைப்பு தீவைக்கப்பட்டு, க்ளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
உதயன் பத்திரிகையின் அலுவலகம் தீ வைக்கப்பட்டது, அதில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள், கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் லங்காஈநியூஸ் அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட தீ, ஊடக ஒடுக்குமுறையின் மற்றுமொரு கரும்புள்ளியென ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக